Published : 07 Jul 2024 08:20 AM
Last Updated : 07 Jul 2024 08:20 AM
நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது ஒரு கலை; ஆனால், பலருக்கும் இக்கலை கைவருவதில்லை. எனினும், போதிய பயிற்சிகளால் இதைப் பெற முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய பயிற்சி முறைகளில் தற்போது முதன்மையாக இருப்பது ‘டைம் பாக்ஸிங்’.
‘டைம் பாக்ஸிங்’ என்றதும் பலரும் நேர மேலாண்மை, நேரத் திட்டமிடல், தினசரித் திட்டமிடல் போன்றவற்றுடன் அதைக் குழப்பிக்கொள்வது உண்டு. மேற்கூறிய அனைத்தும் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் ஒன்றிப்போனாலும் அவை பயிற்சி முறையிலும் இலக்கிலும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுகின்றன.
கவனச் சிதறல்
தொழில்நுட்பம் உச்சத்தில் உள்ள இக்கால கட்டத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எளிதில் கவனச்சிதறலுக்கு ஆளாகிறார்கள். பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கும் போதே தொலைக்காட்சிக்கும் திறன்பேசிக்கும் தங்களை அறியாமலே தாவும் மனநிலை பலருக்கும் உண்டு. இத்தகைய கவனச் சிதறல்களால் மாணவர்களின் நேரம் வீணடிக்கப்படுவதுடன், இலக்குகளை அடைவதும் தாமதமாகிறது. இத்தகைய சூழலில் நேரத்தை முறையாகக் கையாள் வதைக் கற்பிக்கிறது டைம் பாக்ஸிங்.
திட்டமிடல்
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பணியைச் செய்து முடிப்பதையே டைம் பாக்ஸிங் என அழைக்கிறோம். கவனச் சிதறலைத் தவிர்ப்பதே இதன் அடிப்படை நோக்கம். அதாவது, கவனத்தைச் சிதறவிடாமல் நாம் தொடங்கிய பணியை அதே உத்வேகத்துடன் செய்து முடிப்பது. நாளை என்னென்ன பணிகள் செய்யப்போகிறோம் என்பது முந்தைய இரவே இதில் திட்டமிடப்படுகிறது. மேலும், நேரம் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் ஒதுக்கப்படுகின்றன.
அடிப்படை
டைம் பாக்ஸிங் பயிற்சி முறையைக் கடைப்பிடிக்க ஆரோக்கியமான மனநிலை முதன்மையானது. ஒரு பணியைத் தொடங்குவதற்கு முன்பே, ‘என்னால் அதைச் செய்து முடிக்க இயலுமா?’ என்பது போன்ற சந்தேகங்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் தவிர்க்க வேண்டும். மாறாக, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, எவ்விதத் தடங்கலும் இன்றி மேற்கொண்ட பணியைச் செய்து முடிப்போம் என உளமாற எண்ண வேண்டும். டைம் பாக்ஸிங் பயிற்சிமுறை, இரண்டு செயல்முறைகளை முதன்மையாகக் கொண்டுள்ளது. ஒன்று திட்டம், இரண்டாவது செயல்.
திட்டம்
முன்னர் கூறியபடியே, நாளை என்ன பணி செய்யப்போகிறோம் என்பது பற்றித் தெளிவான திட்டத்தை ஒருவர் கொண்டிருக்க வேண்டும். இதில் எந்தப் பணிக்கு எந்த நேரத்தில் முன்னுரிமை அளிக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்பத் திட்டமிடுவது சிறந்தது. உதாரணத்துக்கு ஒரு பணியைச் செய்து முடிக்க 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்கிக்கொள்ளலாம். இதில், ஒரு பணியை நீங்கள் எந்தக் கால அளவுக்குள் முடிப்பீர்கள் என்பதை முன்னரே மதிப்பிட்டுக்கொண்டால், அவ்வேலையை அதே நேர வரையறைக்குள் முடிப்பது எளிதாக இருக்கும்.
செயல்
உங்கள் திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்; நீங்கள் திட்டமிட்ட நேரத்தில் வேலையைச் சரியாகத் தொடங்கி, முடிக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கும் கவனச் சிதறல்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
கவனச் சிதறலுக்கு ஆளாகும் தருணங்களைக் குறித்துக்கொண்டு, அடுத்த முறை அதிலிருந்து சிறிது சிறிதாக விடுபட முயலலாம். இப்பயிற்சி முறையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கும் போது கவனச்சிதறல் படிப்படியாகக் குறைவதைக் காணலாம்.
நேரம் உங்கள் கட்டுப்பாட்டில்
டைம் பாக்ஸிங் முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவரது அன்றாடம் எளிமையாகிறது. கவனச்சிதறல் இன்றி இலக்குகளை அடைய உதவுகிறது. ஒரு பணியில் நீங்கள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நேரத்தை வீணடிக்கும் அபாயம் குறைந்து, கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. இப்பயிற்சி முறையானது அன்றாடப் பணிகளை முடிக்க உதவுவதுடன் நேரத்தின் மதிப்பைப் புரியவும் வைக்கிறது; வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் சேர்த்தே உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT