Published : 08 May 2018 10:48 AM
Last Updated : 08 May 2018 10:48 AM
1. ‘கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிறந்த சிந்தனையாளர் யார்’ என்று 1999-ல் பி.பி.சி. ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 நபர்களில் சார்லஸ் டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஐசக் நியூட்டன், ஸ்டீவன் ஹாக்கிங் ஆகியோரை முந்தி முதலிடத்தைப் பிடித்தவர் யார்?
2. பள்ளி, பல்கலைக்கழகத்தில் படித்த நாட்களில் மார்க்ஸ் நிறைய கவிதை எழுதியுள்ளார். காதலித்த காலத்தில் ஜென்னிக்கும் பல கவிதைகளை எழுதி அனுப்பியுள்ளார். பிற்காலத்தில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பிறகு கவிதை எழுதும் ஆர்வத்தைக் கைவிட்டார். இளம் வயதிலிருந்தே மார்க்ஸுக்கு மிகவும் பிடித்த, உத்வேகம் அளித்த ஆங்கிலக் கவிஞர் யார்?
3. கார்ல் மார்க்ஸின் மகத்தான படைப்பான ‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தை, ‘பரிணாமவியல் தத்துவத்தை’ முன்வைத்த இயற்கை அறிவியலாளர் சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்ய முடிவுசெய்து மார்க்ஸ் அவருக்குக் கடிதம் எழுதினார். சில தனிப்பட்ட காரணங்களால் சார்லஸ் டார்வின் அதை ஏற்கவில்லை. ‘மூலதனம்’ நூல் யாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது?
4. பன்மொழிகளை அறிந்திருந்த மார்க்ஸ் ஆரம்ப காலத்தில் இதழ்களுக்கான கட்டுரைகளைத் தன் தாய்மொழியான ஜெர்மனில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பிரசுரித்து வந்தார். விரைவிலேயே ஆங்கிலத்தில் நேரடியாக எழுதும் தேர்ச்சியைப் பெற்று எழுதினாலும்கூட, ‘மூலதனம்’ நூலைத் தன் தாய்மொழியில்தான் எழுதினார். ‘மூலதனம்’ நூலின் இரண்டாவது பாகத்துக்காக 55 வயதுக்கு மேல் அவர் கற்ற புதிய மொழி என்ன?
5. மார்க்ஸின் மிகப் பெரும் படைப்பான ‘மூலதனம்’, முதன்முதலாக ரஷ்ய மொழியில் 1872-ல் மொழிபெயர்க்கப்பட்டது. ரஷ்ய மொழிபெயர்ப்பு ஒரே ஆண்டில் மூன்றாயிரம் பிரதிகள் விற்பனையானது. மிக அதிக அளவு வாசிக்கப்பட்டதுடன், பெரிதாக மதிக்கவும்பட்டது. இந்த அடிப்படையில் ரஷ்யாவில் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன?
6. புகழ்பெற்ற ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை மார்க்ஸும் எங்கெல்ஸும் 1848-ல் வெளியிட்டார்கள். முதலாளித்துவத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் அரசியல், பொருளாதார அமைப்பைத் தொழிலாளர்களால்தான் மாற்ற முடியும் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. அந்த அறிக்கையின் இறுதியில் இடம்பெற்ற புகழ்பெற்ற பிரகடனம் என்ன?
7. ‘மதம் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் ஒரு போதைப்பொருள்’ என்ற புகழ்பெற்ற வரியைத் தனது முக்கியப் படைப்புகளான ‘மூலதனம்’, ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ ஆகிய இரண்டிலும் மார்க்ஸ் எழுதவில்லை. அந்த வாசகம் இடம்பெற்ற மார்க்ஸின் படைப்பு எது?
8. கார்ல் மார்க்ஸ் தனது ஆராய்ச்சிப் பணிக்காக மிக அதிக நேரம் செலவிட்ட இடம் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்த ‘பிரிட்டிஷ் நூலகம்’. அந்த நூலகத்தின் உறுப்பினராகத் தினசரி அங்கே சென்றுவந்த அவருக்கு வாசிப்பதற்காகத் தனி அறை ஒதுக்கப்பட்டது.
அந்த அறையைப் பிற்காலத்தில் பயன்படுத்திய புகழ்பெற்ற மற்ற ஆளுமைகள் யார்?
9. அறிவியல் உலகைத் திருப்பிப் போட்ட ‘சார்பியல் கொள்கை’யை முன்வைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மருத்துவ உலகில் உளவியல் சிகிச்சைகளுக்கு அடித்தளமிட்ட சிக்மண்ட் ஃபிராய்டு ஆகியோருக்கும் கார்ல் மார்க்ஸுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. அது என்ன?
10. மார்க்ஸின் இறுதிச் சடங்கில் அவருடைய இன்னொரு பாதியைப் போலிருந்த பிரெட்ரிக் எங்கெல்ஸ் பேசினார். அந்த நிகழ்ச்சியில் மார்க்ஸ் இறந்தது பற்றி நேரடியாக ஒரு வார்த்தைகூடப் பேசாத அவர், மார்க்ஸ் இறந்ததை வர்ணித்த புகழ்பெற்ற வாசகம் என்ன?
விடைகள்
1. கார்ல் மார்க்ஸ்
2. ஷேக்ஸ்பியர்
3. மார்க்ஸின் நீண்டகால நண்பர் வில்ஹெம் வொல்ப்
4. ரஷ்ய மொழி
5. லெனின் தலைமையில் 1917-ல் கம்யூனிஸ ஆட்சி அமைந்தது
6. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’
7. ‘சட்டம் பற்றி ஹெகலியத் தத்துவத்துக்கு விமர்சனம்’
8. எழுத்தாளர்கள் ஆஸ்கர் வைல்டு, ஜார்ஜ் ஆர்வெல், வர்ஜீனியா வொல்ப்
9. மூவரும் பிறப்பால் யூதர்கள்
10. ‘மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT