Last Updated : 03 Jun, 2024 11:48 AM

 

Published : 03 Jun 2024 11:48 AM
Last Updated : 03 Jun 2024 11:48 AM

சாதனையாளர்களிடம் இருக்கும் ஒரு மேஜிக்! | சக்ஸஸ் ஃபார்முலா - 3

ஒரு மாதம் சரியாகத் திட்டமிட்டு உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாகவும் இருந்தார் சச்சு. ஓசிடி எல்லாம் காணாமல் போய்விட்டது என்று அவர் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது. இது எல்லாம் நடந்து இரண்டு மாதம் ஆனது. இப்பொழுது வீட்டுக்கு வந்தவரைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. குறைந்த எடை மீண்டும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்தது.

“உன்கிட்ட பேசணும்” என்றார் சச்சு.

“நான் தோத்துப் போயிட்டேன். நான் பட்ட கஷ்டம் எல்லாம் வீண். டாக்டர் திருப்பி மருந்து சாப்பிடணும்னு சொல்லிட்டாங்க” என்று கண் கலங்கினார்.

“எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கண்டிப்பா இருக்கும். நீ போட்ட திட்டம் எல்லாம் சரி. ஆனா, அதைச் செய்ற ஒழுங்குதான் உன்கிட்ட இல்லாம போச்சு.”

“இப்ப என்ன செய்யணும் சொல்லு?”

”பத்து விஷயம் சொல்றேன் பிடிச்சிக்கோ. விட்டுட்டா நஷ்ட்டம் உனக்குத்தான் என்பதை ஞாபகத்துல வச்சுக்கோ.”

பத்து வழி முறைகள்:

1. ஒரு நாள், ஒரு மாதம் இல்லை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறோம் என்கிற தெளிவு வேண்டும்.

2. எல்லாம் சரியாக இருக்கும் போது மட்டுமில்லை, எதுவும் சரியில்லாமல் போகும் போதும் எடுத்த காரியத்தைச் செய்யும் பழக்கத்தை விடக் கூடாது.

3. சோர்வாகும் போது, நீங்கள் தொடர்ந்து செய்வதால் ஏற்படப் போகும் நன்மையை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும், அது செய்ய தேவையான விஷயங்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்குத் தேவையில்லாத நொறுக்குத் தீனிகளைக் கண்களில் படாமல், கைகளுக்கு எட்டாமல் வைக்க வேண்டும்.

5. சரியான நேரம் வரும் வரை காத்துக் கொண்டிருப்பது என்பது உதாவாக்கரைக்கான கல்யாண குணம் என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும.

6. எடுத்துக் கொண்ட வேலை, அவ்வப்போது எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

7. ஒரு நாள் செய்யவில்லை என்றாலும் ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்க நண்பர்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

8. ஆரம்பிக்கும் போது எல்லாம் உற்சாகமாக இருக்கும். நாள்கள் போக போகச் சலிப்பு வரும். ஒரே மாதிரியான வேலை போர் அடிக்கும். மனதை உற்சாகப்படுத்த ஒரு நாள் வழக்கத்திற்கு மாறான ஒன்றைச் செய்வது பலன் கொடுக்கும்.

9. சில நாள்கள் எதையும் செய்ய மனம் ஒப்புக் கொள்ளாது. இல்லை இதுவரை செய்ததற்கான பலன் கண்ணில் படாமல் படுத்தும். இதைக் கடந்து போக வேண்டும் என்கிற மன உறுதியை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.

10. இலக்கை எட்டும் வரை ஒவ்வொரு நாளும் அதே பழக்கத்தை வழக்கமாக வைப்பது மட்டுமே ஒழுக்கத்தின் தாரக மந்திரம். இதுவே சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.

”புரியுது, ரெண்டு மாசம் பண்ணதை வாழ்க்கை முறையா மாத்திக்கிட்டிருந்தா, இப்படி எனக்கு ஒரு நிலைமை வந்திருக்காது. இனி எடுத்துக் கொண்ட செயல்ல கவனமா இருந்து உன் பேரைக் காப்பாத்துவேன்” என்று சச்சு விடைப் பெற்றார்.

| சக்சஸ் ஃபார்முலா நீளும்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x