Published : 08 May 2018 10:48 AM
Last Updated : 08 May 2018 10:48 AM
ச
ர்வதேச உழைக்கும் ஆண்கள் சங்கத்தின் ‘பாஸல் காங்கிரஸ்’ நிகழ்ச்சி 1869-ல் சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரத்தில் நடைபெற்றது. இதன் பொதுச்சபைக் கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ், ‘பொதுக் கல்வி’ என்ற தலைப்பில் இரண்டுமுறை உரையாற்றினார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இடதுசாரிச் சிந்தனைகொண்ட சோஷலிஸ்ட்டுகள், தொழிற்சங்கவாதிகள் 75 பேர் முன்னிலையில் அவர் ஆற்றிய உரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இலவசக் கட்டாயக் கல்வி, உடல்-அறிவுசார் கல்வி, பள்ளியில் வர்க்க அரசியலை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட வெவ்வேறு விஷயங்கள் தொடர்பாகத் தன்னுடைய கருத்தை மார்க்ஸ் முன்வைத்தார். 149 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் முன்வைத்த கருத்துகள் இன்றைக்கும்; சொல்லப்போனால் இன்றைய சூழலில் நமக்கும் அவசியம் தேவைப்படுகின்றன. அவற்றின் சுருக்கம்:
கல்வி தொடர்பாக விசித்திரமான இரண்டு கருத்துகள் எப்போதுமே தொக்கி நிற்கின்றன. ஒருபுறம், சரியான கல்வி அமைப்பை நிலைநாட்டச் சமூகச் சூழலில் மாற்றம் தேவை என்பது. மறுபுறம் சமூகச் சூழலில் மாற்றம் நிகழ்வதற்கே சரியான கல்வி அமைப்பு அவசியம் என்பது. ஆக, இந்த விவாதத்தை விடுத்துத் தற்போது எங்கு இருக்கிறோமோ அங்கிருந்தே தொடங்குவோமே!
அரசுதான் செலவழிக்க வேண்டும்!
கல்வி கட்டாயம் என்பதை இந்தப் பொதுக்கூட்டம் எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். ஆனால், குழந்தைத் தொழிலாளிகள் உருவாகாமல் தடுக்க, வயது வந்த உழைப்பாளிகளுக்குச் சரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
கல்விக்கு அரசு செலவழிக்க வேண்டியிருப்பதால் இலவசக் கல்வி என்பது வீண் என்கிறார்கள் முதலாளித்துவவாதிகள். அவர்கள் கல்லூரி அளவிலும் கல்வி இலவசமாக வழங்கப்படுவதை ஆதரிப்பதில்லை. ஆனால், யாராவது செலவழித்துத்தானே ஆக வேண்டும்! அதற்காக ஏழைகளைச் செலவழிக்கச் சொல்லக் கூடாது. அதை வழங்குவது அரசின் கடமை.
இந்தக் கூட்டதில் பிரஷ்ய (பழைய ஜெர்மனி) நாட்டுக் கல்வித் திட்டம் சிறப்பானதாகப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பிரஷ்ய கல்வித் திட்டத்தின் இலக்கு, நல்ல சிப்பாய்களை உருவாக்குவது மட்டுமே என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பாகுபாட்டைக் களைய…
அடுத்து, ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கோடு தற்போது நடைபெறும் கலந்துரையாடல் தொடங்கப்பட்டது. ஜெனீவா தீர்மானம் என்பது ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற உடல்சார் கல்வியோடு அறிவுசார் தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே. வேலையின் சூட்சுமங்களைப் பயில்பவர்கள், கற்றுக்கொள்ளவதை மேம்படுத்த தொழில்நுட்பப் பயிற்சிகள் உதவும் என்பது உண்மை. இதன்மூலம் உழைப்புப் பிரிவில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாகுபாட்டைக் களையலாம் என்கின்றனர் தொழிலாளர் வர்க்க எழுத்தாளர்கள். அதுவே சரி.
முக்கியமாக, முதலாளித்துவப் பொருளாதார அரசியல் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கான கல்வியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது குறித்துச் சில நாட்களாக இங்கு விவாதிக்கப்பட்டது. ஆனால், வர்க்கப் பிரச்சினைகளைப் பள்ளியில் போதிக்கக் கூடாது. வாழ்க்கையின் அன்றாடப் போராட்டங்களைப் பெரியவர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். இயற்பியல், அறிவியல், இலக்கணம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளைப் பள்ளிகளில் கற்பிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT