Published : 15 May 2018 11:36 AM
Last Updated : 15 May 2018 11:36 AM
தொண்ணூறுகளில் இணையதளங்கள் விசிட்டிங் கார்டின் சற்று நீண்ட வடிவமாகவே இருந்தன. பெரும்பாலான இணையதளங்கள் அன்று ஒரே மாதிரியான வடிவம், ஒரே மாதிரியான வண்ணம் எனச் சலிப்பூட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தன.
இணையதளத்தின் திறனும் அதன் பயனும் தாக்கமும் உணரப்படாத காலம் அது. ஆன்லைன் வர்த்தகம் அப்போது பேசுபொருளாக இருந்தாலும், அதைப் பெரிதாக முன்னெடுத்துச் செல்ல எந்தப் பெரிய நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. மேலும், இணையதளங்களால் பெரிய பலன் இல்லாததால், வாடிக்கையாளர்கள் அதற்காகப் பெரிதும் மெனக்கெடவில்லை.
இணையதள வடிவமைப்பாளர்களும் வெறும் HTML-க்குள் தங்கள் திறனைச் சுருக்கிக்கொண்டார்கள். சிலர் மட்டும் தங்கள் திறனைத் தம்பட்டம் அடிப்பதற்கு CSS-ஐப் பொது வடிவமைப்புக்குப் பயன்படுத்தினார்கள். இன்னும் சிலர் Flash போன்ற அனிமேஷன்களின் மூலம் ஜிகினா காட்டினார்கள்.
ஆனால், இன்று எல்லா இணையதளங்களும் மென்மையான வண்ணங்களுடன் மெல்ல மறைந்து விரியும் படங்களுடன் சுவராசியமான தகவல்களுடன் ஆச்சரியமூட்டும் வடிவமைப்புடன் கண்களையும் கவனத்தையும் ஈர்க்கின்றன. அதற்குக் காரணம், ஜாவா ஸ்கிரிப்ட் எனும் புரோகிராமிங் லாங்குவேஜ் இணையத்தில் ஏற்படுத்திய மாற்றம்.
ஜாவா ஸ்கிரிப்ட் என்பது என்ன?
ஜாவா தெரியும், அது என்ன ஜாவா ஸ்கிரிப்ட், ஒருவேளை இது ஜாவா புரோகிராமிங் மொழியின் ஒரு பிரிவாக இருக்குமோ என்று எல்லாம் நினைக்க வேண்டாம். அவை இரண்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
ஜாவா ஸ்கிரிப்ட் ஒரு தனி புரோகிரமிங் லாங்குவேஜ். இணையத்தில் உள்ள பெரும்பாலான இணையதளங்களின் திறனுக்குப் பின் இருக்கும் மொழி இதுதான். இது மற்ற கணினி மொழிகளைவிட எளிதானது. படிப்பதற்கு மட்டுமல்ல, எழுத, கட்டமைக்க, நிறுவ உள்ளிட்டவைக்கும் தோதானது.
வெப் சர்வருக்கும் வெப் பிரவுசருக்கும் இடையே ஊடாடி வெப் பிரவுசரில் இணையதளத்தை விரிவடையச் செய்யும் இதன் செயல்திறன் நம் கற்பனைத் திறனுக்குச் சவால்விடும்.
உருவான கதை
வெப் பிரவுசர் என்றாலே இன்று நினைவுக்கு வருவது ‘கூகுள் குரோம்’, ‘மோஸிலா ஃபயர்ஃபாக்ஸ்’, ‘ஆப்பிள் சபயர்’, ‘இண்டர்நெட் எக்ஸ்புளோரர்’ போன்றவைதான். ஆனால், நீங்கள் எவ்வளவு யோசித்தாலும், நெட்ஸ்கேப் எனும் வெப் பிரவுசர் நினைவுக்கு வராது. 1994-ல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த அந்த நெட் ஸ்கேப்-ஐ வெப் பிரவுசர்களின் முன்னோடி எனலாம்.
நெட்ஸ்கேப் பெற்ற அபரிமிதமான வரவேற்பு பில்கேட்ஸ் கண்ணை உறுத்தியதன் வெளிப்பாடே ‘இண்டர்நெட் எக்ஸ்புளோரர்’. 1990-களில் நெட்ஸ்கேப்-க்கும் மைக்ரோசாப்ட்-க்கும் இடையே பெரும் பிரவுசர் யுத்தம் நடந்தது. அந்தப் போட்டியின் விளைவாகத் தோன்றியதே ஜாவா ஸ்கிரிப்ட்.
நெட்ஸ்கேப் முதலில் அறிமுகப்படுத்திய இந்த புரோகிராமிங் லாங்குவேஜின் பெயர் ‘லைவ் ஸ்கிரிப்ட்’ (LiveScript). அந்தக் காலகட்டத்தில் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் அறிமுகப்படுத்திய ஜாவா லாங்குவேஜ் மிகப் பிரபலமாக இருந்ததால், நெட்ஸ்கேப் தனது லைவ் ஸ்கிரிப்ட்-ஐ ஜாவா ஸ்கிரிப்ட் என்று மாற்றியது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு பில்கேட்ஸ் சும்மா இருப்பாரா? அவரும் போட்டியில் குதித்துத் தன் பங்குக்கு வெளியிட்ட லாங்குவேஜ்-ன் பெயர் ‘ஜே ஸ்கிரிப்ட்’ (Jscript).
முதலில் ஜாவா ஸ்கிரிப்ட்-ஐ யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டின் முழுத் திறனையும் வெளிக்கொண்டுவந்த பெருமை கூகுளைத் தான் சாரும். 2005-ல் கூகுள் இந்த ஜாவா ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி கூகுள் மேப்பை வெளியிட்டு, ஜாவா ஸ்கிரிப்ட்டால் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்டியது. அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு. கொஞ்சம் முயன்றால் நீங்களும் அந்த வரலாற்றில் பங்கேற்று உச்சம் தொடலாம்.
எங்கே படிக்கலாம்?
இது படிப்பதற்கு மிகவும் எளிதானது. கணினியில் முறையான தேர்ச்சி பெறாதவர்கள்கூட ஒரு மாதத்துக்குள் படித்துவிட முடியும். அதையும் முழுமையாகப் புரிந்து படிக்கக் கீழே உள்ள இலவச இணைய வகுப்புகள் உதவும்.
https://www.w3schools.com/js/default.asp
https://www.codecademy.com/learn/introduction-to-javascript
http://www.learn-js.org/
https://www.codeschool.com/learn/javascript
https://javascript.info/
https://www.edx.org/learn/javascript
https://www.lynda.com/JavaScript-training-tutorials/244-0.html
https://www.udemy.com/learn-javascript-online/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT