Published : 24 Apr 2018 10:26 AM
Last Updated : 24 Apr 2018 10:26 AM
படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கல்வி அறிவு, தொழில் அறிவு மட்டும் போதாது. ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும்வண்ணம் ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். அதனால்தான், ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 30 லட்சம் நபர்கள் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வை எழுதுகிறார்கள்.
ஐ.இ.எல்.டி.எஸ் என்பது என்ன?
சர்வதேச அளவில் ஒருவரின் ஆங்கில மொழிப் புலமையைச் சோதித்து மதிப்பீடு செய்யும் அமைப்பே இந்த ஐ.இ.எல்.டி.எஸ். இந்த மதிப்பீடின்றி நீங்கள் மேலை நாடுகளில் உள்ள கல்லூரிகளில் நுழையவே முடியாது. அந்தத் தேர்வை எழுதுவதற்கு ஏறக்குறைய ரூ. 11,000 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வின் வடிவமைப்பு
இந்தத் தேர்வு கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பேசுதல் தவிர மற்ற மூன்று பகுதிகளுக்கான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறும்.
கேட்கும் பகுதி
கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும். அந்தப் பகுதியில் நான்கு ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்படும். அந்த ஒலிப்பதிவுகளில் நடைபெறும் உரையாடல்களைச் சார்ந்து கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை நீங்கள் புரிந்து தேர்வுசெய்யும் அடிப்படையில் உங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும். ஆங்கில மொழிப் படங்களை சப்-டைட்டில் இல்லாமல் பார்த்துப் பழகியவருக்கு இதை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.
வாசிப்புப் பகுதி
இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும். நீண்ட கட்டுரையும் குறுகிய கட்டுரையும் வாசிப்பதற்குக் கொடுக்கப்படும். பின்பு அதிலிருந்து 40 கேள்விகள் கேட்கப்படும். அந்தக் கேள்விகள் உங்களது உள்வாங்கும் திறனையும் வாசிக்கும் தன்மையையும் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கும் கருத்துகளை நீங்கள் புரிந்துகொள்ளும் பாங்கையும் பரிசோதிக்கும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலப் புத்தக வாசிப்பைப் பழக்கமாக்குவதன்மூலம் இதை எளிதாக எதிர்கொள்ளலாம்.
எழுத்துப் பகுதி
எழுதுதல் பகுதியில் உங்கள் இலக்கணத் திறனும் நீங்கள் பயன்படுத்தும் சொற்களின் செறிவும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும்.
இது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் உங்களுக்கு வரைபடமோ கிராஃபோ சார்ட்டோ டேபிளோ தரப்படும். அதில் இருக்கும் தரவுகளைப் புரிந்துகொண்டு அதைப் பற்றி நீங்கள் விளக்கம் அளிக்கவோ விவரிக்கவோ வேண்டும்.
இரண்டாம் பகுதியில் கொடுக்கப்படும் தலைப்புக்கு ஏற்ப நீங்கள் கட்டுரை எழுத வேண்டும். வாசிக்கும் பழக்கமும் ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதும் பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் பகுதி மிகவும் எளிதாக இருக்கும்.
பேச்சுப் பகுதி
இந்தப் பகுதிக்கு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தரப்படும். இந்தத் தேர்வில் மட்டும்தான் நீங்கள் தேர்வாளரை எதிர்கொள்வீர்கள். இது மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதி அறிமுகப் படலம். அப்போது உங்களைப் பற்றி ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும். இரண்டாம் பகுதியில் உங்களிடம் ஒரு சீட்டு தரப்படும். ஒரு நிமிட அவகாசத்தில் நீங்கள் அதைப் படித்து உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு அதைப் பற்றி இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். மூன்றாம் பகுதியில் நீங்கள் பேசியதன் அடிப்படையில் தேர்வாளருடன் உரையாட வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் நீங்கள் பேசும் கருத்திலும் அதை உணர்ச்சிகரமாக ஏற்ற இறக்கத்துடன் பேசுவதிலும் கவனம் செலுத்துவது மதிப்பெண் குவிக்க உதவும்.
மதிப்பெண்கள் எவ்வளவு தேவை
இதன் மதிப்பெண்கள் பூஜ்யம் முதல் ஒன்பதுவரை இருக்கும். நான்கு பகுதிகளுக்கும் தனித் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த நான்கு பகுதிகளில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரியே உங்கள் ஒட்டுமொத்த மதிப்பெண். அந்தச் சராசரி ஏழுக்கு மேல் இருந்தால்தான் நல்ல பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கும்.
ஆங்கில மொழியில் நன்கு ஆளுமை கொண்டவர்கள்கூடத் தேர்வு பயத்தில் நிறையச் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். ஆனால்,செலவின்றி நல்ல மதிப்பெண்களை எளிதாகப் பெறுவதற்கு இலவச இணைய வகுப்புகளும் செயலிகளும் உதவும்.
எங்குப் படிக்கலாம்
தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியவுடன் உங்களுக்கு அளிக்கப்படும் புத்தகமும் சிடியும் பயிற்சிக்குப் போதுமானது. கூடுதல் பயிற்சிக்குக் கீழே உள்ள இணைய வகுப்புகளைப் பயன்படுத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT