Published : 25 Nov 2023 05:55 AM
Last Updated : 25 Nov 2023 05:55 AM
சீரகத்தின் விலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைய வாய்ப்புள்ளதாக உலக மசாலா சங்கத் தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.250 என்கிற அளவில் இருந்த சீரகத்தின் விலை ரூ.640 ஆக உயர்ந்தது. தற்போது ரூ.450 என்கிற நிலைக்குக் குறைந்துள்ளது. “பழைய விலையான ரூ.250 வரைக்கும் குறைய வாய்ப்புள்ளது எனச் சொல்ல முடியாது. ஆனால், அடுத்தாண்டு ஜனவரியில் விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்” என ராம்குமார் தெரிவித்தார். சம்பா சாகுபடி நல்ல விளைச்சல் தந்துள்ளதால் புதிய சீரகம் சந்தைக்கு வரும்போது இந்த மாற்றம் நிகழும் எனச் சொல்லப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் 500 கோடி டாலர் மதிப்பு ஏற்றுமதி இலக்கை இந்திய மசாலா ஏற்றுமதி தொட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு: கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014இல் ஆட்சிக்கு வந்த பிறகு இதுவே அதிகபட்ச அதிகரிப்பாகும். நடப்பு ஆண்டில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,125 ஆக இருந்தது. இப்போது ரூ.150 அதிகரித்திருப்பதால் ஆதார விலை ரூ.2,275 ஆக இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் இதற்குப் பின்னணிக் காரணமாகச் சொல்லப்படுகிறது.- விபின்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT