Published : 25 Aug 2023 06:25 AM
Last Updated : 25 Aug 2023 06:25 AM
நகைச்சுவை வழியே உலகப் புகழ்பெற்ற திரைக் கலைஞர் பலர்! அவர்களில் ஸ்டீவ் மார்ட்டினும் ஒருவர். 1960களில் ஒரு மேஜிக் நிபுணராகத் தனது வாழ்க்கை யைத் தொடங்கி, அதன் பின்னர் தொலைக்காட்சியில் ‘ஸ்டாண்ட் அப்’ காமெடி நிகழ்ச்சிகளுக்கு எழுதி, அதன் மூலம் தனது இருபத்து மூன்றாம் வயதிலேயே பெரும்புகழ் எய்தி, எம்மி விருதை வென்றவர்.
அதன் பின் எண்ணற்ற ‘ஸ்டாண்ட் அப்’ காமெடி நிகழ்ச்சிகளை எழுதி, பின்னர் ‘சாட்டர்டே நைட் லைவ்’ என்கிற நிகழ்ச்சியில் பலமுறை தோன்றி, காமெடி ஆல்பங்கள் நிறைய வெளியிட்டு, திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர். சில இசை ஆல்பங்களும் வெளியிட்டிருக்கிறார். அதிலும் அவர் பிரபலம். இன்றும் தனது எழுபத்து எட்டாம் வயதில் மிகவும் துடிப்பாக நடித்துக்கொண்டும் காமெடி செய்துகொண்டும் இருப்பவர். இவரைத் தெரியாத ஹாலிவுட் ரசிகர்கள் இருக்கவே முடியாது.
கிட்டத்தட்ட அப்படியே ஸ்டீவ் மார்ட்டின் போலவே, அவருக்கு ஐந்து வயது இளையவரான மார்ட்டின் ஷார்ட்டையும் சொல்ல முடியும். எழுபதுகளின் தொடக்கத்தில் ஓர் இசை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, அங்கிருந்து அப்படியே பல தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்துப் பிரபலமடைந்து, ஸ்டீவ் மார்ட்டின் போலவே ‘சாட்டர்டே நைட் லைவ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி, ஹாலிவுட்டின் பிராட்வே போன்ற தியேட்டர் ஷோக்களிலும் நடித்துப் பிரபலமடைந்தவர் மார்ட்டின் ஷார்ட்.
நகைச்சுவை கலைஞர்களின் இணை: ஸ்டீவ் மார்ட்டினும் மார்ட்டின் ஷார்ட்டும் இணைந்து 2013 முதல் 2019 வரை ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை உலகெங்கும் நிகழ்த்தி உள்ளனர். அவற்றில் ஒன்று ‘An Evening you will forget for the rest of your life'. நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கும் இந்நிகழ்ச்சி மூன்று எம்மி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
அமெரிக்கப் பார்வையாளர்களைப் பொறுத்தவரை, இந்த இருவரையும் கடந்த 45 வருடங்களாக சேர்ந்தே பல படங்களிலும் காமெடி ஷோக்களிலும் பார்த்து வந்திருக்கின்ற னர். எனவே இந்த ஜோடியின் மேல் நகைச்சுவை ரசிகர்களுக்கு ஒரு வாஞ்சை உண்டு.
இப்படிப்பட்ட இரண்டு நகைச்சுவை மேதைகள் இணைந்து ஒரு வெப் சீரீஸில் நடித்தால் எப்படி இருக்கும்? அதுதான் உலகெங்கும் அதிரிபுதிரியான வரவேற்பைப் புகழ்பெற்ற ‘ஒன்லி மர்டர்ஸ் இன் த பில்டிங்’ (Only Murders in the Building) என்கிற தொடர். இந்த இருவருடன் சேர்த்து, புகழ் பெற்ற பாடகியான செலீனா கோம்ஸும் இந்த சீரீஸில் நடித்திருக் கிறார்.
கதாபாத்திரங்களை இணைக்கும் புள்ளி: இந்த சீரீஸின் சிறப்பம்சம் என்ன வென்றால், இதுவரை வந்துள்ள சீசன்களில் ஒரு புகழ்பெற்ற நடிகரே நடிப்பார். அவர் வில்லனாகவோ அல்லது வில்லனாகச் சந்தேகப்படக் கூடிய கதாபாத்திரமாகவோ இருக்கக்கூடும். அப்படி முதல் சீசனில் உலகின் சிறந்த பாடகர்களில் ஒருவரான ஸ்டிங் நடித்தார்.
அதிலேயே இன்னொரு பிரபல காமெடியனான டீனா ஃபேவும் நடித்தார். இரண்டாவது சீசனில் டீனா ஃபேவுடன் இணைந்து நடிகையும் மாடலுமான காரா டெலவீன் நடித்தார். தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மூன்றாவது சீசனில் உலகின் மிகச் சிறந்த நடிகையான மெரில் ஸ்ட்ரீப் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சீரீஸின் கரு எளிமையானது. ஒரு பழம்பெருமை வாய்ந்த அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் பலரும் வாழ்கிறார்கள். அவர்களில் தொண்ணூறுகளின் வரவேற்பைப் பெற்ற ‘ப்ராஸ்ஸோஸ்’ என்கிற துப்பறியும் டிவி சீரீஸில் பிரதான வேடத்தில் நடித்து, அதன்பின் வாய்ப்புகள் மங்கி இப்போது வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கும் - மறக்கப்பட்ட நடிகரான - சார்லஸ் சாவேஜும் (ஸ்டீவ் மார்ட்டின்) வாழ்கிறார்.
