Published : 08 Apr 2024 06:10 AM
Last Updated : 08 Apr 2024 06:10 AM
ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி... 13
1996-ம் ஆண்டில் ரூ.2 லட்சம் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தை ஆரம்பித்தார் ஆரோக்கியசாமி வேலுமணி. 2021-ல் அந்த நிறுவனத்தை விற்றார். எவ்வளவுக்குத் தெரியுமா? ரூ.5,000 கோடிக்கு.
இந்திய ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தைரோகேர் (Thyrocare) ஒரு முன்னோடி நிறுவனம். மும்பையில் ஒரே ஒரு ஆய்வகத்தைக் கொண்டு நாடு முழுவதும் அது தைராய்டு பரிசோதனைகளை வழங்கியது. அந்த சமயத்தில், இந்திய மருத்துவ பரிசோதனைத் துறையில் இது முன்னுதாரணமற்ற முயற்சி. அதுவும் மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த விலையில் தைரோகேர் சேவை வழங்கியது.
வேலுமணிக்கு எந்தத் தொழில்பின்புலமும் கிடையாது. கோயம்பத்தூரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றுவிட்டு, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.
தைராய்டு பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த அவர், அதில் உள்ள தொழில்வாய்ப்புகளை உணர்ந்ததும் தனது மத்திய அரசு வேலையை உதறிவிட்டு, சொந்தமாக நிறுவனம் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 37.
சாதாரண குடும்பப் பின்புலத்திலிருந்து வந்த ஒருவர், ரூ.2 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனத்தை, 25 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றியது எப்படி? இந்தப் பயணத்துக்கு பின்னிருக்கும் கதை என்ன?
அவருடன் உரையாடினேன்.
உங்கள் இளைமைப் பருவம் எப்படிப்பட்டது? அப்போதே உங்களிடம் தொழில்முனைவுச் சிந்தனை இருந்ததா?
வாழ்ந்துகெட்ட குடும்பம். அப்பா மூலம் எந்த வருமானமும் கிடையாது. பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் அம்மாவின் ஒரே லட்சியமாக இருந்தது. யாராவது நம்மை மேலே தூக்கி விடுவார்கள் என்ற சூழல் கிடையாது. இத
னால், என்னுடைய பத்து வயதிலேயே குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது.
படிப்பு வழியாகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்று நம்பினேன். அரசினர் நல விடுதியில்தான் தங்கி படித்தேன். புத்தகம் வாங்க பணம் கிடையாது. நூலகம் சென்று படித்து கணக்கு பாடத்தில் 200 மதிப்பெண் எடுத்தேன். அது எனக்கு என் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
கல்லூரி முடித்துவிட்டு பல இடங்களுக்கு விண்ணப்பித்தேன். 4 வருடங்கள் நிரந்தர வேலை இல்லாமல் அலைந்தேன். ஆனால், நான் இப்படியே இருந்துவிட மாட்டேன். விரைவிலேயே எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக இருந்தது.
வாராவாரம் நூலகம் செல்வது வழக்கம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை மும்பையிலிருந்து வரும். ஒவ்வொரு புதன்கிழமை அதில் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் இடம்பெறும். கையில் தபால் அட்டைகளுடன் நூலகத்துக்குச் செல்வேன். வேதியியல் படிப்புக்கு எங்கெல்லாம் வேலை கேட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் அனுப்புவேன்.
ஒருநாள் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து பதில் வந்தது. என்னை நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். நான் எதிர்பார்க்கவே இல்லை. கையில் ரூ.500 பணத்துடன் மும்பைக்கு ரயில் ஏறினேன். நல்வாய்ப்பாக, அந்த வேலைக்கு நான் தேர்வானேன்.
ஆண்டு 1982. என் வாழ்க்கையில் நிகழ்ந்த முதல் திருப்பம் எனக்கு வேலை கிடைத்ததுதான். அந்த அரசுப் பணி, அதுவரையில் நான் அனுபவித்துவந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து என்னை விடுவித்தது. அந்த சமயத்தில் எனக்கு தொழில்முனைவு சிந்தனை கிடையாது. மாதசம்பளம் கிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே இருந்தேன்.
