Published : 15 May 2024 05:29 PM
Last Updated : 15 May 2024 05:29 PM
கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் எளிய, தளர்வான ஆடைகளை அணியவே பலரும் விரும்புவார்கள். ஆனால், வேலை, திருமணங்கள் அல்லது விருந்துகளுக்குச் சாதாரண உடை அணிய முடியாது. ஆடைகளை அணிவதில் நாம் மகிழ்ச்சியாகவும் சௌகரியமாகவும் உணர வேண்டும். பிறரும் நம் ஆடைத் தேர்வைப் பாராட்டும் வகையில் அணிய வேண்டும்.
Co Ord Sets எனப்படும் வெஸ்டர்ன் ஆடைகள்தான் இப்போதைய டிரெண்ட். சட்டை - பேன்ட்ஸ் வகையில் அமைந்த இவை பருத்தித் துணியிலும் பாரம்பரிய டிசைனிலும் கிடைக்கின்றன. இவை கல்லூரி, தொழில்முறை சந்திப்புகள், அலுவலகம் போன்ற்றவற்றுக்கு ஏற்றவை. டி-ஷர்ட்கள், வண்ணச் சட்டைகள், கிராப் டாப், லினன் பேன்ட்ஸ்களையும் அணியலாம். இவை லகுவாக உணர வைக்கும்.
வெயிலில் அதிகமாக வியர்க்கும் என்பதால் கூடுமானவரை பருத்திச் சட்டைகள், பேன்ட்ஸ், பைஜாமா - பேன்ட்ஸ், பலாஸோ, குட்டையான குர்தி போன்றவற்றை அணியலாம். நீங்கள் பருத்தி ஆடைகளை விரும்பி அணிவீர்கள் என்றால் பருத்தித் துணியில் உங்களுக்குப் பிடித்த டிசைனை வடிவமைத்து அணியுங்கள்.
நீங்கள் புதிய டிரெண்ட் எதையும் விரும்பாதவராக இருந்தால், காட்டன் சுடிதார் - ஸ்ட்ரெயிட் பேன்ட்ஸ் அணியலாம். இது எளிமையான தொழில்முறைத் தோற்றத்தைத் தரும்.
அலுவலகத்துக்கு: வியர்வை ஊற்றெடுக்கும்போது தலையை எப்படி வாருவது என்கிற கவலையா? தலைமுடி உங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க, தலைமுடி உங்கள் கழுத்தைத் தொட முடியாத அளவுக்கு உயர்த்தி கேட்ச் கிளிப் போடுங்கள். அல்லது போனி டெயில் போடலாம். உங்கள் பின்னலுக்கு ஏற்ப பொருத்தமான ஆடையைத் தேர்வு செய்யுங்கள். சிறிய டாலர் வைத்த செயின், சிறிய கம்மல், கருப்புப் பட்டை கைக்கடிகாரம் ஆகியவை அலுவலகத்தில் உங்கள் தோற்றம் குறித்த மதிப்பைத் தரும்.
விழாக்களுக்கு: மாலைநேர விழாக்களுக்கு ஸ்லிட் கேஷுவல் டூ பீஸ் செட், எடை குறைந்த புடவை, பருத்தி கவுன், மேக்ஸி என உங்களுக்கு வசதியானதை அணியலாம். வெஸ்டர்ன் கிராப் டாப்பை நிறைய ப்ளீட்ஸ் கொண்ட பாவாடையுடன் இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைலில் அணியலாம்.
புடவைக்குப் பதிலாக காப்ரி பேன்ட்ஸ் அல்லது டிசைன் செய்யப்பட்ட பேன்ட்ஸ், காஃப்தான் டாப்ஸ், எம்ப்ராய்டரி துப்பட்டாவுடன் சிக்கன்காரி சுடிதார், சின்ன குர்தியுடன் அதே நிறத்தில் பெரிய பார்டர் வைத்த பாவாடை, சரிகை வைத்த துப்பட்டா என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அணியலாம். பருத்தித் தாவணி அல்லது புடவையைப் படகுக் கழுத்து ரவிக்கையுடன் கல் பதித்த நெக்லஸ் அணியலாம்.
ஆடையின் கழுத்து வடிவமைப்புக்கு ஏற்ற நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆடையின் நிறத்தைப் பொறுத்து வளையல்கள், பிரேஸ்லெட்களை அணியலாம். ஆடைக்கு ஏற்ற வண்ணத்தில் நகை இல்லை என்றால் தங்கம் அல்லது வெள்ளியில் மெல்லிய நகைகளைத் தேர்வு செய்து அணியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT