Published : 29 May 2018 10:49 AM
Last Updated : 29 May 2018 10:49 AM
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள்மீது தமிழக காவல்துறை மே 22, 23 ஆகிய தேதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. காவல்துறை நடத்திய இந்தத் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகியிருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட போராட்டத்தின் நூறாவது நாளான மே 22 அன்று தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்ற கோரிக்கையுடன் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணி நடப்பதற்கு முன்னாள் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை மீறி ஆட்சியர் அலுவலகத்தின் முன் கூடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. தமிழக காவல்துறை நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு நாட்டின் பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக முதல்வர் குமாரசாமி
கர்நாடகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 104 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகத் தன் பதவியை மே 19 அன்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம், சுயேச்சை கூட்டணியின் 117 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் எச்.டி. குமாரசாமி கர்நாடக முதல்வராக மே 23-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
அத்துடன், மே 25 அன்று கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அவர் பெரும்பான்மையை நிரூபித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான இறுதிக் கட்டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கேரளத்தில் நிபா வைரஸ்
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 12 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை மே 24 அன்று அறிவித்திருக்கிறது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பேரும், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரும் நிபா வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகியிருக்கின்றனர். பழந்தின்னி வவ்வால்கள் (Fruit Bats) மூலம் பரவும் இந்த நிபா வைரஸ், வவ்வால்கள் கடித்த மாம்பழங்களைச் சாப்பிட்டதால் பரவியதாக நம்பப்படுகிறது.
நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. காடழிப்பு, பருவநிலை மாற்றம் போன்ற உயிரினங்களின் வாழ்விட இழப்பே கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பதற்கான காரணம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.
1,012 உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி
நாட்டின் 1,012 உயர்கல்வி நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மே 25 அன்று தெரிவித்தார். தேசிய உயர்கல்வி பிரச்சாரத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நிதியில் நாட்டின் பத்து முன்னணிப் பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ. 10 கோடி வீதம் தரத்தை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதேமாதிரி 17 கல்லூரிகளுக்கு தலா ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சட்டீஸ்கர், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் புதிய மாதிரி பட்டப் படிப்பு கல்லூரிகள் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம்
நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் தலைநகரமான இம்பாலில் அமைவதற்கு மத்திய அமைச்சரவை மே 23 அன்று ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்ட மசோதாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டவுடன் அடுத்தகட்டப் பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். மணிப்பூர் மாநில அரசு இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான இடத்தை ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. பல்கலைக்கழகத்தை நிறுவ ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார வசதி: 145-வது இடம்
சுகாதார வசதி குறித்த உலகின் 195 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 145-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. 2016-ம் ஆண்டுக்கான தரமான சுகாதார வசதி அளிக்கும் நாடுகளின் பட்டியலை லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் சீனா (48), இலங்கை (71), வங்கதேசம் (133), பூட்டான் (134) ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கியிருக்கிறது.
‘உலகளாவிய நோய்ச் சுமைகள்’ தொடர்பான இந்த ஆய்வில் 1990-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை தரமான சுகாதார வசதி அளிப்பதில் இந்தியா முன்னேறியிருந்தாலும், அது போதுமான அளவில் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. 1990-ம் ஆண்டில் சுகாதார வசதியில் 24.7 புள்ளிகள் பெற்றிருந்த இந்தியா, 2016-ம் ஆண்டில் 41.2 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. தரமான சுகாதார வசதியில் கேரளாவும் கோவாவும் 60 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றன.
ஆசியாவின் நீளமான சுரங்கப்பாதை
ஆசியாவின் நீளமான சாலைச் சுரங்கப்பாதையான ஸோஜிலா சுரங்கப்பாதைத் திட்டத்தை ஜம்மு காஷ்மீரின் லேஹ் நகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மே 19 அன்று தொடங்கிவைத்தார். 14.2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும் இந்தச் சாலை சுரங்கப்பாதை நாட்டின் மித நீளமான சுரங்கப்பாதையாகவும் இருக்கும். இந்தச் சுரங்கப் பாதை ஸோஜிலா கணவாயைக் கடப்பதற்கான நேரத்தை 3.5 மணி நேரத்திலிருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ரூ. 6,809 கோடி செலவில் கட்டப்படும் இந்தச் சுரங்கப்பாதை திட்டம் நிறைவடைய ஐந்து ஆண்டுகள் ஆகும். 11,578 அடி உயரத்தில் ஸ்ரீநகர்-கார்கில்-லேஹ் தேசிய நெடுஞ்சாலையில் இந்தக் கணவாய் அமைந்திருக்கிறது.
முதல் மிதக்கும் அணுமின் நிலையம்
உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் ரஷ்யாவின் முர்மன்ஸ்க் நகரத்தில் மே 19 அன்று திறக்கப்பட்டது. ‘அகடமிக் லமோனோசவ்’ (Akademik Lomonosov) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் 144 மீட்டர் நீளத்திலும் 30 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. 21,500 டன்களைத் தாங்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அணுமின் நிலையத்தில் 69 பேர் கொண்ட குழு பணியாற்ற இருக்கிறது.
ரஷ்யாவின் வடக்கு ஆர்க்டிக் பகுதியில் வசிக்கும் இரண்டு லட்சம் மக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக, இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சூழலியல் நிபுணர்கள் ‘அணு டைட்டானிக்’, ‘பனிக்கட்டியில் அமைக்கப்படும் செர்னோபில்’ என்று இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT