Last Updated : 17 Apr, 2018 10:58 AM

 

Published : 17 Apr 2018 10:58 AM
Last Updated : 17 Apr 2018 10:58 AM

படிப்போம் பகிர்வோம்: வாசிப்பு வழிகாட்டி

உங்களை முழுமையாக ஒன்றிடம் ஒப்படைக்கும்போதுதான் உங்களால் அதைக் கற்றுணர முடியும். ஆனால், விருப்பம் இல்லாமல் கற்கும்போது தகவல் திரட்டு மட்டுமே நிகழ்கிறது. புதினத்தை வாசிப்பதுபோன்று கற்றலும் ஓர் அனுபவம். மனம் லயித்த நிலையில் மட்டுமே அது சாத்தியம்” – ஜே.கிருஷ்ணமூர்த்தி

பள்ளியிலும் கல்லூரியிலும் வருடக் கணக்கில் எத்தனையோ பாடப்புத்தகங்களைப் படித்தாலும் அவை நம் ஆளுமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. காரணம், அவை திறனை வளர்க்கும் நோக்கத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. மதிப்பெண்ணைக் குவிக்கும் போட்டிச் சூழலில் மாணவர்களால் அப்புத்தகங்களில் லயித்துப்போக முடிவதில்லை. ஆனால், தனி மனிதர்களின் சிந்தனையைச் செதுக்கி அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியை உயிர்பெறச் செய்யும் எத்தனையோ படைப்புகள் வகுப்பறைக்கு வெளியே இருக்கின்றன. கல்விச் செயல்பாட்டாளர் மலாலா கூறியதுபோல, “ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர் ஆகியவற்றால் உலகையே மாற்ற முடியும்”. அப்படி வெவ்வேறு துறை சார்ந்த சில முக்கிய நூல்களை அத்துறை சார்ந்த ஆளுமைகள், மாணவர்களின் வாசிப்புக்காகத் தந்த பரிந்துரைகள்:

அறிவியல் அதிசயங்கள்

ஆயிஷா இரா. நடராசன், அறிவியல் எழுத்தாளர்:

‘நேனோ – அடுத்த புரட்சி’, மோகன் சுந்தர ராஜன், நேஷனல் புக் டிரஸ்ட்.

மேற்கத்திய நாடுகளையே சுற்றிச் சுற்றிவரும் அறிவியல் நூல்களுக்கு மத்தியில் நம் மண்ணின் நேனோ ஆய்வு மகத்துவங்களைப் பேசும் அபூர்வப் புத்தகம்.

‘நெஞ்சை ஈர்க்கும் வானவியல்’, வி.கொமரோவ், தமிழில் : அ. நடராஜன், புக்ஸ் பார் சில்ரன்.

வெறும் தகவல்களை அடுக்கடுக்காகத் தராமல் வானியலின் புதிய சிக்கல்களை அலசி ஆராய்வதில் நமக்கு வழிகாட்டும் புத்தகம். நியூட்ரான் நட்சத்திரங்கள், கருந்துளைகள், அதிவேகமாக விரிவடையும் பிரபஞ்சம் என அறிவியல் வாசிப்புக்குள் நுழையும் யாரையும் வசப்படுத்தும் நூல் இது.

 ‘The Grand Design ’, Stephen Hawkings.

ஐன்ஸ்டீனுக்குப் பிறகு கோட்பாட்டு இயற்பியல் துகளியல், அலை இயற்பியல் என இரு வேறு திசைகளில் பயணிக்கிறது. அதன் பாதைகளை இயற்பியல் உலகின் உள்ளேயே இருந்துகொண்டு மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் சக்கர நாற்காலி அறிஞர் ஸ்டீவன் ஹாக்கிங்.

‘விந்தை மிகு பேரண்டம்’, டாக்டர் ப.ஐயம் பெருமாள், ஆர். சாமுவேல் செல்வராஜ், கிரேஸ் பப்ளிகேஷன்ஸ்.

பேரண்டம் குறித்த மினி என்சைக்ளோபிடியா இது. நம் பாடப்புத்தகங்கள் இதுபோல சுவையாக ஏன் இருப்பதில்லை எனும் ஏக்கத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது.

 ‘மௌன வசந்தம்’, ரேச்சல் கார்சன் (தமிழில்: பேரா ச.வின்சென்ட்), எதிர் வெளியீடு.

உலகுக்கே வழிகாட்டி என்று போற்றப்பட்ட அமெரிக்கத் தொழில் வளர்ச்சி எத்தகைய பேராபத்துமிக்கது என்பதைத் தோலுரித்த முதல் முயற்சி. பூச்சிக்கொல்லி ரசாயன விவசாயம் முதல் லாப நோக்கத்துடன் நதிகளை நச்சாக்கும் கார்ப்பரேட் திட்டங்கள் வரை அனைத்தையும் போட்டுடைக்கும் புத்தகம்.

அறிய இலக்கியங்கள்

பேராசிரியர் வீ. அரசு, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முன்னாள் தலைவர்:

‘குறுந்தொகை’

தமிழரின் செவ்வியல் இலக்கிய மரபைக் காண்பிக்கும் பாடல்கள் குறுந்தொகை அளவுக்கு வேறு எந்த நூலிலும் இல்லை. அது ஆண், பெண் உறவின் நுட்பமான தருணங்களைக் கொண்ட, இயற்கையை முதன்மையாகப் பேசும் பண்பை முதன்மையாகக் கொண்ட படைப்பு. உ.வே.சா.-வின் உரையில் படிப்பது நல்லது.

‘ம. சிங்காரவேலு - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’, கே. முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியம்.

தமிழ்ச் சமூகத்தில் மார்க்சிய சிந்தனை மரபு எப்படி உருவானது என்பதை சிங்காரவேலர் வாழ்க்கை வழியாகச் சொல்கிறது இந்த நூல்.

‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்’, பெரியார் ஈ.வே.ராமசாமி - தொகுப்பு பசு. கவுதமன், ஐந்து தொகுதிகள்.

மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் சார்ந்த தொகுப்பு. தமிழகத்தில் பெரியாரியல் சிந்தனை எவ்வகையான பரிமாணங்களில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

‘புதுமைப்பித்தன் - விமர்சனங்களும் விஷமத்தனங்களும்’, தொ.மு.சி. ரகுநாதன்.

நவீன கால எழுத்தாளருக்கும் அவர் வாழ்ந்த சமூகத்துக்கும் இடையிலான உறவுநிலைகளைப் பேசும் நூல்.

‘Tamil Oratory and the Dravidian Aesthetic - Democratic Practice in South India', Bernard Bate.

 மேடைப் பேச்சின் ஊடாக திராவிட அரசியல் உருவாக்கிய உரையாடல் மரபைப் பற்றி எழுதப்பட்ட நூல். தென்னிந்திய வரலாற்றின்

முக்கியத்துத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஆய்வுப்படைப்பு இது.

கலைக் களஞ்சியம் சி. மோகன், எழுத்தாளர் - விமர்சகர்:

‘சிவ நடனம்’, ஆனந்த குமாரசாமி

இந்திய நடனத்தின் தத்துவார்த்த அம்சங்களை, நாடகார்த்த உத்திகளின் அழகியல் நுட்பங்களை வெகு தீர்க்கமாக அணுகிய ‘Dance of Siva’ நூலின் தமிழாக்கம், ‘சிவ நடனம்’. இந்தியக் கலை மரபின் ஞானத்தைக் கற்றுக்கொடுக்கும் நூல்.

‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’,  மயிலை சீனி. வேங்கடசாமி

வரலாற்றோடு நம்மைப் பிணைக்கும் முகமாக வேங்கடசாமி மேற்கொண்ட வரலாற்று ஆய்வுகள், பல அரிய நூல்களை நமக்குத் தந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத் தகுந்த ஆவணம் இது.

l‘அன்று பூட்டிய வண்டி’, ந. முத்துசாமி.

நாட்டார் கலைகளின் மீது பார்வையைத் திருப்பிய நூல். தெருக்கூத்துக் கலையின் மேன்மைகளையும், ஒரு பார்வையாளனாகப் பெற்ற வளமான அனுபவங்களையும் மிகுந்த அக்கறையுடன் பதிவு செய்திருக்கும் நூல்.

‘நாட்டார் வழக்காற்றியல்’, தே. லூர்து.

நாட்டார் கலைகள், பண்பாடுகள் மீது மிகுந்த கரிசனம் கொண்டிருந்த ஆய்வறிஞர். நாட்டார் மரபுகள்மீது வெளிச்சம் பாய்ச்சிய முதன்மையான நூல்.

 ‘The Art of the Novel’, Milan Kundera

மனித இருப்புக்கான புதிய சாத்தியங்களைக் கண்டடையும் ஒரு மகத்தான கலையாக நாவலைக் கொண்டாடுகிறார் நாவலாசிரியர். இவருடைய பார்வை ஒளியில் பிரகாசிக்கும் அற்புதப் புத்தகம்.

வரலாற்றுப் பெட்டகம் பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியன், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்:

‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்’, ராஜன்.கே.

இலக்கியச் சான்றுகளை மட்டுமே துணையாகக்கொண்டு கட்டமைக்கப்பட்ட பண்டைத் தமிழக வரலாற்றை, தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தும் நூல்.

‘பண்டைய இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும்’,
கோசாம்பி.டி டி.

இதுவரை எழுதப்பட்ட இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதுவதே நம்முன் உள்ள பணி என்று கூறியவர் கோசாம்பி. அதற்கேற்ப அவர் எழுதிய இந்நூல் புதிய வரலாற்றை அறிமுகம் செய்கிறது. 

‘இன்றைய இந்தியா’, ரஜனி பாமிதத்.

ஆங்கில ஆட்சியில் உருவான இந்திய தேசியத்தின் மறுபக்கத்தை ஆராய்கிறது.

‘மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்’, எம்.இலியீன், யா.ஸெகால்

மனிதகுல வரலாற்றைக் கூறும், ’How Man became a Giant’ சிறந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு.

‘இந்தியப் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’, பிபின் சந்திரா

இந்திய தேசிய இயக்கத்துடன் விவசாயிகள், ஆலைத் தொழிலாளிகள், ஆலை உரிமையாளர்கள், மூளை உழைப்பாளிகள் கொண்ட உறவையும் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் நூல்.

கல்வி உலகம்

ச.மாடசாமி, பிரபலக் கல்வியாளர்:

 ‘பகல் கனவு’, கிஜுபாய் பாத்கேக (தமிழ் மொழிபெயர்ப்பு), நேஷனல் புக் டிரஸ்ட்

‘குழந்தைகளின் காந்தி’ என்று கொண்டாடப்பட்ட கிஜுபாயின் ஒப்பற்ற வகுப்பறை அனுபவம் இந்நூல். பாடத்திட்டத்தில் சிக்கிக் கிடக்கும் கல்வியை மீட்டெடுக்கும் முயற்சி.

‘இது யாருடைய வகுப்பறை’, ஆயிஷா இரா. நடராசன்

 கல்வி மொழி தமிழில் உருவாக முக்கியக் காரணமாக இருந்தவர் ஆயிஷா நடராசன். வகுப்பறைகளின் வரலாற்றைச் சொல்லும் நூல் இது.

‘கல்வி ஓர் அரசியல்’, வே. வசந்திதேவி.

வகுப்பறைகளை ஆட்டிப் படைக்கும் சக்திகளைப் புரிந்துகொள்ள உதவும் நூல்.

‘டோட்டோ சான் - சன்னலில் சின்னஞ் சிறுமி’ (தமிழ் மொழிபெயர்ப்பு), டெட்சுகோ குரோயாநாகி, நேஷனல் புக் டிரஸ்ட்

விதிகள், கட்டுப்பாடுகள் இல்லாத அன்புக்கு இலக்கணமான புகழ்பெற்ற பள்ளி தந்த அனுபவங்கள். இரண்டாம் உலகப் போரால் சிதைந்த கனவு.

‘Pedagogy of the oppressed’, Paulo Freire.

அறிவொளி நாட்களில் சோர்வும் உற்சாகமும் மாறி மாறி வந்த பொழுதுகளில் கூடவே இருந்த வார்த்தைகள், சிந்தனைகள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x