இவர் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனபோது பிராட்வேயில் நாடகங்கள் இயக்கி, அதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு (ஒருமுறை இவரால் செட்டே நாசமாகிவிடுகிறது), அதனால் அதிலிருந்து விலகியிருக்கிறார். பணத்துக்குச் சிங்கியடிக்கும் மற்றொரு ‘செலிபிரிட்டி’யான ஆலிவர் பட்நாமும் (மார்ட்டின் ஷார்ட்) இதே அப்பார்ட்மெண்டில் வாழ்கிறார்.
தனது உறவுக்காரப் பெண்மணி ஒருவரது வீட்டில் அடைக்கலமாக வந்து தனியே தங்கியிருக்கும் இளம் ஓவியர் மேபல் மோராவாக செலீனா கோம்ஸும் இங்கேதான் வாழ்கிறார். இவர்களைத் தவிர பல சுவாரசியமான கதாபாத்திரங்கள் அந்த அமார்ட் மெண்ட்டில் உண்டு. இவர்களுக்குள் பல பிரச்சினைகள்.
இவர்களில் சார்லஸ் சாவேஜ், ஆலிவர் பட்நாம் மேபல் மோரா ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்கிடையே ஓர் ஒற்றுமை உண்டு. குற்றவியல் சார்ந்த ஒரு ‘பாட்கேஸ்ட்’ என்றால் மூவரும் விரும்பி ரசிப்பார்கள். ஒருமுறை அமார்ட்மெண்ட்டில் தீ எச்சரிக்கை விடப்பட்டு, அனைவரும் வெளியேற்றப்படும் போது மூவரும் சந்திக்கிறார்கள்.
அப்போது அந்தப் ‘பாட்கேஸ்ட்’ பற்றிப் பேசி மூவரும் நட்பாகிறார்கள். அச்சமயத்தில் அவர்களது அபார்ட்மெண்ட்டில் ஒரு கொலை நடக்கிறது. கொலைகள் பற்றிய ‘பாட்கேஸ்ட்’டின் ரசிகர்கள் என்பதால், அந்தக் கொலை எப்படி நடந்திருக்கும் என்ற கேள்வியும் ஊகமும் இவர்களுக்குள்ளேயே இயல்பாக எழுகின்றன. அதில் கொலைசெய்யப்பட்ட நபருக்கும் மேபல் மோராவுக்கும் ஒரு பழைய தொடர்பு உண்டு.
நிஜமும் நிழலும்: மூவரும் இணைகிறார்கள். ஒரு ‘பாட்கேஸ்ட்’ தொடங்க முடிவெடுக்கிறார்கள். அந்த ‘பாட்கேஸ்ட்’டில் இவர்கள் துப்பறிவதை வாராவாரம் பேசிப் பதிவுசெய்கிறார்கள். இந்த மூவரும் சேர்ந்து எப்படித் துப்பறிகிறார்கள் என்பதை ரசிக்கத்தக்க நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் சீரீஸ் ‘Only Murders in the Building’.
இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசனில் மூன்று எபிசோட்கள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு சீசனிலும் ஒரு கொலை. அந்தக் கொலையை இவர்கள் துப்பறிந்து கண்டுபிடிப்பதோடு சீசன் முடியும். அடுத்த சீசனில் புதிதாக ஒரு கொலைக் கதை.
இந்த சீசனின் சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்டீவ் மார்ட்டினும் மார்ட்டின் ஷார்ட்டும் தாங்கள் நிஜவாழ்க்கையில் என்ன செய்தார்களோ அதை நினைவுபடுத்தும் கதாபாத்திரங்களில் நடித்திருப்பதுதான். ஸ்டீவ் மார்ட்டின் நடிகராகவே அறியப்படுபவர். மார்ட்டின் ஷார்ட் பிராட்வேயில் பல வருடங்கள் நடித்திருக்கிறார்.
எனவே ஸ்டீவ் மார்ட்டின் ஒரு பழைய நடிகராகவும், மார்ட்டின் ஷார்ட் ஒரு பிராட்வே இயக்குநராகவும் நடித்திருப்பதால் அது சார்ந்த வசனங்களும் அதை வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் நகைச்சுவையும் நன்றாக வந்திருக்கின்றன. அதேபோல் அந்த அபார்ட் மெண்ட்டுக்குள் இருக்கும் பிறருடனும் இவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கும். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இருப்ப தால் அதிலும் நல்ல நகைச்சுவை உண்டு.
விழுந்து புரண்டு நாம் சிரித்துக்கொண்டிருந் தாலும் அதை மீறி இந்த மூவருடனும் அன்பான ஒரு பிணைப்பு ஏற்படுவது ஈர்ப்பான கூடுதல் அம்சங்களில் ஒன்று. இவர்கள் வெற்றிபெற்றாக வேண்டுமே, இவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணம் வருவதும் தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட திரைக்கதை.
இந்த சீரீஸை ஸ்டீவ் மார்ட்டினே உருவாக்கியிருக்கிறார். முதல் எபிசோடின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். இந்த சீரீஸின் பெரும்பாலான எபிசோட்களைப் பெண்கள் இயக்கியிருப்பது இதன் இன்னொரு சிறப்பம்சம் ‘Only Murders in the Building’ ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT