Published : 27 Nov 2023 06:00 AM
Last Updated : 27 Nov 2023 06:00 AM

ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 2: செயல் உங்களை வழிநடத்தி செல்லும்! | மைண்ட் & மாம், நிறுவனர் மற்றும் சிஇஓ பத்மினி ஜானகி பேட்டி

இந்தியாவில் ஆண்டுக்கு 3 கோடி மக்கள் கருத்தரிப்பு பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையை நாடுகின்றனர். அத்தகையவர்களுக்கு,தொழில்நுட்பக் கட்டமைப்பு மூலம் வழிகாட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது ‘மைண்ட் & மாம்’ (Mind & Mom). இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை பத்மினி ஜானகி 2021-ல் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 29. இந்தியாவில் பெண்கள் சொந்தமாக நிறுவனம் தொடங்கி நடத்துவது மிகக்குறைவு. இந்தச் சூழலில், பத்மினியின் ஸ்டார்ட்அப் பயணம் கவனம் ஈர்க்கிறது. அவரது பயணத்துக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன…அவருடன் உரையாடினேன்...

இன்று பத்மினி ஜானகி ஒரு நிறுவனத்தின் சிஇஓ. 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் யார்? அவருடைய உலகம் எப்படிப்பட்டது? - 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் 12-வது படிக்கிற ஒரு சிறுமி. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். கோயில் முனையில் பூ விற்பவர். பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியில்தான் அவர் என்னை வளர்த்தார். உங்கள் குடும்பத்தில் யாராவது ஐஐடியில் படிந்திருந்தால் அல்லது டாக்டராக இருந்தால் அவரை உதாரணம் காட்டி, அவரைப் போல் ஆக வேண்டும் என்று உங்களை சொல்லக்கூடும். படிப்பு, வேலை சார்ந்து உங்களுக்கு குடும்பத்திலிருந்து வழிகாட்டுதல் கிடைக்கும். ஆனால், நான் வளர்ந்த சூழல் அப்படிப்பட்டது இல்லை.

எங்கள் குடும்பத்தில், பெண்களுக்கு 18 வயதாகிவிட்டால் திருமணம் செய்துவைத்து விடுவார்கள். பையனாக இருந்தால் பால் அல்லது பேப்பர் போடும் வேலைக்குச் சென்று விடுவார்கள். ஏனென்றால், அவ்வளவு வறுமை. குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் அன்றைய தினத்தை கழிக்க முடியும். இதனால், பையன்கள்கூட கல்லூரிக்குச் சென்றுப் படித்து நல்ல வேலைக்குச் செல்வது அரிதான நிகழ்வாகவே இருக்கும்.இதுதான் 15 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய உலகம். இந்த வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்பதுதான் அப்போது எனக்கு ஒரே கனவாக இருந்தது.

அத்தகைய சூழலில் வளர்ந்த சிறுமி, இன்று சொந்தமாக ஸ்டார்ட் அப் நடத்தி வருகிறார். இந்த மாற்றம் எப்படி நடந்தது? - பள்ளி முடித்துவிட்டு எத்திராஜ் கல்லூரியில் விஷுவல் மீடியா பிரிவில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு உலகின் பரிமாணத்தை புரிந்துகொள்ளத் தொடங்கினேன். படிப்பின் மூலம் என்னுடைய வறுமையிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கைக் கிடைத்தது. கல்லூரி முடித்த பிறகு எனக்கு பே பால் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பே பாலில் விஷுவல் டிசைன் பிரிவில் நான் வேலைக்கு சேர்ந்தேன்.என் வாழ்வின் முக்கியமான திருப்புமுனை அந்த வேலை. தொழில்நுட்பம் மூலம் உலகில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதை பே பாலில் நான் ஆழமாக கற்றுக் கொண்டேன். பே பாலில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, அமெரிக்காவில் மருத்துவ நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அங்கு இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

உடல் ஆரோக்கியத்தில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் பின்தங்கி இருப்பதை என் பணி அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் நிலைமை இன்னும் வருந்தத்தக்கதாக இருந்தது. உடல்நலம் சரியில்லாவிட்டாலும், பெண்கள் அன்றாட வீட்டு வேலையை செய்ய வேண்டும். அப்போதுதான் தொழில்முனைவு குறித்து முதல் பொறி என்னுள் விழுந்தது. தொழில்நுட்பம் வழியாக பெண்களின் உடல்நலப் பிரிச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற யோசனை உதயமானது. உடலநலப் பிரச்சினையென்றால், நிறைய இருக்கின்றன. முதற்கட்டமாக, கருத்தரித்தல் சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்று முடிவு செய்தேன். என் கணவரும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இதனால், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவது சார்ந்து திட்டமிடுவது எனக்கு எளிதாக இருந்தது.

உங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டைப் பற்றி விளக்க முடியுமா? - குழந்தையின்மை என்பது இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கருத்தரிப்புக்காக தம்பதியினர் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். கருத்தரிப்பு தொடர்பாக நிறைய மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், எந்த மருத்துவமனைக்கு செல்வது என்று மக்களிடம் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் தொழில்நுட்பக் கட்டமைப்பு மூலம் மக்களுக்கு சிறந்த மருத்துவமனையையும் மருத்துவர்களையும் அடையாளம் காட்டும் தளமாக மைண்ட் & மாம் செயல்படுகிறது.

ஒரு பெண்ணாக, தொழில் துறையில் நீங்கள் எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்? - தொழில்செயல்பாட்டைப் பொறுத்தவரையில் நான் என்னை பெண் என்ற வகைமையின் கீழ் பார்ப்பதில்லை. பெண் என்பதற்காக எந்தச் சலுகையும் எதிர்பார்ப்பதில்லை. தொழில்செயல்பாட்டில் அப்படியான ஒரு சலுகையை நீங்கள் எதிர்பார்க்கவும் முடியாது. அது ஒரு பொதுக்களம். எல்லாரும் அங்கு மோதுவார்கள். உங்கள் திறன்தான் முக்கியம். நம்மைச் சுற்றி நிறைய தடைகள் இருக்கலாம். ஆனால், அந்தத் தடையை மட்டும் பேசிக்கொண்டிருந்தால், நம்மால் முன்னகர்ந்து செல்ல முடியாது. நம்மைச் சுற்றிஎன்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன, அவற்றை எப்படிச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு மேலெழுந்து வர முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். தடைகளை மட்டும் சிந்தித்துக்கொண்டு நாம் முடங்கிவிடக்கூடாது. செயலில் இறங்க வேண்டும். அந்தச் செயல் உங்களை வழிநடத்திச் செல்லும். தடைகள் தகரும்!

- riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x