Published : 11 Aug 2014 12:00 AM
Last Updated : 11 Aug 2014 12:00 AM
கதக் என்றால் நடனத்தின் மூலம் கதை சொல்வது என்று பொருள். பிரபலமான புராண, இதிகாசக் கதைகளைக் கை மற்றும் கண் அசைவுகள் மூலம் ரசிகர்களுக்குப் புரிய வைப்பது இக்கலையின் முக்கிய அம்சம். இது வட இந்தியாவில் உருவான எட்டு இந்தியப் பாரம்பரிய நடன வடிவங்களில் முக்கியமானது.
நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த இக்கலை, கிராம மையப் பகுதிகள் மற்றும் கோயில் முற்றங்களில் பாணர்களால் நடத்தப்பட்டதாம். கதைகளைப்
புரிய வைப்பதற்காக, இசை கருவியொலி, வாய்ப்பாட்டு, கால் சதங்கை ஒலி ஆகியவற்றுடன் புது நடையிலான கை அசைவுகளைப் பாவனையாகப் பயன்படுத்துவார்கள். அரங்கம் முழுவதும் சுற்றிச் சுழன்று ஆடி, தாளக் கதியுடன் ஒன்றி ஆடுவார்கள்.
தபலாவின் தாளம் `சாம்’ என்று நிறுத்தப்படும் கணமும், நாட்டிய மணியின் நடன நிறுத்த கணமும் ஒரே நேரத்தில் நிகழ்வது ரசிகர்களைப் பரவசமூட்டும்.
பெர்சிய மற்றும் மத்திய ஆசிய நடனத்தின் சில குறிப்பிட்ட அம்சங்களை உள்வாங்கிக்கொண்டதுதான் இந்நடனத்தின் ஒயிலான அழகுக்குக் காரணம்.
கதக் என்னும் பெயர் சமஸ்கிருத வார்த்தையான கதாவிலிருந்து உருவானது. அதற்குக் கதை என்று பொருள். சமஸ்கிருதத்தில் கத்தாக்கா என்றால் கதை சொல்லுபவர். இதுவும் கதகளியும் வெவ்வேறு.
தன்னைத்தானே மீட்டெடுத்துக் கொண்டதுதான் இன்றைய கதக். அரசவை நிகழ்வுகள், காதல் அம்சங்கள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பொருளாகக் கொண்டு இந்நடன அசைவுகள் அமைக்கப்படுகின்றன. மஹராஜ் குடும்ப நடனக் கலைஞர்களான அச்சன் மஹராஜ், ஷம்பு மஹராஜ், லச்சு மஹராஜ், பிர்ஜு மஹராஜ் ஆகியோர் பல தலைமுறைகளாக இந்நடன முறையைப் பரப்பி வருகின்றனர்.
நடிகர் கமலஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தில் கதக் நடன அசைவுகள் சிலவற்றை நிகழ்த்திக் காட்டியிருப்பார். இதனை வடிவமைத்தது பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மஹராஜ்.
உயர்தரமான கதக் நடனத்தை ஒரு முறை பார்த்துவிட்டால் உள்ளம் பறிபோகும். மறுமுறை எப்பொழுது பார்ப்போம் என்று மனம் ஏங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT