Last Updated : 29 Jun, 2024 12:15 PM

 

Published : 29 Jun 2024 12:15 PM
Last Updated : 29 Jun 2024 12:15 PM

சிறுகோள் நாள் - ஜூன் 30


நம் சூரியக் குடும்பத்தில் கோள்கள் மட்டுமன்றி சிறுகோள்களும் சுற்றி வருகின்றன. இந்தச் சிறுகோள்கள் சூரியக் குடும்பம் உருவானபோது சிதறடிக்கப்பட்ட வான்பொருள்களால் உருவானவை. இவை கோள்களைப் போன்று ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்டவை அல்ல. வடிவிலும் அளவிலும் வித்தியாசமானவை. சிறு பந்து அளவிலிருந்து சிறு நாடு அளவுக்கான சிறுகோள்கள் காணப்படுகின்றன. இந்தச் சிறுகோள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படவும், இவற்றை அடையாளம் கண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், இவற்றிலிருந்து நம் பூமியைப் பாதுகாக்கவும் ‘உலக சிறுகோள் நாள்’ ஜூன் 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

சிறுகோள்கள் சூரியக் குடும்பம் உருவான காலத்திலிருந்தே இருந்து வருகின்றன. செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே லட்சக்கணக்கான சிறுகோள்கள் காணப்படுகின்றன. பூமிக்கு அருகிலும் சிறுகோள்கள் இருக்கின்றன. அவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்தச் சிறுகோள்கள் பாறைகளால் ஆனவை. இவற்றில் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் இருக்கின்றன. இந்தச் சிறுகோள்களில் இருக்கும் உலோகங்களை பூமிக்குக் கொண்டுவருவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

உலக சிறுகோள் நாள்

1908 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ரஷ்யாவின் மத்திய சைபீரியாவின் ‘துங்கஸ்கா’ ஆற்றுக்கு அருகே ஒரு வான்பொருள் விழுந்து வெடித்தது. வெடித்த சத்தம் பல நூறு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது. அது ஒரு விண்கல். 10 லட்சம் டன் எடையும் ஒரு கால்பந்து மைதான அளவும் கொண்டதாக இருந்தது. இந்தச் சிறுகோள் மோதல் ‘துங்கஸ்கா நிகழ்வு’ என்று பெயரிடப்பட்டது. அந்த நாளை நினைவுகூரும் வகையில் 2015ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ‘சர்வதேச சிறுகோள் நாள்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நம் கண்களில் அடிக்கடி தென்படும் எரிகற்களும் சிறுகோள்களே. சுமார் 100 கி.மீ. தொலைவில் பூமிக்கு அருகில் வரும்போது, வளிமண்டலத்தில் உரசி தீப்பற்றி எரிந்து, பூமியில் விழுகின்றன. தினமும் 6 முதல் 8 எரிகற்களை நாம் காண முடியும் என்றும் தினமும் சில எரிகற்கள் பூமியில் விழுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் ஒரு விண்கல் தாக்கியதால் ஓர் ஏரி உருவாகியிருக்கிறது. இது லோனார் ஏரி என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் ஒரு மிகப் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இது சுமார் 50 ஆயிரம் அண்டுகளுக்கு முன்பு விண்கல் தாக்கத்தால் ஏற்பட்ட பள்ளம் என்கிறார்கள்.

இப்படிச் சிறுகோள்களால் பூமிக்கு வரும் ஆபத்துகளைத் தடுப்பதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியை நோக்கி வரும் சிறுகோளை, செயற்கைக்கோள் மூலம் தாக்கி, திசையை மாற்றும் திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் வெற்றிகரமாகச் செய்து காட்டியிருக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு ஏவப்பட்ட டார்ட் (DART) விண்கலம் 2022ஆம் ஆண்டு டிமோர்போஸ் (Dimorphos) என்கிற சிறு கோள் மீது வெற்றிகரமாக மோதியது. இதன்மூலம் டிமோர்போஸின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x