Published : 23 Jul 2024 01:21 PM
Last Updated : 23 Jul 2024 01:21 PM
மூளை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உடற்பயிற்சிகள் உதவுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதயச் செயல்பாடு, உடல் தசைகளின் வலிமை உள்ளிட்ட ஏராளமான நன்மைகளுக்கு உடற்பயிற்சிகள் உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். உடற்பயிற்சிகளை அன்றாடம் மேற்கொள்ளும்போது உடல் வலிமையடைவதுடன் மூளையின் செயல்பாடும் ஆரோக்கியமானதாக மாறுவதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாய்வுகள் அனைத்தும் எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாய்வுக்காக எலிகள் சிறிய அளவிலான டிரெட் மில் சாதனங்களில் ஓடவிடப்பட்டு எட்டு வாரங்கள் கண்காணிக்கப்பட்டன. இதன் முடிவில் எலிகளின் தசைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இவ்வாய்வின் மூலம் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் உடலில் நோயெதிர்புச் சக்தியை அதிகரிக்கரிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மூளையை வலுப்படுத்தும்
உடற்பயிற்சிகள் மூளை செல்களை வலுப்படுத்துவதால் புதிய மூளை செல்களின் உற்பத்திக்கு உதவுகின்றன. இதனால், அறிவாற்றல் மேம்படுகிறது. இவை ரத்த ஒட்டத்தை மேம்படுத்துவதால் கவனம், நினைவாற்றல், கற்றலை அதிகரித்து மூளையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன.
குறிப்பாகப் பதற்றதை நீக்கி மன அமைதியை மேம்படுத்தவும் உடற்பயிற்சி உதவுகிறது. மேலும், நரம்பியல் நோய்கள் ஏற்படும் அபாயத்தை உடற்பயிற்சிகள் குறைப்பதாகவும் இவ்வாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT