Published : 23 Dec 2023 06:20 AM
Last Updated : 23 Dec 2023 06:20 AM

நீரிழிவை மட்டுப்படுத்தும் சித்த மருத்துவம்

இன்றைய நவீன உலகில் மிகப் பெரிய சவாலாக நீரிழிவு நோய் உருவெடுத்திருக்கிறது. ‘நீரிழிவு என்பது வியாதியல்ல, ஒரு குறைபாடு மட்டுமே’ என நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொண்டு அவதிப்பட்டுவருகிறோம். நீரிழிவின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நம் உடலில் ஏற்படும் சிதைவுகளும் சிக்கல்களும் பல்வேறு ஆபத்துகளை அள்ளிக்கொடுத்து அவதிப்படுத்துகின்றன என்பதால் நீரிழிவு நோய் குறித்து கவனமாக இருப்பது அவசியம். சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை நீரிழிவு என்பது விரட்டியடிக்கப்பட வேண்டிய நோய். அதை ‘மேகநோய்’ எனவும் ‘மதுமேகம்’ எனவும் ‘சலக்கழிச்சல்’ எனவும் சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

நீரிழிவின் அறிகுறிகள்: அதிகப்படியான பசி, அதிக தாகம், நாவறட்சி, உடல் சோர்வடைதல், மயக்கம் வருதல் போன்றவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் என்கின்றன ஆங்கில மருத்துவத்தின் ஆராய்ச்சி முடிவுகள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் குறிப்பிட்டிருக்கி றார்கள் நமது சித்தர்கள். நீரிழிவு நோயாளிகள் அடையும் அவஸ்தைகளை விரிவாகவே அவர்கள் விளக்கியுள்ளனர். ‘தாகமே யதிக மாகித் தளர்ந்து நாவுலர்ந்து மிக்க சோகமாய்க் கிறுகிறுத்துத் தொடர்ந்துகை காலுஞ் சோர்ந்தே ஏகமாய்ப் பகலு மல்லும் விடாதுநீரிறங்கு மன்றி மோகமாய் மழைபனிக்கு முதிர்ந்திறங்கிடுன் சலந்தான்’ என்கிறது ‘வைத்திய விளக்கம்’ எனும் சித்த மருத்துவ நூல்.

தாகம் அதிகமாதல், நாக்கு உலர்ந்து போதல், உடல் தளர்ந்து போதல், தலை கிறுகிறுத்து மயக்கமடைதல், உடல் சோர்வடைதல், கைகால்கள் அயர்ச்சியடைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மதுமேகநோய் எனப்படும் நீரிழிவுக்கான அறிகுறிகளாகப் பட்டியலிடுகிறது வைத்திய விளக்கம். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் மூத்திர ரோகமும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுவதும் சர்க்கரை நோயாளிகள் அனுபவிக்கும் அவஸ்தைகள். பதார்த்த குணசிந்தாமணியிலும் இதுகுறித்த குறிப்புகள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்கிறது நவீன மருத்துவ ஆராய்ச்சிகள். அதையும் கடந்து ஊடுருவி நோயின் மூல காரணத்தை விளக்குகிறது சித்த மருத்துவம்.

அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்: மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது, ஆளப்படுவது. தச நாடிகள் உடலை நிர்வகிக் கின்றன. தச வாயுக்கள் உடல் இயக்கத்தைச் செயல்படுத்துகின்றன. மிக எளிமையாக விளக்குவதானால் சுவிட்சை அழுத்தியதும் விளக்கு எரிவதை உதாரணத்துக்காக எடுத்துக் கொள்ளலாம். தச நாடிகள் சுவிட்ச் போன்றவை. சுவிட்சை அழுத்தியதும் கடத்தப்படும் மின்சாரம் போன்றவை தச வாயுக்கள். இவை தவிர, சப்த தாதுக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. தச வாயுக்களும், தச நாடிகளும், சப்த தாதுக்களும் ஏற்றத்தாழ்வு அடைவதாலேயே நோய்கள் பிறக்கின்றன என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படை தத்துவம். உடலில் சேரும் கழிவே இந்த ஏற்றத்தாழ்வுக்கு முதன்மைக் காரணி என்று நோய்களுக்கான மூலக் காரணத்தை அறிய வழிகாட்டுகிறது சித்த மருத்துவம். இந்த ஏற்றத்தாழ்வுகளை வாத - பித்த - கப நாடிகள் மூலம் கண்டறிந்து நோயறிவதே நாடி பார்த்தல் ஆகும்.

கழிவு நீக்கல் தத்துவம்: சித்த மருந்துகளின் முதல் செயல் உடலில் சேரும் கழிவை நீக்குவதுதான். அதனால்தான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்துக்கொள்வதையும் வலியுறுத்துகிறது சித்த மருத்துவம். இந்தக் கழிவு நீக்கல் தத்துவத்தின்படி தச வாயுக்களில் ஒன்றான அபான வாயுவே சர்க்கரை நோய்க்கான மிகப்பெரிய காரணியாக இருக்கிறது. அபான வாயு என்பது உடல் வெளியே தள்ள வேண்டிய கீழ்நோக்கும் வாயு. வெளியேற வேண்டிய இந்த அபான வாயு மேல் நோக்குவதால்தான் மேக நோய்கள் உருவாகின்றன என்கிறது சித்த மருத்துவம். விரிவாகவும் குறிப்பாகவும் நீரிழிவு நோயை விளக்கும் சித்த மருத்துவத்தில் நோய்க்கான தீர்வுகளும் காணக்கிடைக்கின்றன. அதுவும் நிரந்தரமாக நோயைத் தீர்க்கும் மருத்துவக் குறிப்புகள் உள்ளன. அதற்கான அருமருந்துகள் பல இருக்கின்றன.

மருந்துகள்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மருந்துகள், நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மருந்துகள் எனப் பலவாறாக மருந்துகள் உள்ளன. பொதுவாகக் கசப்புத் தன்மையுள்ள மூலிகைகள் நீரிழிவுக்கான மருந்தாகும். நிலவேம்பு, வேம்பு, சிறுகுறிஞ்சான், வில்வ இலை, சீந்தில் ஆகியன முக்கிய மூலிகைகளாகும். ஆவாரைக் குடிநீர் சூரணம், திரிபலா சூரணம் அற்புதமான சித்த மருந்துகளாகும். அகத்தியரின் பதார்த்த குணவிளக்கப் பாடலில் வில்வ இலையின் மகத்துவம் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

சிகிச்சை: சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே நோயாளிகள் சித்த மருத்துவத்துக்கு வந்தால் சித்த மருந்துகள் மூலமே ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திப் படிப்படியாகக் குணமாக்கிவிடலாம். நோயின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடலாம். ஆனால், பெரும்பாலான நோயாளி கள் பல வருடங்களாக அலோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டு அதன் பின்னரே சித்த மருந்துகளை நாடிவருகின்றனர். அப்படி வருபவர்கள் ஓரிரு மாதங்களில் குணம் காணும் வாய்ப்பு குறைவே. அலோபதி மருந்துகளுக்குப் பழகிய உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீட்டு, சித்த மருந்துகளின் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இயலும்.

இப்படிப் பல ஆண்டுகளாக அலோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டு அதன் பின்னர் வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சையை வலியுறுத்துகிறோம். அதாவது அவர்கள் ஏற்கெனவே எடுத்துக்கொண்டிருக்கும் ஆங்கில மருந்துகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ளச் சொல்வதோடு எங்களது சித்த மருந்துகளையும் அவற்றுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்கிறோம். ஆறு மாதங்கள் ஆன பிறகு ரத்தப் பரிசோதனை (HbA1C) எடுத்துக்கொள்ள பரிந்துரைப்போம். அதன் மூலம் முந்தைய மூன்று மாதங்களில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்திருப்பது தெரியவரும். சித்த மருந்துகள் செயலாற்றத் தொடங்கிவிட்டன என்பது உறுதியாகும். பரிசோதனை முடிவுகளை அலோபதி மருத்துவரிடம் காட்டி, எடுத்துக்கொண்டிருக்கும் அலோபதி மருந்துகளைக் குறைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.

கண்காணிப்பு அவசியம்: நலம் பெற்றவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை HbA1C ரத்தப் பரிசோதனை செய்து தன் ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை சர்க்கரை அளவு சற்றே அதிகரிப்பதாகத் தெரியவந்தால் சித்த மருந்துகளைச் சில நாள்களுக்கு மட்டும் உட்கொண்டு நிறுத்திக்கொள்ளலாம். இப்படி நீரிழிவு நோயிலிருந்து முழுமையாக விடுபட பன்னிரண்டு முதல் இருபத்தி நான்கு மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருப்பது அவசியம். சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு மட்டும் நின்று விடாமல் லேசான உடற்பயிற்சி, மன அமைதிக்கு யோகப்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். குணமாவது விரைவாகும். ‘உணவே மருந்து’ எனும் சித்தமருத்துவத் தத்துவத்தின் அடிப்படையில் உணவுப் பழக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் வெகு விரைவில் குணமடையச் செய்யும்.

சுத்தமான காற்று, சுகாதாரத்துடன் குடிநீர், ஆரோக்கியமான உணவு ஆகிய மூன்றும் சிறப்பான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும். நோயில்லா வாழ்வு நிரந்தரமாகும். ஆனால், நோயற்று வாழ்வதற்குச் சாத்தியமில்லை என்கிற நிலையில் இருக்கும் நவீன சுற்றுச்சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் நாம். வந்து சேரும் நோய்களை விரட்டியடித்துவிட்டு வாழ்வைத் தொடர்வதே நம்மாலானது. நோய்களை முழுமையாக விரட்டியடிக்கவும் நிரந்தர குணம் அளிக்கவும் சித்தர்கள் நமக்களித்திருக்கும் அருட்கொடையான நமது சித்த மருத்துவத்துவத்தில் வழி உண்டு. பற்றிக்கொள்வோம்; பலனடைவோம்.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x