Last Updated : 01 Aug, 2024 03:11 PM

1  

Published : 01 Aug 2024 03:11 PM
Last Updated : 01 Aug 2024 03:11 PM

புத்திசாலிகள் அனைவரும் வெற்றியாளர்கள் அல்ல... ஏன் தெரியுமா?

லத்தீன் மொழியில் ‘Intelligence’ என்பதன் பொருள் புரிந்து கொள்ளுதல். முதன் முதலில் புத்திசாலித்தனத்தை அளவிடுவதற்கான தேர்வை ஆல்ஃப்ரெட் பினெட் அறிமுகப்படுத்தினார். புதிய சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக்கொள்ளும் திறன், புதிய உத்திகளைப் புரிந்துகொள்ளும் திறன், புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவையே புத்திக்கூர்மைத் தேர்வுகளின் (Intelligence test) நோக்கங்களாக வரையறுக்கப்படுகிறன.

நுண்ணறிவை ‘IQ’ (Intelligent Quotient) என்று அழைக்கின்றனர். பொதுவாக ஒருவருடைய ஐக்யூ அளவு 110 ஆக இருப்பது சராசரியாகக் கருதப்படுகிறது. ஐக்யூ அளவு 130க்கு மேல் உள்ளவர்கள் அதி புத்திசாலிகளாக விளங்குவர். உலகின் 95 சதவீத மக்களின் ஐக்யூ 70க்கும் 130க்கும் இடைப்பட்டதாகவே உள்ளது. புத்திசாலிகள் அனைவருமே வெற்றியாளர்களாக விளங்குவது இல்லை. கற்பனைத் திறன் மூலம் புதிய உத்திகளை உருவாக்கி, உருவாக்கிய யோசனைகளின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து, நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு முடிவை எடுப்பவர்களே உண்மையில் வெற்றியாளர்கள்.

அனைத்து திறனறித் தேர்வுகளிலும் ‘Test of Reasoning’ என்கிற பகுதி இடம்பெறுகிறது. இதில் ‘Verbal reasoning’, ‘Non-Verbal reasoning’ என இரண்டு பகுதிகளாக வினாக்கள் அமைகின்றன. ‘Non-Verbal reasoning’ பகுதியில் படங்கள் (Diagram, figures) இடம் பெறுகின்றன. இந்தப் படங்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்பில் அமைக்கப்படுகின்றன. இந்தத் தொடர்பைக் கண்டறிந்து, அதன் விடையைத் தேர்வு செய்வதில் திறனைப் பயன்படுத்த வேண்டும். இத்தேர்வின் நோக்கம் தேர்வு எழுதுபவரின் ஆராய்ந்தறியும் திறனைக் கண்டறிதலே.

‘Verbal reasoning’ பகுதியில் படங்களுக்குப் பதிலாக எண் தொடர்கள், ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட தொடர்கள் ‘Coding’, ‘Decoding’ ஆகிய பிரிவுகளில் வினாக்கள் அமைகின்றன. இந்த வகை வினாக்கள் எத்தனை வகைகளில் (Pattern) அமைகிறது என்பதை அறிந்து, அதைத் தீர்வு செய்யப் பழகிய பின்பு குறைந்த நேரத்தில் தீர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் நேர நிர்வாகம் மிக முக்கியம்.

மேலும் சில வகைகள்: பெறப்பட்ட தகவல்கள், அறிந்த தகவல்களைக் கொண்டு சரியாக யூகிப்பது அல்லது முடிவுகளை எடுப்பதை ‘ரீசனிங்’ எனலாம். அறிவியல் பூர்வமான சரியான காரணம் அறிதலே ‘லாஜிக்’ எனப்படுகிறது. பொதுவாக தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் (Logical Reasoning) புத்திசாலித்தனத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. ‘Inductive Reasoning’ என்பது சற்றுச் சிக்கலானது. இதில் முடிவு என்று எதையும் உறுதியாகக் கூற முடியாது. அதாவது ஒரு மருந்தைச் சில நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை செய்யப்படுகிறது. அம்மருந்து அந்நோயைக் குணப்படுத்துகிறது. எனவே அம்மருந்து, அந்நோயை உடைய அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்தும் என்கிற முடிவுக்கு வருவது ‘Inductive Reasoning’ எனலாம்.

கணிதப் பகுதியை ‘Deductive Reasoning’ எனலாம். ஏனெனில் பத்து வகையான குறியீடுகளைக் கொண்டு எல்லா மதிப்புகளையும் குறித்து விடலாம் (with 10 symbols representing all values). இத்துடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைக் கொண்டு இப்பகுதியையே முடித்து விடலாம். நுண்ணறிவுத் திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. இந்தப் புத்திக்கூர்மைத் திறனை அனுபவம், கல்வி, பயிற்சி, ஆர்வம் ஆகியவற்றின் மூலமாக வளர்க்க முடியும்.

வெறும் பயிற்சி உங்கள் திறனை முழுமையாக்காது. முழுமையான பயிற்சியே முழுமையாக்கும். தினசரி குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது பயிற்சி செய்வதை அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். புத்திக்கூர்மை, திறனறித் தேர்வு, ஐக்யூ போன்ற தலைப்புகளில் கிடைக்கும் புத்தகங்களைத் தொடர்ந்து படிக்கலாம். தாமஸ் ஆல்வா எடிசன் கூறியதைப் போல, உங்கள் மூளை செயல்பாட்டை பயிற்சியின் மூலம் மேம்படுத்த முடியும். எனவே, பயிற்சி ஒன்றே வெற்றியை உறுதிபடுத்தும். காலைப் பொழுதின் நேர அட்டவணையில் உடற்பயிற்சி மட்டுமல்ல, மூளைக்கான பயிற்சியும் இனி இடம் பெறட்டும்.

- கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x