Published : 09 Jan 2018 11:13 AM
Last Updated : 09 Jan 2018 11:13 AM
எவ்வகையான கல்வி தேவை?
மானுட விடுதலைக்கான சக்தியாக இயங்குவதைவிடச் சாதாரணர்களை அடிமைப்படுத்தும் வழிமுறையாகக் கல்வி இந்தியச் சூழலில் மாற்றப்பட்டிருப்பதை ஆழமாக பேராசிரியர் வசந்திதேவியின் இப்புத்தகம் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எவ்வகையான கல்வி தேவை, அதில் தொழிற்கல்வியின் பங்கு என்ன, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் நம்முடைய வகுப்பறைகளும் பாடத்திட்டங்களும் கற்பித்தல் முறைகளும் எம்மாதிரியான முன்னுரிமை அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் பயிற்றுமொழி ஏன் தமிழாக இருக்க வேண்டும், மாணவப் பேரவைகள் மூலம் மாணவர்களின் சமூக அக்கறையை எப்படிக் கூர்மைப்படுத்தலாம், ஜனநாயகத்தை எவ்வாறு பரவலாக்கலாம் என்பன பற்றியும் வசந்திதேவி தன் கட்டுரைகள் மூலம் இப்புத்தகத்தில் விவாதித்திருக்கிறார். பெண்ணியக் கல்வி, மனித உரிமைக் கல்வி, தலித் கல்வி போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆழமாக உரையாடல் இப்புத்தகம். கல்விக் கொள்கைகள் குறித்தும் அதன் நடைமுறைசார்ந்த சிக்கல்கள் குறித்தும் தமிழில் மிக முக்கியமான பதிவு.
‘கல்வி: ஓர் அரசியல்’
வே. வசந்திதேவி
பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018.
தொடர்புக்கு: 044-24332424
விலை: 180/-
புதிய கல்விக் கொள்கை அவசியமா?
இந்திய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ பற்றிய தமிழ்நாட்டின் கல்வியாளர்களின் பார்வையை விளக்குகிறது இந்நூல். ‘விழுது’ - புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியாளர்கள் முனைவர் ச. மாடசாமி, எஸ்.எஸ். இராஜகோபாலன், பேரா. ஆர். ராமானுஜம், பேரா. என். மணி, பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டடோர் இந்தப் புத்தகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை விரிவாக அலசியிருக்கின்றனர். அத்துடன், புதிய கல்விக் கொள்கையின் அவசியத்தையும் கல்வியாளர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர். இந்தப் புதிய கல்விக் கொள்கை கல்வி முறையில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளையும் இந்நூலில் கல்வியாளர்கள் முன்வைத்திருக்கின்றனர்.
‘தேசிய கல்விக் கொள்கை 2016 - மகாராஜாவின் புதிய ஆடை’
தொகுப்பு: தேனி சுந்தர்
அறிவியல் வெளியீடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தொடர்புக்கு: 044 28113630
விலை: ரூ. 40
ஐன்ஸ்டைனைப் புரிந்துகொள்ளலாம்
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு வெளியாகி 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் நவீன இயற்பியலில் இன்று நடக்கும் ஆய்வுகளுக்கும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்குமான கருவியாகத் திகழ்கிறது. படித்தவர்களுக்குக் கூட எளிதில் புரியாதென்று கூறப்படும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை எளிய முறையில் விளக்கும் சவாலை இந்த நூல் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் எழுதிய ‘ரிலேட்டிவிட்டி சிம்ப்ளி எக்ஸ்ப்ளெய்ண்ட்’ நூலின் மொழிபெயர்ப்பு இது. தூரம், காலம், அளவு ஆகியவை திட்டவட்டமானவையல்ல ஒன்றுக்கொன்று சார்புடையவை என்பதை எளிய முறையில் விளக்கி ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். ஐன்ஸ்டைன் தனக்கு முன்பிருந்த ஐசக் நியூட்டனின் முடிவுகளை எப்படி மறுவரையறை செய்தார் என்பதையும் புரியும்படி கூறுகிறது. தத்துவம், கலை, சினிமா, போர்த் தொழில்நுட்பம் என 20-ம் நூற்றாண்டில் பல துறைகளையும் பாதித்த சார்பியல் கோட்பாடு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெரியவர்களும் தெரிந்துகொள்வதற்குக் கையடக்கமான நூல் இது.
சார்பியல் கோட்பாடு - ஓர் அரிச்சுவடி
பேரா. க. மணி
அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
என்பிடிசி- எம்சிஇடி வளாகம், உடுமலை ரோடு
பொள்ளாச்சி – 642 003
தொடர்புக்கு: 99761 44451
விலை: ரூ. 100/-
கல்வி என்னும் வெளிச்சம்
ரஷ்யக் கல்வியாளரும் நாவலாசிரியருமான ஏ. எஸ். மகரெங்கோ எழுதிய இந்நூல் சோவியத் கல்வி முறைக்குப் பெரும் பங்களிப்பு செய்த படைப்பாகக் கருதப்படுகிறது. உள்நாட்டுச் சண்டைகள், பஞ்சம், தொற்றுநோய் சூழலில் அகதிக் குழந்தைகளுக்குக் கல்வியளித்து அவர்களது மோசமான வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த மகரெங்கோ தனது அனுபவங்களைப் பின்னணியாக வைத்து எழுதிய இந்நூல் நாவலாசிரியர் பொன்னீலனால் மொழிபெயர்க்கப்பட்டது. எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி முன்னுரை எழுதியுள்ள இந்நூல், எத்துணை இருண்ட சூழலிலும் கல்வியால் ஒளியை ஏற்றமுடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது.
வாழ்க்கைப் பாதை - ஒரு கல்விக் காவியம் (இரண்டு பாகங்கள்)
ஏ. எஸ். மகரெங்கோ
தமிழில்: பொன்னீலன்
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, தொலைபேசி: 044 24332424
தொடர்புக்கு: 99761 44451
விலை : ரூ.300 (பாகம் ஒன்று), ரூ.500 (பாகம் இரண்டு)
புதிய உலகம் படைத்தவர்கள்!
நம்முடைய வசிப்பிடமும் பணியிடமும்தான் நம் உலகம் என்ற நிலையிலிருந்து புதிய அன்பர்களையும், ஏகப்பட்ட தகவல்களையும் இணைய உலகம் இன்று சாத்தியமாக்கிவருகிறது. முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்டு-இன் என சர்வதேசத் தொலைதொடர்புக்கு பல வலைத்தளங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் பயனாளிகளாக நாம் இருக்கிறோம். ஆனால், அவற்றை உருவாக்கியவர்கள் யார், அதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் நமக்குத் தெரியாது. இவை அனைத்தும் நம் தலைமுறையினராலே கண்டுபிடிக்கப்பட்டவை. அப்படிப்பட்ட நாயகர்களை அறிமுகம் செய்வதுடன் அவர்களைப் பற்றிய சுவாரசியமான கதைகளைக் கூறுகிறது இந்நூல்.
நம் காலத்து நாயகர்கள்
சைபர்சிம்மன்
புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ (என்.பி) திரு.வி.க.தொழிற்பேட்டை கிண்டி, சென்னை -32.
தொடர்புக்கு: 044-45969501.
விலை: ரூ.140/-
புதியதைப் படிப்போம்
மாணவர்களுக்கு இருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள், நாடெங்கும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், அவற்றில் படித்த பிறகு கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்பு ஆகியவற்றை விளக்குகிறது இப்புத்தகம். பல தமிழ் தினசரிகளிலும் வார இதழ்களிலும் பணியாற்றியுள்ள மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். கல்வித் துறை தொடர்பான பல்வேறு கட்டுரைகளையும் தொடர்களையும் தனித்தன்மையுடன் எழுதிய அவர். ஏழைகளுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த பரந்துபட்ட அளவில் தகவல்கள் போய்ச் சேரும் விதமாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்ன படிக்கலாம்?
- புதியன விரும்பு
பொன். தனசேகரன்
எஸ். ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம்,
சமயபுரம், திருச்சி - 621112.
விலை: ரூ.200
தோலுரிக்கும் முயற்சி!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்திருக்கும் மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக இந்திய கல்வித் திட்டத்திலிருந்து அப்புறப்படுத்த நடைபெறும் சதிகளை தோலுரித்து இப்புத்தகத்தில் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் அ. மார்க்ஸ். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2016-ன் மீது கடுமையான விமர்சனத்தை அவர் இப்பத்தகத்தின் வழியாக முன்வைத்திருக்கிறார். உலகமயம், வகுப்பு வாதம் இரண்டையும் மறைபொருளாக கொண்டு புதிய கல்வித் திட்டம் செதுக்கப்படுவதால் அதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட புத்தகம் இது.
புதிய கல்விக் கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்
அ. மார்க்ஸ்
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, தொலைபேசி: 044 24332424
தொடர்புக்கு: 99761 44451
விலை: ரூ.50
எளிய தமிழில் தொழில்நுட்பக் கதை
இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன், தொலைபேசி செய்த வேலையை மட்டுமல்லாமல் கால்குலேட்டர், கணினி, இசைக்கருவி, ரேடியோ, டார்ச், கேமரா, வீடியோ கேம்ஸ் இன்னும் ஏகப்பட்ட சாதனங்களின் அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. அதிலும் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பயன்பாட்டால் ஸ்மார்ட்ஃபோன் அதி நவீன தொழில்நுட்ப அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த ஆண்ட்ராய்டின் கதை ஆங்கிலத்தில் உள்ளதே தவிர தமிழில் எளிய இல்லை. அந்தக் குறையைப் போக்க ஆண்ட்ராய்ட் மென்பொருளின் வரலாற்றைக் கதைபோல சொல்கிறது இப்புத்தகம். தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கான கையேடு.
ஆண்ட்ராய்டின் கதை
ஷான்
யாவரும் பதிப்பகம்
சென்னை
தொடர்புக்கு: 9042461472
விலை ரூ.70
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT