Last Updated : 24 Jul, 2024 06:15 AM

 

Published : 24 Jul 2024 06:15 AM
Last Updated : 24 Jul 2024 06:15 AM

தேன் மிட்டாய் - 14: இருளின் கதைகளை எழுதுகிறேன்!

நீ மை தொட்டு எழுதுகிறாயா அல்லது கண்ணீர் தொட்டா தஸ்தாயெவ்ஸ்கி? மகிழ்ச்சி வேண்டாம், அதன் நிழலைக்கூட உன் கதைகளில் ஏன் காண முடிவதில்லை? சிக்கல் இல்லாத ஒரே ஒரு மனிதனைக்கூட ஏன் உன்னால் கற்பனை செய்ய முடியவில்லை? நீ எழுதும் பக்கங்களில் ஏன் துயரம் கடல் அளவுக்கு நீண்டு படர்ந்திருக்கிறது? அன்பான, அழகான, அமைதியான வாழ்க்கையில் உனக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அப்படி ஒன்று உனக்கு அமையவே இல்லையா?

எளிமையாக ஒரே வரியில் சொல்கிறேன். உங்களுக்கு அழகிய கற்பனைகள் வேண்டும் என்றால், மன்னியுங்கள், நான் உங்களுக்கான எழுத்தாளன் அல்ல. நீங்கள் தேநீர் அருந்திக்கொண்டே ரசித்துப் படிக்கக்கூடிய எந்தக் கதையையும் நான் இதுவரை எழுதியதில்லை.

கவித்துவமான, அழகிய வரிகளை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள். ‘அதன்பின் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்’ என்று தேவதைக் கதைகளை மட்டுமே முடித்து வைக்க இயலும். மனித வாழ்வை அல்ல. ஆம், எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கவே பிடிக்கும். உங்கள் எல்லாரையும்போல் அழகான, அன்பான வாழ்வையே நானும் விரும்புகிறேன். விரும்பியதை வாங்கி, விரும்பியதை உடுத்தி, விரும்பிதை எல்லாம் உண்டு, உல்லாசமாக வாழ வேண்டும் என்பதுதான் என் கனவும்.

எல்லாரையும்போல் என்னாலும் இனிமையான கதைகளை எழுத முடியும். கவலைகளே இல்லாத குழந்தைகளின் கதைகளை எழுதவே நானும் விரும்பினேன். மாயமும் மந்திரமும் கலந்த அற்புதமான கற்பனைகள் என்னிடமும் குவிந்திருக்கின்றன. அன்பான அப்பாவின் கதையை, அன்பான அம்மாவின் கதையை, பாசத்தைக் கொட்டும் குடும்பத்தின் கதையை என்னாலும் எழுத முடியும். அட என்று நீங்கள் வியக்கும் வகையில் சூரியனின் கதிரையும் சூரியகாந்தி மலரின் அழகையும் என்னாலும் விவரிக்க முடியும்.

ஆனால், மலர்ந்து நிற்கும் சூரியகாந்தியின் அழகை முழுக்க ரசித்து முடிப்பதற்குள், வாடி விழுந்து கிடக்கும் நேற்றைய மலர் என் கண்ணில் பட்டுவிடுகிறது. அழகிய மஞ்சள் மலர் என் கண்களிலிருந்து சிறிது சிறிதாக மறைய ஆரம்பிக்கிறது. காய்ந்து, சுருண்டு விழுந்து கிடக்கும் மலர் சிறிது சிறிதாக என் இதயத்தை ஆக்கிரமிக்கிறது. இந்தக் காய்ந்த பூவுக்குள் நூறு கதைகள் ஒளிந்துகொண்டிருக்கும்.

இந்தக் காய்ந்த பூவின் இதயத்தில் நூறு கனவுகள் நிறைந்திருககும். ஆனால், அந்தக் கதைகளை உலகம் கேட்கப் போவதில்லை. அந்தக் கனவுகள் ஏற்கெனவே மறைய ஆரம்பித்துவிட்டன. எல்லாரும் இன்றைய மலரைத்தான் காண்பார்கள். இன்றைய மலரின் அழகில்தான் மனதைப் பறிகொடுப்பார்கள். இன்றைய மலரின் கதைகளையும் கனவுகளையும்தான் மாய்ந்து, மாய்ந்து எழுதுவார்கள்.

