Published : 27 Jul 2024 02:55 PM
Last Updated : 27 Jul 2024 02:55 PM
மாணவ, மாணவியரின் கவனச்சிதறலுக்கும் நேரம் வீணாவதற்கும், அதீத சமூக வலைதளப் பயன்பாடும் ஒரு முக்கியக் காரணம். திறன்பேசி விளையாட்டுகள் பெரும்பாலானவர்களை அடிமையாக்கியுள்ளது. படிக்கும்போது திறன்பேசியை அருகில் வைத்துக்கொண்டு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அதைப் பார்ப்பது, காலை விடிந்தவுடன் வாழ்க்கையின் தலையாயக் கடமையாகத் திறன்பேசியைப் பார்ப்பது என அடிமையாகவே பலர் உள்ளனர். பாடங்களைப் பற்றி விவாதிக்கிறார்களோ இல்லையோ, தனக்கு தேவையற்ற விஷயத்துக்குச் சமூக வலைதளத்தில் ‘கமெண்ட்’ போடுவது, ‘மீம்ஸ்’ போடுவது, விவாதிப்பது எனப் பொன்னான நேரத்தைப் பலர் வீணாக்குகின்றனர்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு நீண்ட நேரம் திறன்பேசியைப் பயன்படுத்துவதால் உறக்கமின்மை, ஞாபகசக்திக் குறைபாடு, கவனச்சிதறல், உடல்நலக் குறைபாடு, பார்வைக் குறைபாடு ஆகியவற்றுடன், மனரீதியாகப் பல பிரச்னைகள் உண்டாகலாம். சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன உளைச்சல் உண்டாவதுடன், மனஅழுத்தத்திற்கும் காரணமாக அமைகிறது.
சுடோகு புதிர் (Sudoku)
சுடோகு என்பது 1 முதல் 9 வரையிலான எண்களை 9 வரிசை, 9 தொகுதிகளைக் கொண்ட கட்டங்களில் வரிசைப்படுத்தும் ஒரு புதிர். இது ‘லாஜிக்’, ஆய்வறிதலை (Reasoning) அடிப்படையாகக் கொண்ட, புத்திக்கூர்மையைச் சோதிக்கும் விளையாட்டு. இதற்கெனத் தனி கணிதத்திறன் எதுவும் தேவையில்லை. இதைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒருமித்த கவனக்குவிப்பைப் (concentration) பெறும் திறன் கிடைக்கும். கடினமான பாடங்களை நன்கு புரிந்து கொள்ளவும் நீண்ட நேரம் கவனச்சிதறலின்றி படிப்பதற்கும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும் இத்திறன் உதவும். மேலும் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் குழப்பமான நேரங்களில் சரியான முடிவு எடுக்கவும் இது அவசியம்.
இந்த விளையாட்டைப் பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளைக்குச் சிறந்த பயிற்சியையும் அளிக்கிறது. பல்வேறு தகவல்கள், செய்திகள், பிம்பங்கள் போன்றவற்றை விரைவாகவும், முறையாகவும் உரிய நேரத்தில் பயன்படுத்தவும் இது உதவுகிறது. இயற்பியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் குறிப்பிட்டது போல், ‘இந்த மனித சமூகத்துக்கு நான் ஏதாவது சேவை செய்திருக்கிறேன் என்றால், அது எனது ஒருமித்த கவனக்குவிப்பு ஆற்றலால்தான்‘ என்பது மூலம் ஒருமித்த கவனக்குவிப்பின் முக்கியம் நிரூபணமாகிறது.
சுடோகு பயிற்சியைத் தினந்தோறும் ஒரு மாதத்திற்குப் பயிற்சி செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தற்போது இளைய தலைமுறையினர் எந்நேரமும் திறன்பேசியில் பேசிக் கொண்டும், குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டும் உள்ளனர். இதனால் மூளையின் செயல்திறன் கடுமையாகப் பாதிப்படையும் (Cognitive failures). இதைத் தவிர்க்க, சுடோகு அல்லது செய்தித்தாள்களில் வெளியாகும் எண் விளையாட்டு, குறுக்கெழுத்து விளையாட்டு, ’Jumble words’ போன்ற பகுதிகளுக்குத் தீர்வு கண்டுபிடித்துப் பழகுவதால் போட்டித் தேர்வில் ‘Analogy’ பகுதியை விரைவாகச் செய்துவிடலாம். மேலும், ஆங்கிலப் பகுதியில் ’Spot the Error’, ‘Comprehension’ பகுதிக்கும் இப்பயிற்சி உதவியாக இருக்கும்.
கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT