Published : 07 Aug 2024 06:45 AM
Last Updated : 07 Aug 2024 06:45 AM
ஏதோ யோசித்தபடி ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பெரிய ஆல மரத்தைக் கண்டேன். எவ்வளவோ மரங்களைப் பார்த்திருக்கிறேன். ஏன், அதே மரத்தையே பலமுறை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், அன்று ஓர் அதிசயம்போல் அது எனக்குக் காட்சியளித்தது.
என்னால் கண்களை வேறு எங்கும் நகர்த்த முடியவில்லை. ஆயிரம் பச்சை இலைகளும் வா, வா என்று என்னை அழைத்தன. ஓர் இலை அழைத்தாலே ஓடிச் செல்வேன். மொத்த மரத்தின் இலைகளும் கை அசைத்து அழைக்கும்போது மறுக்க முடியுமா? அப்படியே அமர்ந்தேன். என் களைப்பை எல்லாம் ஒரே கணத்தில் உறிஞ்சிக்கொண்டது காற்று.
“என்ன தாகூர், ஏதோ பலமான சிந்தனை போல இருக்கிறதே” என்றது மரம்.
“ஆமாம், வெகு காலமாக எனக்கு ஒரு கனவு. இரவு பகலாக அது குறித்தே சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு புதிய பள்ளிக்கூடம். வழக்கமான இன்னொரு பள்ளிக்கூடமாக இல்லாமல், எல்லா வகையிலும் தனித்துவத்தோடு, இப்படியும் இருக்க முடியுமா என்று எல்லாரும் வியக்கும்படி அது இயங்க வேண்டும்.
வகுப்பு, மனப்பாடம், வீட்டுப்பாடம், தேர்வு, மதிப்பெண் என்று சுருங்கிவிடக் கூடாது. என் பள்ளிக்குள் நுழையும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய மனிதராக வெளியே வர வேண்டும். பெயர்கூட வைத்துவிட்டேன், சாந்தி நிகேதன். எனது பள்ளிக்கூடம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டம்தான் இன்னும் தயாராகவில்லை. அது குறித்துத்தான் இரவு பகலாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் தாகூர்.
“ஓ” என்றது மரம். “ஒரு மனிதனுக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவில்லை. ஆனால், உலகம் தோன்றிய நாள் முதல் நான் இங்கே இருக்கிறேன். உலகில் இதுவரை தோன்றிய எல்லா மனிதர்களையும் நெருக்கமாகக் கண்டிருக்கிறேன். அவர்கள் உருவாக்கிய எல்லாப் பள்ளிக்கூடங்களையும் தொலைவிலிருந்து பார்த்திருக்கிறேன். உங்கள் கனவை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் கவலைகளும் புரிகின்றன. எனக்குத் தெரிந்ததைச் சொல்லவா?”
“ஓ...”
“ஒவ்வொரு குழந்தையும் ஒரு புதிய இலைபோல் இந்த உலகில் முளைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் கற்றுக்கொண்டு பெரிதாக வளர்ந்து நிற்கிறது. ஒரு சிறிய இலையைப் பெரிய இலையாக மாற்ற எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. என் வேலை முடிந்தது, கிளம்பிப் போ என்று அனுப்பிவிடுகிறார்கள். அந்த இலை அங்கும் இங்கும் சென்று, அலைகழிந்து, பழுப்பு நிறத்துக்கு மாறி ஏதோ ஓரிடத்தில் சுருண்டு படுத்துவிடுகிறது.
“உங்கள் சாந்தி நிகேதன் ஒரு நல்ல மரம்போல் இருக்க வேண்டும் என்பேன். முளைக்கும் ஒவ்வோர் இலையையும் மரம்போல் உங்கள் பள்ளிக்கூடம் வாஞ்சையோடும் உறுதியோடும் அளவற்ற அன்போடும் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். நீ தனி இலையாகவும் மொத்த இலைகளின் ஒரு பகுதியாகவும் ஒரே நேரத்தில் திகழ்கிறாய். எல்லா இலைகளும் வளரும்போது நீயும் வளர்வாய். எல்லா இலைகளும் அசையும்போது நீயும் அசைவாய். ஒன்றுபோல் நீங்கள் சேர்ந்து அசையும்போது இனிமையான காற்று மட்டுமல்ல, அற்புதமான இசையும் பிறக்கும். அந்தக் காற்றும் இசையும் விரிந்து படர்ந்து முழு உலகையும் அரவணைத்துக் கொள்ளும். முழு உலகையும் துடிதுடிப்போடு வைத்திருக்கும்.
“ஒவ்வொரு குழந்தையையும் ஓர் அழகிய இலையாக வைத்திருக்க வேண்டும் உங்கள் கல்வி. தோன்றியபோது இருந்த பச்சை நிறம் இறுதிவரை ஒவ்வொரு இலையிலும் தங்கி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மண்ணில் உறுதியாக வேர் கொண்டு மரம்போல் வலுவாக நிற்க வேண்டும். மரம் ஒன்றாக இருந்தாலும் நூறு கிளைகள் தோன்ற வேண்டும். வானம் முழுக்க அந்தக் கிளைகள் நீண்டும் விரிந்தும் படர வேண்டும்.
“இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்கக் கூடாது என்று எந்த இலையிடமும் எந்த மலரிடமும் எந்தக் கனியிடமும் அதிகாரம் செலுத்துவதில்லை மரம். நான்தான் வளர்த்தேன்; எனவே உன்னைத் திருத்தும் உரிமை எனக்கு இருக்கிறது என்று அது நினைப்பதில்லை. அவை எப்படியும் வளரலாம், எப்படியும் மலரலாம், அதனதன் இயல்புக்கு ஏற்றவாறு. அதனதன் சூழலுக்குத் தக்கவாறு. ஒழுங்கற்ற இலை என்றொன்று இல்லை.
ஒரேயொரு தவறான மலர்கூட இதுவரை மலர்ந்ததில்லை. இது பிழையான கனி என்று எதையும் யாரும் அழைத்துவிட முடியாது. உங்கள் கல்வி செய்ய வேண்டியதும் இதுவே. திருத்துகிறேன் என்று சொல்லி இயல்பைச் சிதைக்காமல், கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி கண்டதை எல்லாம் திணிக்காமல், சரி - தவறு, முதல் - கடைசி என்று தீர்ப்பு எழுதாமல் ஒவ்வோர் இலையையும் அதன் இயல்பு கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
“இது என்னுடையது என்று யாரும் ஒரு மரத்தைச் சொந்தம் கொண்டாட முடியாது. அதுபோல் உங்கள் சாந்தி நிகேதன் அனைவருக்குமானதாக விரிய வேண்டும். இயற்கையோடு இணைந்தும் கலந்தும் இயங்க வேண்டும். ஒன்றல்ல பல சாந்தி நிகேதன்கள் தேவை. இலைகளின் தொகுப்பாக, மரங்களின் தொகுப்பாக, தென்றலின் தொகுப்பாக, இசையின் தொகுப்பாக நம் உலகம் மாற வேண்டும். அதற்கு உதவட்டும் உங்கள் கல்வி.”
(இனிக்கும்)
ஒரு குழந்தைக்கு நீங்கள் நினைப்பதுபோல் கற்றுக் கொடுக்காதீர்கள். அவர்கள் வேறு காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். - ரவீந்திரநாத் தாகூர்,புகழ்பெற்ற கவிஞர், அறிஞர். |
- marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment