Published : 12 Aug 2024 08:44 AM
Last Updated : 12 Aug 2024 08:44 AM

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம்! - ‘அக்வாகனெக்ட்’ நிறுவனர் & சிஇஓ ராஜமனோகர் பேட்டி

ராஜமனோகர்

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி.. 18 | உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா 3-வது பெரிய நாடாக உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 1.4 கோடி டன் மீன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவற்றில் 30 சதவீதம் மட்டுமே கடலிலிருந்து வருகின்றன. 70 சதவீதம் பண்ணை மற்றும் குளத்திலிருந்து வருகின்றன. அதாவது, நாம் சாப்பிடும் மீன்களில் மூன்றில் ஒன்று மட்டும்தான் கடலிலிருந்து வருகிறது. மீதமுள்ள இரண்டு பண்ணைகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் மிகப் பெரும் சந்தை வாய்ப்பைக் கொண்டதாக மீன்வளத் துறை திகழ்கிறது. எனினும், அது இன்னும் முறைப்படுத்தப்படாத துறையாகவே உள்ளது.

இந்நிலையில், தொழில்நுட்ப உதவியுடன் இத்துறையை நவீனப்படுத்தி வருகிறது அக்வாகனெக்ட் (aquaconnect). 2017-ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட அக்வாகனெக்ட், மீன் பண்ணைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதன் வழியே நிதி உதவி, மீன் வளர்ப்புக்குத் தேவையான உணவு பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ஒடிசா, அசாம் என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் அக்வாகனெக்ட், மீன்வளத் துறையில் இந்தியாவின் கவனிக்கத்தக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ராஜமனோகர் சோமசுந்தரம் (44) அக்வாகனெக்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ. தற்செயலாக தொழில்முனைவில் இறங்கியவர், இன்று ரூ.500 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார். அவரது தொழில்முனைவுப் பயணத்துக்குப் பின்னிருக்கும் கதை என்ன? உரையாடினேன்…

உங்கள் இளமைப் பருவம், முதல் வேலை பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?

என்னுடைய சொந்த ஊர் சிதம்பரம். அப்பா ஆடிட்டர். அம்மா பள்ளி ஆசிரியை. நான் படித்தது உள்ளூரில் தமிழ்வழிக் கல்விதான். மிகவும் நன்றாக படிக்கக்கூடிய மாணவன். பள்ளி, கல்லூரி காலகட்டத்தில் பெரிய கனவுகள் கிடையாது. நான் எதை செய்கிறேனோ அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் அப்போது எனக்கு இருந்தது.

நான் மருத்துவராக வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். ஆனால், மதிப்பெண் சற்று குறைந்ததால், எனக்கு இடம் கிடைக்காமல் போனது. இதனால், கட்டிடவியல் பொறியியல் எடுத்தேன். கல்லூரி படிக்கும்போது மேற்படிப்புக்கு ஐஐடிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதற்கு தயாராக ஆரம்பித்தேன். நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றேன். ஐஐடி கான்பூரில் இடம் கிடைத்தது.

எனக்கு நவீன தொழில்நுட்பங்கள் மீது ஆர்வம் இருந்தது. இதனால், கட்டிடவியல் படித்திருந்தாலும், பெங்களூருவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

2007-ம் ஆண்டு - அதாவது கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்த 4 ஆண்டுகளில் - உங்களது முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஹெக்ஸாலேப்ஸ்’ (hexolabs) ஆரம்பித்துவிட்டீர்கள். தொழில்முனைவை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

நான் தொழில்முனைவை நோக்கி வந்தது மிகவும் தற்செயல்தான். நண்பர் ஒருவர் சொந்தமாக ஸ்டார்ட்அப் தொடங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் அதில் படிப்படியாக ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. நான் தொழில்நுட்பப் போக்குகளை ஆழ்ந்து கவனித்துவருபவன் என்ற நிலையில், அது சார்ந்த தொழில்வாய்ப்புகளை அலச ஆரம்பித்தேன்.

மொபைல்போன் பரவலாக அறிமுகமாக ஆரம்பித்த காலகட்டம் அது. அந்த சமயத்தில் கறுப்பு வெள்ளை மொபைல்தான் புழக்கத்தில் இருந்தது. இணைய வசதி கிடையாது. நீங்கள் இப்போது நைல் நதி பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், என்ன செய்வீர்கள்? கூகுளில் தேடுவீர்கள். அது உங்களை விக்கிப்பீடியா பக்கத்துக்கு அழைத்துச் செல்லும் இல்லையா. 20 ஆண்டுகளுக்கு முன்னால், உங்கள் கையில் ஸ்மார்ட்போன் கிடையாது, இணையம் கிடையாது. என்ன செய்வீர்கள்? என்சைக்ளோபீடியா புத்தகத்தில்தான் தேட வேண்டும் இல்லையா. மொபைல்போன் வாடிக்கையாளர்கள், மெசேஜ் சேவை மூலம் தங்களுக்குத் தேவையான இத்தகைய விவரங்களை பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோம்.

எஸ்எம்எஸ் விக்கி ஐடியா உதயமானது. இதற்கென்று ஒரு சாட்பாட்டை உருவாக்கினோம். நீங்கள் நைல் என்று மெசேஜ் அனுப்பினால், நாங்கள் உருவாக்கிய சாட்பாட், விக்கிப்பீடியா பக்கத்தில் நைல் நதிப் பற்றிய விவரங்களைத் தேடி அதை சுருக்கமாக அனுப்பும். இதுதவிர்த்து திறன் மேம்பாட்டு கேம்கள், காலர் டியூன் சேவை வழங்கவும் திட்டமிட்டோம். 2007-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டு நான் ஸ்டார்ட்அப் தொடங்கிவிட்டேன். நண்பர் சில மாதங்கள் கழித்து இணைவதாகக் கூறி இருந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் கடைசி வரையில் வரவே இல்லை. இதனால், நானே நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தேன்.

2017-ம் ஆண்டு அக்வாகனெக்ட் நிறுவனத்தை தொடங்கினீர்கள். அதுவரையில், மொபைல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கிவந்த நீங்கள், எப்படி சம்பந்தமே இல்லாத மீன்வளத் துறையில் கால்பதித்தீர்கள்? என்ன சவால்கள் உங்கள் முன் இருந்தன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்களிடம் அதிகரித்துவந்த நிலையில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் வழியாக, மக்களின் சவால்களை தீர்க்கும் விதமாக மென்பொருள் டெவலப்பர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகிவந்தன. இதனால் தொலைதொடர்பு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து. ஆப்சர்வீஸ் நிறுவனங்கள் கோலோச்ச தொடங்கின. ஹெக்ஸாலேப்ஸ் நிறுவனத்தின் சேவை தொலைத்தொடர்பு நிறுவனங்களை சார்ந்து இருந்தது. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹெக்ஸாலேப்ஸின் வளர்ச்சி குறையும் என்பதை கணித்தேன்.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், எங்களைப் போன்று வேல்யூ ஆடட் சேவையைத்தான் வழங்கிக்கொண்டிருந்தது. தொழில்நுட்பப் போக்கை கணித்த அந்நிறுவனம், மொபைல் பேங்கிங் சேவைக்கு மாறியது. எங்களால், அந்த சமயத்தில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக, வேறு துறையில் புதிய ஸ்டார்ட்அப் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எழத்தொடங்கியது.

இதனிடையே ஒரு ரயில் பயணத்தின்போது மீன் பண்ணையாளர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. இந்தியாவின் மீன் உணவு சந்தை குறித்து அவர் கூறிய தகவல் எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இந்தியாவின் மீன் உணவு சந்தையின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி. ஆண்டுக்கு 10 சதவீதம் வளர்ச்சியடையும் துறை அது. அந்த சமயத்தில், வேளாண் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வந்தன. ஆனால், மீன்வளத் துறையில் சொல்லிக்கொள்ளும் வகையில் ஸ்டார்ட்அப்கள் இல்லை. நாம் இதில் களம் இறங்கலாம் என்று முடிவு செய்தேன்.

என்னைப் பொறுத்தவரையில், தொழில்நுட்பம் தானாக உலகை முன்னகர்த்திச் செல்வதில்லை. அது ஒரு கருவிதான். அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம். மீன்வளத் துறையில் என்ன பிரச்சினை இருக்கிறது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதை எப்படித் தீர்க்கலாம் என்பதை ஆய்வு செய்ய ஆரம்பித்தேன்.

மீன்வளத் துறையில் மூன்று தரப்பு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒன்று, மீன் பண்ணை வைத்திருக்கும் விவசாயி. இரண்டாவது அந்த விவசாயிகளுக்கு மீன் வளர்ப்புக்குத் தேவையான உணவுகள், மருந்துகளை விற்பனை செய்பவர்கள். மூன்றாவது, விவசாயிகளிடமிருந்து மீனை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பவர்கள்.

ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது என்பது புலப்பட்டது. அதற்கான தீர்வுகளை உருவாக்க ஆரம்பித்தோம். உதாரணத்துக்கு, மீன் வளர்ப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை ரீடெய்லர்களுக்கு வழங்குவது, அவர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் தேவையான நிதி உதவியை நிதி நிறுவனங்கள் மூலம் பெற்றுத் தருவது, வளர்ப்பு சார்ந்த ஆலோசனைகள், வளர்க்கப்பட்ட இறால்கள், மீன்களை விற்க வழி செய்வது உள்ளிட்ட சேவைகளை வழங்க ஆரம்பித்தோம்.

மீன்வளத் துறையை முறைப்படுத்த வேண்டுமென்றால், அதற்கான தொழில்நுட்பக் கட்டமைப்பு அவசியம் என்பதை உணர்ந்தேன். இந்தியாவில் இருக்கக்கூடிய மீன் பண்ணைகளில் என்னென்ன மீன்கள் இப்போது வளர்ந்துகொண்டிருக்கின்றன, எப்போது அவை விற்பனைக்கு தயாராகும் என எல்லாவற்றையும் கணிக்கும் வகையில்செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்கினோம். இத்துறையில் இது ஒரு முன்னோடி தொழில்நுட்பமாக அமைந்தது.

இந்தப் பயணத்தில் நீங்கள் புரிந்துகொண்ட விஷயம் என்ன?

நாம் தேர்ந்தெடுக்கும் பிரச்சினைக்கு சரியான தீர்வை உருவாக்கிவிட்டால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நம் தயாரிப்பு முக்கியத்துவம் பெற்றுவிடும். அதை விற்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை.

முந்தைய அத்தியாயம்: ஜாலியாக ஆரம்பித்த ஸ்டார்ட்அப் ரூ.30,000 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாறிய கதை - Chargebee சிஇஓ கிரிஷ் சுப்ரமணியன் பேட்டி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x