Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM

மின்சாரப் பணிக்கான தகுதிச் சான்றிதழ்கள்

மின்னியல் துறையில் பட்டம், பட்டயம் அல்லது சான்றிதழ் படிப்புகளைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது. மின்சாரப்பணிகளைச் செய்யத் தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மின்சாரப் பணிகளைச் செய்வதற்கான தகுதிச் சான்றிதழ்களைச் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிற மின் உரிமம் வழங்கும் வாரியம் (Tamilnadu Electrical Licensing Board) வழங்கி வருகிறது. அது சென்னையில் உள்ளது.

தகுதிச் சான்றுகள்

மின் உரிமங்களை வழங்குகிற இந்த வாரியம் மின்கம்பி உதவியாளர் (Wireman Helper), மின்கம்பியாளர் (Wireman), மின்சார மேற்பார்வையாளர் (Electrical Supervisor) மற்றும் மின் உற்பத்தி நிலைய இயக்கம் மற்றும் பராமரிப்பு (Electrical Supervisor) எனும் நான்கு வகையான மின்சாரப் பணிகளுக்கான தகுதிச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்தத் தகுதிச் சான்றிதழ்கள் அனைத்துக்்கும் வாரியம் குறிப்பிடத்தக்க தகுதியை நிர்ணயித்துள்ளது.

மின் கம்பி உதவியாளர்

மின்கம்பி உதவியாளராகப் பணியாற்ற ஒருவர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரால் நடத்தப்படும் மின்கம்பி உதவியாளர் தகுதிச் சான்றிதழ் (Wireman Helper Competency Certificate) தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்று இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் மின் உரிமம் வழங்கும் வாரியம் தனது தகுதிச்சான்றை வழங்குகிறது.

மின் கம்பியாளர்மின்கம்பியாளர் பணி செய்ய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரால் நடத்தப்படும் மின்கம்பியாளர் (Wireman) அல்லது மின்சாரப் பணியாளர் (Electrician) தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்.

அல்லது இந்த வாரியத்தால் வழங்கப்பட்ட மின்கம்பி உதவியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்ற பின்பு, இடைவெளி எதுவுமின்றி புதுப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் மின் பணிகளில் அனுபவம் பெற்றவர்கள் வாரியத்தால் நடத்தப்படும் மின்கம்பியாளர் தகுதிச் சான்றிதழுக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பெற்ற தேர்ச்சிச் சான்றிதழ் .

மின்சார மேற்பார்வையாளர்

மின்சார மேற்பார்வையாளர் பணி செய்ய வேண்டும் என்றால் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்னியல் துறைப் பட்டயம் அல்லது இந்தியாவிலுள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகத்தின் மின்னியல் துறைப் பட்டம் அல்லது கொல்கத்தாவிலுள்ள இந்தியப் பொறியாளர்கள் நிறுவனத்தின் ஏ.எம்.ஐ.ஈ (A.M.I.E) எனப்படும் மின்னியல் பொறியியல் படிப்பின் ஏ மற்றும் பி பிரிவுச் சான்றிதழ் மற்றும் உயர் மின்னழுத்த நிறுவல் பணிகளில் நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகளில் இரண்டு வருட அனுபவச் சான்றிதழ் இருக்க வேண்டும்.

அல்லது சென்னையிலுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வழங்கிய மின்சார மேற்பார்வையாளர் தகுதிச் சான்றிதழ் இருக்க வேண்டும். மேற்கண்ட அடிப்படையில் தகுதிச் சான்றுகளைப் பெற்றால்தான் நம்மால் மின்சாரப்பணிகளைச் செய்யமுடியும்.

- தேனி. மு. சுப்பிரமணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x