Last Updated : 13 Jun, 2024 04:27 PM

 

Published : 13 Jun 2024 04:27 PM
Last Updated : 13 Jun 2024 04:27 PM

வேலைவாய்ப்பை அள்ளித் தரும் ‘உளவியல்’ படிப்புகள்

அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல், மருத்துவம் போன்று பல பாடப்பிரிவுகளில் படிக்கும் கோட்பாடுகள், கொள்கைளை அன்றாட வாழ்வில் 100% பயன்படுத்தவோ உணரவோ அல்லது அனுபவிக்கவோ முடியாது. ஆனால், தினசரி வாழ்க்கையில் காலை முதல் இரவு வரை ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பயனளிப்பது உளவியல் (Psychology) தொடர்பான படிப்புகள்தான்.

மனநல மருத்துவர், உளவியலாளர் - வேறுபாடு என்ன?

மனித மனத்தின் சிந்தனைகள், உணர்வுகள், எண்ணங்கள், நினைவாற்றல், ஆளுமைப்பண்புகள், நடத்தைகள், மனநலக் குறைபாடுகள் போன்று பலவற்றையும் பற்றிப் படிப்பதுதான் உளவியல் படிப்பு. இதில், மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த பிறகு மனநலம் தொடர்பாகச் சிறப்புப் படிப்பைப் படித்திருப்பார். மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரை, மின் அதிர்வு போன்றவற்றைக் கொடுத்து சிகிச்சை அளிப்பார். ஆனால், உளவியலாளர் (Psychologist) என்பவர் உளவியல் படிப்பில் முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றவராக இருப்பார். உளவியலாளர் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்க முடியாது. உளவியல் பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளை மட்டும் கூறுவார்.

கல்வித்தகுதி

பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலைப் படிப்பாக உளவியல் படிப்பைத் தேர்வு செய்யலாம். ஆனால், சில கல்லூரிகள் பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கின்றன. இப்பாடப்பிரிவு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது. இந்திய அளவில் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டும் இதற்கென்று தனி நுழைவுத் தேர்வை நடத்துகின்றன.

இளநிலைப் படிப்பில் உளவியல் தொடர்பான பொதுவான அடிப்படை கருத்துகள் கற்பிக்கப்படுகின்றன. முதுநிலைப் படிப்பில் சிறப்புப் பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். ‘Clinical Psychology’, ‘Counseling Psychology’, ‘Sports Psychology’, ‘Applied Psychology’, ‘Forensic Psychology’, ‘Industrial and Organizational Psychology’, ‘Educational Psychology’ போன்ற சிறப்புப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். சில கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுப் (Integrated M.Sc) படிப்பை வழங்குகின்றன. மூன்றாண்டு பி.எஸ்சி உளவியல், முதுநிலையில் எம்.எஸ்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றைத் தவிர தகவல் பரிமாற்றத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன், உயர்ந்த அளவில் உணர்வு நுண்ணறிவு (Emotional Quotient), ஆராய்ந்தறியும் திறன், பொறுமை, பிறர் நிலையில் தன்னைப் பொருத்திப்பார்த்து பாதிக்கப்பட்டவரின் பிரச்சினைகளைக் கேட்டறிவது ஆகியவை உளவியல் துறையில் பணியாற்ற விரும்புவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள்.

பெருகும் வேலைவாய்ப்புகள்

தொண்டு நிறுவனங்கள், முதியோர் காப்பகங்கள், மறு வாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மனநல ஆலோசகர்களாகப் பணியாற்றலாம். பள்ளிகளில் கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசகராகப் பணியாற்றலாம். அரசுப் பணியைப் பொறுத்தவரை தமிழக அரசின் சிறைத்துறையில் ஆலோசகராகப் பணியாற்றலாம். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வுத் துறையில், சமூக நலத்துறை - மகளிர் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றலாம். இப்பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. முதுகலைப் பட்டத்துடன் பி.எட்., முடித்து ஆசிரியராகப் பணியாற்றலாம். முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றலாம். இவை மட்டுமின்றி ராணுவம், தொழில்துறை, விளையாட்டுத்துறை போன்றவற்றிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சொந்தமாகவும் உளவியல் ஆலோசனை மையம் நடத்தலாம்.

மனநலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துவருகிறது. கரோனாவுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மனநல மருத்துவர், உளவியலாளர் ஆகியோரின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) அறிக்கையின்படி, இந்தியாவில் மனநல சிகிச்சை பணியாளர்களின் எண்ணிக்கை தேவையைவிட மிக மிகக் குறைவாகவே உள்ளது என்றும் 2032ஆம் ஆண்டில் இவர்களுக்கான தேவை 11% உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

- கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x