ஒரு தட்டைக் கையில் பிடித்துக்கொண்டு கிழிந்து தொங்கும் ஆடையோடு அலையும் மனிதர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை நம் கண்கள் காண்பதில்லை. கண்டாலும் உடனே பார்வையைத் திருப்பிக்கொள்கிறோம். சுத்தமான, நல்ல ஆடை அணிந்த மனிதர்களையே நாம் காண்கிறோம். அவர்களையே மனிதர்களாக ஏற்கிறோம். அவர்களுடன்தான் பேசுகிறோம், பழகுகிறோம். அவர்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களை நம்மால் நேசிக்க முடிகிறது. அவர்களுடைய கதைகள் வாசிப்பதற்கு அழகாக இருக்கின்றன. ஏனென்றால், அவை நம் கதைகளும்கூட.

அன்பான அப்பாவோ அன்பான அம்மாவோ கிடைக்காத குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள்? விரும்பியதை உண்ண முடியாத, விரும்பியதை உடுத்த முடியாத, விரும்பியபடி கனவு காண முடியாத குழந்தைகளின் ஏக்கங்களை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? இவர்கள் வாழ்வில் மாயமோ மந்திரமோ ஏன் நிகழ்வதில்லை? நம் உலகில் வாழ்ந்தாலும் இவர்கள் ஏன் நமக்கெல்லாம் அந்நியர்களாக இருக்கிறார்கள்? இவர்களுடைய கவலைகளை நம் காதுகள் எப்போது கேட்கும்? இவர்களுடைய போராட்டங்களை நம் கண்கள் எப்போது காணும்? இவர்களுடைய கனவுகள் எப்போது நம் இதயத்தைத் தாக்கும்?

இவர்களும் இங்கே நம்மோடு வாழ்கிறார்கள் என்பதை நாம் எப்போது மெய்யாக உணர்கிறோமோ அப்போது. அதனால்தான் பூத்துக் குலுங்கும் மஞ்சள் சூரியகாந்திகளை விலக்கிவிட்டுத் தரையில், புழுதியில் விழுந்து கிடக்கும் பழுப்பு மலர்களின் கதைகளை நான் எழுதுகிறேன்.

பளிச்சென்று தெரியும் பகலை விலக்கிவிட்டு, சத்தங்கள் இல்லாத, காட்சிகள் இல்லாத, வண்ணங்கள் இல்லாத இருளின் கதைகளை எழுதுகிறேன். எல்லாரும் படிக்கும் கதைகளை எல்லாரும் எழுதுகிறார்கள். அவர்கள் இதயம் உணராத ஆயிரம் கதைகள் இந்த உலகில் இருக்கின்றன. அந்தக் கதைகளை நான் எழுதுகிறேன்.

கற்பனை அல்ல, நிஜமே என்னை அசைக்கிறது. மகிழ்ச்சி அல்ல, வலியே என்னைத் தூண்டுகிறது. மலர்ந்த முகங்கள் அல்ல, சுருங்கிக் கிடக்கும் இதயங்களையே என் கண்கள் நாடுகின்றன. எங்கோ இருக்கும் அற்புதமான மனிதர்களை அல்ல, என் கண் முன்னால் வாழும் உடைந்த மனிதர்களின் கதைகளையே எழுத விரும்புகிறேன்.

உடைந்த கற்பனைகள், உடைந்த வாழ்க்கைகள், உடைந்த கனவுகள். என் உலகம் உடைந்து போயிருப்பதால் நான் உடைந்து போயிருக்கிறேன். நான் என் கதையை எழுதினாலும் சரி, என் உலகின் கதையை எழுதினாலும் சரி, அது உடைந்தே கிடக்கிறது. என்ன செய்ய?

(இனிக்கும்)

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x