எந்தப் புள்ளியில் அரசு வேலையை விட்டுவிட்டு சொந்தமாக நிறுவனம் தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்தீர்கள்?
என்னுடைய பணி சார்ந்து நான் ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்தியா தைராய்டு பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வந்தது. அதை உள்நாட்டில் தயாரிப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதே என் ஆய்வின் நோக்கம்.
அந்த ஆய்வு எனக்கு பெரும் வாய்ப்பை அளித்தது. இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் தைராய்டு பரிசோதனையை செய்ய முடியும் என்பதை அந்த ஆய்வுப்பயணத்தில் கண்டுகொண்டேன். தைராய்டு பரிசோதனையில் உள்ள தொழில் சாத்தியத்தை உணர்ந்ததும், ஒரு முரட்டு தைரியத்தில் வேலையை விட்டு வெளியே வந்தேன். நாங்கள் சிக்கனமாகவே வாழ்ந்து வந்தோம்.
சொந்தமாக வீடு கூட வாங்கவில்லை. இதனால், கையில் பணம் இருந்தது. மனைவி வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இதனால், பொருளாதாரரீதியாக பெரிய நெருக்கடி வந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தது.
உங்களுக்கு தொழில் செயல்பாடு சார்ந்து எந்த முன் அனுபவம் கிடையாது. எப்படி நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கினீர்கள்?
கோவையில் அன்னபூர்ணா உணவகம் உண்டு. ஒரே இடத்தில் சமையல் செய்து அதன் மற்றக் கிளைகளுக்கு விநியோகிக்கும் நடைமுறையை கடைபிடித்து வந்தார்கள். எனக்கு இது தைராய்டு பரிசோதனை நிலையத்தை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. மக்களிடம் ரத்த மாதிரிகளை வெவ்வேறு நிலையங்களில் பெற்றுவிட்டு அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து பரிசோதிக்கலாமே என்ற ஐடியா உதயமானது. மும்பையில் பரிசோதனை ஆய்வகத்தை அமைக்கலாம் என்ற முடிவு செய்தேன்.
மும்பையிலிருந்து சூரத், புனே, நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு 3 மணி நேரம்தான் ரயில் பயணம். எனவே மக்களிடமிருந்து ரத்த மாதிரிகளை ஒரே நாளில் பெற்று அன்றைய தினமே அதை மும்பை ஆய்வகத்துக்குக் கொண்டுவந்து சோதனைசெய்து மறுநாள் ரிசல்ட் சொல்லிவிட முடியும்.
நான் நினைத்ததுபோல் அது வெற்றிகரமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து சென்னை, கொல்கத்தா, டெல்லியிலிருந்து அதிகபட்சம் மூன்று மணி நேர விமான பயணத்தின் மூலம் மும்பை ஆய்வகத்துக்கு ரத்த மாதிரிகளை கொண்டு வந்துவிடலாமே என்ற முயற்சியில் இறங்கினேன். அதுவும் கை கொடுத்தது.
மற்ற நிறுவனங்களின் ஆய்வகங்கள், காலையில் திறக்கப்பட்டு இரவில் மூடப்பட்டன. நான் பத்திரிகை நிறுவனங்களின் வழிமுறையைக் கையாண்டேன். பகலில் ரத்த மாதிரிகளை சேகரிப்பது, இரவில் அவற்றை பரிசோதிப்பது, மறுநாள் காலையில் பரிசோதனை முடிவை விநியோகிப்பது. இந்தப் புதிய அணுகுமுறைதான் தைரோகேர் நிறுவனத்தை தனித்துவப்படுத்தி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றது.
அதேபோல், புதியவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தேன். வேலைக்கு புதியவர்களை எடுத்து பயிற்சி வழங்கினால், அத்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர்களைவிடவும் பொறுப்புடன் செயல்படுவார்கள் என்பது என் எண்ணம். தைரோகேரை விற்று வெளிவந்தபோது அதில் 25 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் தைராய்டு பரிசோதனைக்கு ரூ.600 கட்டணம் வாங்கிய நிலையில், நான் வெறும் ரூ.250-க்கு பரிசோதனை செய்துகொடுத்தேன். இது மருத்துவ உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. மக்கள் மத்தியில் தைரோகேர் பெயர் பிரபலமடையத் தொடங்கியது.
நிறுவனத்தைத் தொடங்கும்போது, அது பங்குச் சந்தையில் பட்டியலாகும், பல்லாயிரம் கோடி மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும் என்று நினைத்தீர்களா?
நிச்சயமாக இல்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் ஒருபோதும் பெரிய இலக்குகள் வைத்துக்கொண்டதில்லை. என்னிடம் இப்போது இருப்பதைவிட கூடுதலாக ஒரு பூஜ்ஜியத்தை சேர்ப்பதைத்தான் நான் எப்போதும் இலக்காகக் கொண்டிருந்தேன்.
ரூ.10 லட்சம் சொத்து மதிப்பு இருந்தபோது என்னுடைய இலக்கு இதை எப்படி ரூ.1 கோடியாக மாற்றுவது. ரூ.1 கோடியை அடைந்த பிறகு அடுத்த இலக்கு இதை எப்படி ரூ.10 கோடியாக மாற்றுவது. இப்படியே பயணப்பட்டுதான் ரூ.5,000 கோடிக்கு வந்தடைந்தேன்.
நிறுவனத்தை விற்க என்ன காரணம்?
என் மனைவியும் நானும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் இது. 2016-ம் ஆண்டு நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடும் முயற்சியில் இறங்கி இருந்தேன். இந்தச் சமயத்தில் என் மனைவி இறந்துபோனார்.
அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. அப்போதே நிறுவனத்தை விற்கலாம் என்று தோன்றியது. எனினும், கொஞ்சம் காத்திருக்க முடிவு செய்தேன். கரோனா வந்தது. கரோனா பரிசோதனையில் நாங்கள் முன்னின்று செயல்பட்டோம். இதனால், ரூ.450 என்று இருந்த எங்கள் பங்கு மதிப்பு ரூ.1,200-ஆக உயர்ந்தது.
இந்த சமயத்தில் ‘பார்ம்ஈசி’ (PharmEasy) நிறுவனம் என்னை அணுகியது. எனக்கும் வயதாகிறது. நிறுவனமும் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கும் நிறுவனத்தை நடத்துவதில் ஆர்வம் இல்லை. இந்நிறுவனத்தை தொடர்ந்து நல்ல முறையில் நடத்தும் நிறுவனத்திடம் கொடுப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று தோன்றியது.
இதனால், பார்ம்ஈசி நிறுவனத்துக்கு தைரோகேரை விற்க முடிவெடுத்தேன். நண்பர்களிடம் நான் விளையாட்டாக சொல்வதுண்டு: என்னுடன் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் ரூ.5 கோடியுடன் ஓய்வு பெற்றபோது, நானோ ரூ.5,000 கோடியுடன் ஓய்வு பெற்றேன்.
உங்கள் 25 ஆண்டுகால தொழில்முனைவுப் பயணத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
நடக்கத் துணிந்தால்தான் பாதை தெரியும். பாதை தெரிந்தால்தான் நடப்பேன் என்று சொன்னால், நம்மால் எங்கும் செல்ல முடியாது. எனவே, தைரியமாக செயலில் இறங்க வேண்டும். அது நம்மை வழிநடத்தும். செயலின்மை நம்மை முடக்கிவிடும்.
ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது நான் உணர்ந்துகொண்ட அடிப்படைப் பாடம். ஊழியர்களை மரியாதையுடன் நடத்தினால், அவர்களும் நேர்மையாக நடந்துகொள்வார்கள். குறைந்த விலையில் சேவை வழங்குங்கள். ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள்!
- riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT