Last Updated : 29 May, 2018 10:40 AM

 

Published : 29 May 2018 10:40 AM
Last Updated : 29 May 2018 10:40 AM

இணையவழிக் கல்வி: ‘ஸ்மார்ட்’ அணிவகுப்புக்கான அடிப்படை!

இன்று கூரை ஒரு பொருட்டல்ல, மூடிய கதவுகள் ஒரு பொருட்டல்ல, தூரம் ஒரு பொருட்டல்ல. உணவு, உடை, தண்ணீர், மருந்து என அனைத்தும் நம் வீடு தேடி வருகிறது. நண்பர்களை உறவுகளை நேரில் பார்க்காமலேயே அவர்களுடன் உறவாட முடிகிறது. மூடிய அறைக்குள் இருந்தபடியே புது நட்புகளை உருவாக்க முடிகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி நிகழ்ந்தன? தொழில்நுட்ப வளர்ச்சியும் இணைய வசதியின் கட்டணக் குறைவும் இணைந்து நிகழ்த்திய மாயாஜாலம் இது. இணைய வசதி இல்லாதவர்களின் நிலை இன்று சிறகு ஒடிந்த பறவையின் நிலையைப் போன்றது.

ஆடம்பரத்தின் அடையாளமாக முன்பு இருந்த இணைய வசதி, இன்று அத்திவாசியமாகிவிட்டது. இணையத்தில் இணைக்கப்படாத ஸ்மார்ட்போன்களோ கணினிகளோ அனேகமாக இன்று இல்லை.

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வீட்டு உபயோகச் சாதனங்கள், ஸ்மார்ட் லைட், ஸ்மார்ட் பாதுகாப்பு சாதனம், ஸ்மார்ட் கதவு, ஸ்மார்ட் வீடு என நீளும் பட்டியலில் நம் வாழ்க்கையும் இணைந்து ‘ஸ்மார்ட்’டாகிவிட்டது. ஐ.ஓ.டி. (IOT) எனும் ‘இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்’தான் இந்த ஸ்மார்ட் அணிவகுப்புக்கான அடிப்படை. அந்த ஐ.ஓ.டி. யின் அடிப்படை MEAN Stack.

MEANStack என்பது என்ன?

இது ஜாவா ஸ்கிரிப்ட்டை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருட்களின் தொகுப்பு. MEAN என்பது மாங்கோ டி.பி. (MongoDB), எக்ஸ்பிரஸ்.ஜே.எஸ். (Express.js), ஆங்குலர் ஜே.எஸ். (AngularJs), நோட்.ஜே.எஸ். (Node.js) ஆகிய செயல்முறைகளின் முதல் எழுத்துக்களைக்கொண்டு உருவான ஒரு சொல். இணைய சர்வருக்கும் நமக்கும் இடையே திறன் மிகுந்த செயல்முறை பாலத்தை ஏற்படுத்துவதற்கு இவை அனைத்தும் நமக்குத் தேவை.

கடந்த வாரங்களில் ஜாவா ஸ்கிரிப்ட் பற்றியும் மாங்கோ டி.பி. பற்றியும் ஏற்கெனவே பார்த்துவிட்டதால் மீதமிருப்பவற்றை இங்கு பார்ப்போம்.

நோட்.ஜே.எஸ். (Node.js)

இணைய சர்வரில் செயல்படும் ஸ்கிரிப்ட்தான் நோட்.ஜேஎஸ் . நம் உத்தரவுகளுக்கு ஏற்ப, இணைய சர்வரில் இருக்கும் கோப்புகளைத் திறந்து படித்து அவற்றில் நமக்குத் தேவையானதை மட்டும் தேவையான வடிவில் எடுத்து வந்து கணினித் திரையில் விரியச் செய்யும்.

எக்ஸ்பிரஸ்.ஜே.எஸ். (Express.js)

எக்ஸ்பிர்ஸ்.ஜே.எஸ். மூலம்தான் நோடில் (Node) இணைய செயல்பாடுகளை நாம் உருவாக்க முடியும். இது இணையதளப் பக்கங்களுக்குள் அடங்கியிருக்கும். சில செயல்பாடுகள் ஒரு பக்கத்துக்குள் அடங்கிவிடும். சில பல பக்கங்கள் கொண்டதாக இருக்கும். உதாரணத்துக்கு டிக்கெட் பதிவுசெய்யும் இணையதளம், ஹோட்டல் பதிவு செய்யும் இணையதளம், ஆன்லைன் வர்த்தகப் பக்கங்கள்.

ஆங்குலர் ஜே.எஸ். (AngularJs)

ஜாவாஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி கூகுளால் உருவாக்கப்பட்டது ஆங்குலர் ஜே.எஸ். தரவுகளை அசாத்திய வேகத்தில் கணினியிலிருந்து சர்வருக்கும் சர்வரிலிருந்து கணினிக்கும் கடத்துகிறது இந்த ஆங்குலர் ஜே.எஸ்.

எப்படி உணவு சார்ந்த தொழில்களுக்கு அழிவில்லையோ அதுபோல் இணையம் சார்ந்த தொழில்களுக்கும் இனி அழிவில்லை. இணையத் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை வேலைவாய்ப்பு சந்தையில் இன்று அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக MEAN Stack-ல் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களின் தேவை இன்று அபரிதமாக உள்ளது. இதில் தேர்ச்சி பெறுவது உங்களுக்கு நல்ல வேலையை மட்டுமல்ல, கைநிறையச் சம்பளத்தையும் பெற்றுத் தரும்.

18CH_Meanstack100 

எங்கே படிக்கலாம்?

ஜாவா ஸ்கிரிப்ட் படித்தவர்களுக்கும் மாங்கோ டி.பி. படித்தவர்களுக்கும் இதைப் படிப்பது மிகவும் எளிது. இதைக் கற்பதற்கு இணையத்தில் பல இலவச ஆன்லைன் வகுப்புகள் உள்ளன. அவற்றில் சில:

# https://www.w3schools.com/nodejs/default.asp

# http://www.bradoncode.com/tutorials/learn-mean-stack-tutorial/

# https://thinkster.io/topics/mean

இதைப் படிப்பதற்கு முன்பாக இணையதளங்கள் பற்றியும் அதன் வடிவமைப்பு, கட்டமைப்பு ஆகியவை குறித்தும் தெரிந்துகொள்வது, இதைக் கற்கும் வேகத்தையும் இதைப் பற்றிய புரிதலையும் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x