Last Updated : 09 Aug, 2024 09:21 AM

 

Published : 09 Aug 2024 09:21 AM
Last Updated : 09 Aug 2024 09:21 AM

சூர்யாவுடன் மோதும் துருவா சர்ஜா!


கன்னட சினிமாவில் சுதீப், யாஷ் ஆகிய சீனியர் மாஸ் ஹீரோக்களுக்கு சவால் கொடுக்கும் விதமாகப் பல ஜூனியர்கள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுனின் சகோதரி மகனான துருவா சர்ஜா. தொடக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த இவர், அதிரடி ஆக்‌ஷன் வேடங்களில் திறமையைக் காட்டினார். இப்போது கன்னட ரசிகர்கள் இவரை ‘ஆக்‌ஷன் பிரின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இவரது நடிப்பில் தற்போது 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உதய் கே. மேத்தா தயாரித்துள்ள பன்மொழித் திரைப்படம் ‘மார்ட்டின்’. இப்படத்துக்கு ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஏ.பி.அர்ஜுன் இயக்கியிருக்கிறார். பாகிஸ்தானின் ராணுவச் சிறையில் இருக்கும் ஒரு முரட்டு இந்தியனாக துருவா சர்ஜா நடித்திருக்கிறார்.

இப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அதில் அர்ஜுன், துருவா, கதாநாயகிகள் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ட்ரைலர் வெளியீட்டுக்குப் பின் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் படக் குழுவினர் பதில் அளித்தனர்.

தயாரிப்பாளர் உதய் கே.மேத்தா, துருவா சர்ஜா, வைபவி, அர்ஜுன், இயக்குநர் ஏ.பி.அர்ஜுன்

தயாரிப்பாளர் பேசும்போது: “கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய இந்திய மொழிகளோடு அரபு, ஜப்பான், சீனம், ரஷ்யன், ஸ்பானிஷ், கொரியன் உள்ளிட்ட அந்நிய 13 மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடுகிறோம். அதற்காகவே படம் வெளியாகவிருக்கும் நாடுகளிலிருந்து பத்திரிகையாளர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறோம். ஒரு இந்தியப் படத்துக்குச் சர்வதேசப் பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பது இதுவே முதல் முறை. இது பான் இந்திய சினிமா அல்ல; பான் வேர்ல்ட் சினிமா” என்றார்.

படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதியிருக்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் பேசும்போது: “துருவாவின் உடன் பிறந்த அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவைத்தான் நான் சினிமாவுக்காகத் தயார் செய்தேன். ஆனால், நான் எதிர்பார்க்காத அளவில் துருவாவை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அதற்குக் காரணம் அவர் ஒரு சுயம்பு. தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட ஏகலைவன். ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக அவரிடம் எதிர்பார்க்கிறார்கள்.அதனால் சர்வதேசத் தன்மையுடன் இந்தக் கதையை எழுதினேன். மொழிகளைக் கடந்து இக்கதாபாத்திரமும் அது செய்யும் ஆக்‌ஷனும் ரசிகர்களைக் கவரும்” என்றார். நாதன் ஜோன்ஸ், ஆரஸ் ஷா போன்ற ஹாலிவுட் குத்துச் சண்டை வீரர்கள் இப்படத்தில் துருவாவுடன் நடித்திருக்கிறார்கள்.

சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படமும் ‘மார்டின்’ படமும் ஒரே சமயத்தில் வெளியாவது பற்றி துருவாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு “சூர்யாவின் படம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதல் நாள் கங்குவா பாருங்கள். 11ஆம் தேதி எனது படம் வெளியாகிறது, அடுத்துநாள் அதைப் பாருங்கள்” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். “ கங்குவா, மார்டின் ஆகிய இரண்டு படங்களின் வெளியீட்டு தேதியும் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் போட்டி என்று எதுவும் இல்லை; நானோ, சூர்யாவோ நட்சத்திரங்களை விட திரையுலமே பெரியது” என்று பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x