Published : 07 Nov 2017 10:44 AM
Last Updated : 07 Nov 2017 10:44 AM

வரலாறு தந்த வார்த்தை 08: ஹேப்பி ‘பே’ய் டே!

‘ஒ

ண்ணாந்தேதி பிறந்து ஒரு வாரமாச்சு. இன்னும் கையில காசு வரலையேப்பா!’ என்று ஊழியர்கள் பலர் சில நேரம் புலம்புவார்கள். அரசு ஊழியர்கள் என்றால் எப்போதாவது. தனியார் ஊழியர்கள் என்றால் எப்போதுமே!

ஆனால், கையில் பணம் வந்துவிட்டாலோ அவர்களின் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது. ‘பணத்தைக் கண்டா பேயைக் கண்ட மாதிரி அலறுவாங்க’ என்ற ‘பணமொழி’ இதிலிருந்துகூட வந்திருக்கலாமோ என்னவோ?

அது சரி… பணத்தைக் கண்டா ஏன் பேய் ஞாபகம் வரணும்? ஒருவேளை அதில் ‘பே’ (Pay) இருப்பதாலா?

வார்த்தை விளையாட்டை விடுங்கள். உண்மையிலேயே, வெளிநாடுகளில் சம்பள நாளை ‘Ghost walks’ என்று அழைப்பார்கள். அந்தச் சொற்றொடருக்குப் பின்னுள்ள வரலாறு இது:

வெளிநாடுகளில், நிறைய நாடக மேடைகள் இருக்கின்றன. அங்கு அரங்கேற்றப்படும் நாடகங்களுக்கு சினிமாவுக்கு நிகரான பெரும் வரவேற்பு இருக்கிறது. அந்த நாடகங்களில் பணியாற்றும் கலைஞர்கள் மூலமாகத்தான் மேற்கண்ட சொற்றொடர் பிறந்தது.

அப்போதெல்லாம், நாடகக் கலைஞர்களுக்குப் பேசப்பட்ட ஊதியம் சரியான நேரத்தில் கிடைக்காது. இதனால் கோபமடைந்த சிலர், சம்பளம் தராமல் இழுத்தடித்த ஒரு தயாரிப்பாளருக்கு, தக்க பாடம் கற்பிக்க நினைத்தார்கள்.

அதன்படி, அடுத்த சில தினங்களில் ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஹாம்லெட்’ நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில் ஹாம்லெட், இறந்துபோன தன் தந்தை ஹொரேஷியோவின் ஆவிக்காகக் காத்திருப்பார். அப்படிக் காத்திருக்கும் நேரத்தில் ‘ஒருவேளை அது மீண்டும் வரலாம்’ என்று சொல்வதுபோல ஒரு வசனம் வரும். அதைச் சொன்னவுடன், ஆவி வேடம் போட்டவர் திரை மறைவிலிருந்து நாடக மேடைக்கு வர வேண்டும். இதுதான் காட்சி.

ஆனால் அன்றைய தினம், ஹாம்லெட் வேடமிட்டவர் மேற்கண்ட வசனத்தைச் சொன்னவுடன், ஆவி வேடம் போட்டவர் மேடைக்கு வராமல், திரை மறைவில் இருந்துகொண்டு, ‘எங்களுக்குச் சம்பளம் தராத வரையில் நான் அங்கு வர இயலாது’ என்று வசனம் பேசினாராம். உடனே நாடக அரங்கம், சிரிப்பொலியால் அல்லோல கல்லோலப்பட்டது. அப்புறமென்ன, அன்றைய இரவே அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் சம்பளத்தை ‘செட்டில்’ செய்துவிட்டார் அந்தத் தயாரிப்பாளர்.

அன்று முதல் மேற்கண்ட சொற்றொடர், மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இனி எங்காவது அந்தச் சொற்றொடரைக் கேட்க நேர்ந்தால், பேயறைந்ததுபோல விழிக்காதீர்கள் ