Published : 26 Dec 2017 11:50 AM
Last Updated : 26 Dec 2017 11:50 AM

கேள்வி நேரம் 15: இந்த ஆண்டில் நம்மைப் பிரிந்தவர்கள்

1. இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தந்தையும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இவர். எல் நினோ இயற்கை நிகழ்வுக்கும் இந்திய பருவமழைக்கும் தொடர்பிருப்பதாக 1980-களிலேயே கணித்த மேதை. பருவமழையைக் கணிக்க பல்வேறு வானிலை மாதிரிகள், கணினி மாதிரிகளுக்குத் தேவையான நுணுக்கங்களை உருவாக்கியவர். பாகிஸ்தானில் உள்ள ஜஹாங் எனும் ஊரில் பிறந்த இவர் 2017 மார்ச் 18-ல் மறைந்தார். இவர் யார்?

2. உயர் நீதிமன்றம் (டெல்லி) ஒன்றின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பெண். நிருபயா வழக்கையொட்டி சட்டத் திருத்தத்துக்காக நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா குழுவின் உறுப்பினராக இருந்தவர். ‘ஆன் பேலன்ஸ்’ என்னும் புகழ்பெற்ற சுயசரிதையை எழுதியவர். 2017 மே 5 அன்று மறைந்த அவர் யார்?

3. உச்ச நீதிமன்றத்தின் 17-வது நீதிபதி. நீதிமன்றத்தைப் பொது நலனுக்கான போராட்டக் களமாக மாற்றியவர்களில் முதன்மையானவர். வி.ஆர். கிருஷ்ண அய்யருடன் இணைந்து பொதுநல வழக்கு தொடுக்கும் நடைமுறைக்கு வித்திட்டவர். 2017 ஜூன் 16-ல் மறைந்த அவர் யார்?

4. தூர்தர்ஷன் வழியாக நாட்டின் சாதாரணர்களிடமும் அறிவியலை எடுத்துச்சென்றவர். அறிவியலின் வீச்சைப் பாமர மக்களும் உணரக் காரணமாக இருந்தவர். காஸ்மிக் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர். பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பதவியை அலங்கரித்தவர்களில் ஒருவர். ஜஹாங் ஊரில் பிறந்த அவர் ஜுலை 24-ல் மறைந்தார். அவர் யார்?

5. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ‘ஆர்யபட்டா’ உருவாகக் காரணமாக இருந்த விஞ்ஞானி. சர்வதேச விண்வெளிக் கூட்டமைப்பின் புகழ்பெற்றோர் அரங்கில் கவுரவிக்கப்பட்ட முதல் இந்திய விஞ்ஞானி. இஸ்ரோவின் தலைவராக இருந்தவர். விக்ரம் சாராபாயின் மாணவர். 2017 ஜூலை 24 அன்று மறைந்த அவர் யார்?

6. ஹைதராபாத்தில் மத்திய அரசின் செல், மூலக்கூறு உயிரியல் மையத்தை நிறுவிய இயக்குநர். அறிவியல் மனப்பான்மை, அறிவியல் சார்ந்த பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்களில் முதன்மையானவர். மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதிப்பதைத் தொடர்ந்து எதிர்த்துவந்தவர். 2017 ஆகஸ்ட் 1 அன்று மறைந்த அவர் யார்?

7. உலக அளவில் புகழ்பெற்ற இந்திய ஒளிப்படக் கலைஞரான ரகு ராயை அறிந்த அளவுக்கு அவருடைய அண்ணனான ஒளிப்படக் கலைஞரை அறிந்திருக்க மாட்டோம். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாளில் 20 ஆண்டுகளுக்கு மேல் வேலைபார்த்தார். பாகிஸ்தானின் ஜஹாங் ஊரில் பிறந்த அவர், தேசப் பிரிவினைக்குப் பிறகு, சிம்லாவில் குடியேறினார். சுயமாக ஒளிப்படக் கலை கற்றவர். 2017 ஆகஸ்ட் 16 அன்று மறைந்த அவர் யார்?

8. 1948, 1952 ஆகிய அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளின் கால்பந்துப் பிரிவில் இந்தியா பங்கேற்றிருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதைவிட ஆச்சரியம், அப்போது ஷூக்கள் வாங்க வசதி இல்லாததால் இந்திய கால்பந்து வீரர்கள் வெறுங்காலுடன் விளையாடியதுதான். 1951 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறது. இந்த அணிகளில் இடம்பெற்றிருந்த பெங்களூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரர் 2017 ஆகஸ்ட் 27 அன்று மறைந்தார், அவர் யார்?

9. பத்திரிகையாளர், சமூகச் செயல்பாட்டாளர். தன் தந்தையின் வழியில் கன்னட வார இதழை முன்னெடுத்து நடத்தியவர். வலதுசாரி இந்து மத வெறிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். 2017 செப். 5 அன்றுஅடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர் யார்?

10. இந்துஸ்தானி இசைத் துறையில் சேனியா, பனாரஸ் கரானா எனப்படும் இரண்டு பாணிகளைப் பின்பற்றியதற்காகப் பிரபலமானவர். தும்ரி எனப்படும் பாணியில் பாடுவதற்காகப் புகழ்பெற்றிருந்ததால் ‘தும்ரி ராணி’ என்று அறியப்பட்டவர். வாரணாசியில் பிறந்த இவர் 2017 அக்டோபர் 24 அன்று மறைந்தார். அவர் யார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x