Published : 13 Feb 2018 11:24 AM
Last Updated : 13 Feb 2018 11:24 AM
1. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பாதிரியார் புனித வாலன்டைனின் நினைவு நாளே பிப்ரவரி 14. ஆனால், மத்திய காலத்தில்தான் காதலுடன் அவர் தொடர்படுத்தப்பட்டார். காதலுக்கு மட்டுமல்லாமல் வேறு எதற்கெல்லாம் அவர் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்?
2. காதலை மையமாக வைத்துக் காவியங்கள் படைப்பதற்குப் புகழ்பெற்றவர், ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த காதல் காவியமாக ரோமியோ ஜூலியட் கருதப்படுகிறது. சரி, ஷேக்ஸ்பியரின் எந்தக் காவியத்தில் வாலன்டைன் ஒரு கதாபாத்திரமாக வருகிறார்?
3. கிறிஸ்தவப் பாதிரியாரான வாலன்டைனின் பெயரால் காதலர் தினம் தற்போது பரவலாக அறியப்பட்டாலும், ஆரம்பகால கிறிஸ்தவ மத வழக்கில் ‘வாலன்டைன்’ என்கிற பட்டம் எந்தச் செயலைச் செய்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுவந்தது?
4. கி.பி. 500-ல் கிறிஸ்தவ மத தலைமைகுருவான போப் கெலாசியஸ் புனிதர்களுக்கான ரோமானிய நாட்காட்டியில் புனித வாலன்டைன் நாளைச் சேர்த்திருந்தார். பிற்காலத்தில் போப் ஆறாம் பால் அந்த நாளை நீக்கினார். புனிதர்களுக்கான நாட்காட்டியிலிருந்து வாலன்டைன் நாள் நீக்கப்பட்ட ஆண்டு எது?
5. ஒவ்வொரு வாலன்டைன் நாளன்றும் நியூயார்க்கின் பிரபல அடையாளமான எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தில் எந்தச் சின்னம் ஒளிரச் செய்யப்படும்?
6. இன்றைக்கு இதயமே காதலின் சின்னமாக உலகெங்கும் கருதப்படுகிறது. அதேநேரம் வரலாற்றின் மத்திய காலத்தில் உடலின் எந்த உள்ளுறுப்பு காதலின் அடையாளமாகச் சுட்டப்பட்டது? உடலைத் தூய்மைப்படுத்தும் இந்த உறுப்பே காதலுக்குக் காரணம் என்று அந்தக் காலத்தில் கருதப்பட்டது.
7. காதலர் தினத்துக்கான சின்னங்களில் முதன்மையானதாக இதயம் பயன்படுத்தப்பட்டாலும், மற்றொரு லத்தீன் கடவுளின் படமும் அதிகம் பயன்படுத்தப்படும். வில், அம்பு வைத்திருக்கும் அந்த குட்டிக் கடவுளின் பெயர் என்ன?
8. மேற்கத்திய புராணங்களின் படி காதலின் கடவுள் கியூபிட் (Cupid). இவரது அம்மா வீனஸ், அப்பா போர்க் கடவுளான மார்ஸ். சைக்கின் (Psyche) அழகால் பொறாமையடைந்த வீனஸ், சைக்குக்கு பயங்கரமான மனிதன் ஒருவனுடன் காதலை உருவாக்கும்படி தன் மகன் கியூபிட் இடம் தெரிவித்தார். ஆனால், வீனஸின் திட்டம் ஆன்ட்டி கிளைமாக்ஸில் முடிந்தது. அது என்ன?
9. காதலர் தினத்தன்று அதிகம் பரிமாறிக்கொள்ளப்படும் பொருட்களில் பொதுவாக மலர்கள் (குறிப்பாக சிவப்பு ரோஜா), சாக்லேட்கள் (ஜப்பானில் மிக அதிகம்) ஆகியவற்றுடன் வாழ்த்து அட்டைகளும் பரிமாறிக்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்தது. அந்த அட்டைகளுக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?
10. 8-ம் நூற்றாண்டில் கடலோடிகள் தங்கள் மனைவி அல்லது காதலிகளுக்கு பஸ்க் வேலன்டைன் (busk valentine) என்கிற பரிசைக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. இது எதற்காகப் பயன்பட்டது?
விடைகள்
1. தேனீ வளர்ப்பவர்களின் பாதுகாவலர்; மயக்கம், பிளேக், வலிப்பு நோய்களுக்கு எதிரானவர்
2. தி டூ ஜென்டில்மேன் ஆஃப் வெரோனா
3. கிறிஸ்தவ மதத் தியாகிகள்
4. 1969
5. இதயம்
6. கல்லீரல்
7. கியூபிட்
8. கியூபிட்டும் சைக்கும் காதலிக்க
ஆரம்பித்துவிட்டனர்
9. வாலன்டைன்ஸ்
10. உடலை இறுக்கிக் கட்டும் கார்செட் உடையைப் பூட்டுவதற்கு திமிங்கில எலும்பு அல்லது மரத்தில் செதுக்கப்பட்ட பொருள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT