Published : 16 Jun 2024 08:15 AM
Last Updated : 16 Jun 2024 08:15 AM
அண்மையில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நான் கண்ட காட்சி இது. அந்த வீட்டில் ஒரு முதியவர் இருக்கிறார். அவருடைய வயது காரணமாக யாராவது அவர் உடனிருப்பது அவசியம் என்கிற நிலை. அவருடைய மருமகள் தான் சொந்தமாக வைத்திருக்கும் உணவகத்தைக் கவனித்துக்கொள்ள வெளியே செல்ல நேர்ந்ததால் தன்னுடைய மருமகளிடம் முதியவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
அந்த இளம்பெண் அயர்ந்து தூங்கிவிட்டதால் (தற்போதுதான் குழந்தை பெற்றவர்), மதிய உணவைப் பரிமாற ஆள் இல்லாமல் முதியவர் அவரே எடுத்துப் போட்டுச் சாப்பிடுகிறார். உணவுக்கு முன்னும் பின்னும் எந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் குழம்பிப்போய், கடைசியில் மாத்திரை போடாமல் உறங்கிவிட்டதால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக நீண்டது அந்தக் காட்சி. இறுதியில் அந்த இளம்பெண்ணுக்குக் குற்றவுணர்வு.
இதைப் பெரும்பாலான பெண்களின் நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்து வயது ஆண்களையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பெண்களுக்கு எழுதப்படாத விதி. நம் வீட்டு முதியவர்களைக் கனிவோடு பார்த்துக்கொள்வது அவசியம். ஆனால், அவர்களால் செய்ய முடிந்த சில வேலைகளைக்கூட நாமே செய்து, அவர்களை மிகை அன்பால் முடக்கி வைப்பது அவர்களது உடலுக்கும் நம் மனதுக்கும் பிரச்சினைகளையே உண்டாக்கும். வண்ணங்களை வைத்தோ வடிவம், அளவுகளை வைத்தோகூட மாத்திரைகளை இனம் கண்டுகொள்ள முதியவர்கள் பழகிக்கொள்வது நல்லது. வீட்டில் யாரும் இல்லாதபோது இது கைகொடுக்கும். எல்லாக் குற்றவுணர்வையும் நம் வீட்டுப் பெண்களின் மேல் சுமத்தாமல் தங்களால் முடிந்த செயல்களைத் தாங்களே செய்துகொள்ள ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்காக அல்ல, தங்களுக்காக.
- லக்ஷ்மி ஸ்ரீ, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT