Published : 01 Sep 2023 06:12 AM
Last Updated : 01 Sep 2023 06:12 AM

ஓடிடி உலகம்: முழுமையான கேங்ஸ்டர் கதை 

சென்னைப் புறநகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரவுடிக் கும்பல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அங்கு அதிநவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகச் செய்தி வெளியானது. இந்தச் சிறு பின்னணியை எடுத்துக்கொண்டு, அதனுடன் விறுவிறுப்பான பின்னணியைக் கோத்துச் சுவாரசியம் அளிக்கும் திரைக்கதைக் கொண்ட இணையத் தொடராக மாற்றியுள்ளார் ‘கிடாரி’ புகழ் பிரசாத் முருகேசன்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ‘மத்தகம்’ என்கிற தலைப்புடன் சமீபத்தில் வெளியாகியிருக்கும் இத்தொடர், கே.ராஜவேல் சண்முகம் என்கிற ஐபிஎஸ் அதிகரி உருவாக்கிய குற்றவாளிகள் குறித்த ஒரு புத்தகம் மூலம் கதையின் இடைநில்லா ஓட்டத்துக்கான வழியைத் திறந்து வைத்துள்ளார். கே.ஆர்.எஸ் எனப் படத்தில் அழைக்கப்படும் அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் வழியே புலனாய்வும் துலங்குகிறது.

பிரசாத்தின் திரைப்படமான ‘கிடாரி’யிலேயே சினிமாவை ஒரு காட்சியாக மாற்றுவதில் கவனிக்கவைத்தவர். இவர் கௌதம் மேனனுடன் இணைந்து இயக்கிய ‘குயின்’ வெப் சீரிஸும் அது படமாக்கப்பட்ட விதத்துக்காகப் பாராட்டைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக ‘மத்தகம்’ தொடரின் காட்சிகளிலும் தேர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

ஒரு நாடகத்தின் காட்சிபோல் இரும்பு ஷட்டர் திறக்கப்பட்டு முதல் காட்சி தொடங்குகிறது. அந்த முதல் காட்சியில் கார் வெளியே வந்த பிறகு அடுக்கப்படும் ஷாட்களை, கதைக்குள் பார்வையாளர் நுழைவுக்கான வாசலாகத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார். யதார்த்தவாத சினிமா என்று சொல்லப்பட்டாலும் சினிமா முற்றிலும் கற்பனை வடிவம்தான். அதற்கான சகல சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பிரசாத்தின் இந்த வெப் சீரிஸ் அதைச் சரியாகக் கைக்கொண்டுள்ளது.

படாளம் சேகரின் (மணிகண்டன்) காதல் கதை அப்படிப் பூத்துள்ளது. தோற்ற மயக்கமா, அவன் தோற்றம்தானா எனக் குழம்பும் கதாநாயகி, அவளது பாதத்தைக் கையில் ஏந்தும் காதலின் உன்மத்தம் என இந்த கேங்ஸ்டர் சீரிஸுக்கு உயிர்ப்பு தந்துள்ளார் பிரசாத். பிரசவத்துக்குப் பிறகான தாய்மையின் மனப் பாய்ச்சலை நிகிலா விமல் கதாபாத்திரம் வழி அதே இறுக்கத்துடன் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். பால் மண ஒவ்வாமையில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி இந்தப் பக்கம்.

நாம் பார்க்கும் விரிந்த சென்னையின் சாதாரணமான தெருக்களில் படமாக்கப்பாட்டிருந்தாலும் இந்தத் தேர்வு அதை ஒரு சினிமாவுக்கான காட்சியாக மாற்றியிருக்கிறது. இரவு நேரக் காட்சிக்கான விளக்குகள், அந்தக் காட்சியில் கிடைக்கக்கூடிய வெளிச்சமாகப் பாவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்க அம்சம்.

ஷாட்களைத் தொகுப்பதில் உள்ள தேர்ச்சியையும் பார்க்க முடிகிறது. அஸ்வத்-சேகர் என இரு துருவங்களாகக் கதாபாத்திரங்கள், முரணுக்கான சாத்தியங்கள், அது முறுகக்கூடிய தருணம் என இந்த சீரிஸின் பயணம் பார்வையாளர்களைத் தொடர்புப்படுத்திவைப்பதில் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு எபிசோடிலும் இம்மாதிரித் தொடர்புப் படுத்தும் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். ‘போலீஸ் உளவாளி, அவரைச் சந்திக்க வரும் போலீஸ்’ காட்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இருவரும் சந்தித்துக்கொண்டால் இந்த சீரீசின் முக்கியமான வைபவம் நடக்காது போகலாம். அதற்கான சாத்தியமின்மையைப் பார்வையாளர்களால் முன்கூட்டியே உணர முடியும். ஆனாலும் அந்தக் காட்சி ஒரு த்ரில்லர் அனுபவத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

அதுபோல் பல கதாபாத்திரங்கள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் இந்தக் கதையில் பின்னணியில் மறையக் கூடிய கதாபாத்திரங்களை வார்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ‘இசை, ஷாட் ஆகிய இவை மட்டுமல்ல த்ரில்லர்’ என்பதில் கவனமாகச் செயல்பட்டுள்ளது படக் குழு. இதன் இயக்குநர் பிரசாத் முருகேசன் கேங்ஸ்டர் படத்தை ஒரு முழுமையான பார்வையாளர் அனுபவமாக இந்த சீரிஸ் வழி சாத்தியமாக்கியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x