Last Updated : 06 Jun, 2024 05:29 PM

 

Published : 06 Jun 2024 05:29 PM
Last Updated : 06 Jun 2024 05:29 PM

கெமோமைல் முதல் ராய்போஸ் வரை... சூடா ஒரு டீ சொல்லுங்க!

சோர்வாக உணரும் நேரத்தில் டீ குடிக்க நினைக்கும் பலரது பொதுவான தேர்வாக இஞ்சி டீ, மசாலா டீ, பிளாக் டீ போன்றவையே இருக்கின்றன. ஆனால், நமக்குத் தெரியாத ஏராளமான டீ ரகங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.

கெமோமைல் டீ: கெமோமைல் தாவரத்தின் உலர்ந்த பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான மூலிகை டீ இது. உடல்நலப் பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வாக இந்த டீ பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். உலர்ந்த கெமோமைல் பூக்களைக் கொதிக்க வைத்த தண்ணீரில் சேருங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு பூக்களைத் தண்ணீரில் இருந்து வடிகட்டுங்கள். பூக்கள் நீண்ட நேரம் இருந்தால் சுவை திடமாக இருக்கும். பூக்கள் ஊறிய நீரில் தேன் சேர்த்துப் பருகுங்கள். விரும்பினால் சில துளி எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கலாம். ஐஸ் டீ குடிக்க விரும்பினால் ஐஸ் கட்டிகளையும் சேர்க்கலாம். ஐஸ் டீயில் காய்ந்த பூக்களை அதிகமாகச் சேர்த்துக் குடித்தால் நன்றாக இருக்கும்.

இந்த கெமோமைல் டீ, மன அழுத்தம், தசைப் பிடிப்பு ஆகியவற்றுக்கு நல்லது. தூக்கத்தைத் தருவதுடன் செரிமானத்தையும் ஊக்குவிக்கும். மாதவிடாய் நேரத்து வலியைக் குறைக்கவும், புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கவும் இது உதவுகிறது. சளி மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் தரும். சருமத்தில் முகப்பரு வராமல் காப்பதுடன் தோலின் வறட்சியையும் குறைக்கிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள், ஏதேனும் மருந்துகளை உட்கொள்பவர்கள் இந்த டீயை அருந்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

புதினா டீ - நறுமணம் நிறைந்த இந்த டீ ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஒரு கப் கொதிக்கும் நீரில் புதினா இலைகளைச் சேர்த்துத் தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பருகலாம். விரும்பினால் ஐஸ் கட்டிகள் சேர்த்துச் சில்லென்றும் பருகலாம். செரிமானம் தொடர்பான வாயுக்கோளாறு, அஜீரணம், தசை வலி போன்றவற்றுக்கு இது நல்லது. வாயில் உள்ள துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போரிடுகிறது.

ராய்போஸ் டீ - இது ரெட் புஷ் டீ என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா வயதினருக்கும் ஏற்ற பானம் இது. இது நம் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைப்பது அரிது. இணையத்தில் கிடைக்கிறது. 1 அல்லது 2 டீஸ்பூன் ராய்போஸ் தேயிலைத் தூளை எடுத்துச் சூடான தண்ணீரில் சேருங்கள். கூடுதல் சுவைக்காக எலுமிச்சைச் சாறு, தேன் அல்லது பால் சேர்க்கலாம்.

இந்த டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது வயிற்றுப் பிடிப்பு மற்றும் அஜீரணத்தையும் கட்டுப்படுத்துகிறது. தோல் மற்றும் எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம், மக்னீசியம், புளோரைடு போன்ற சத்துக்களை இது மேம்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x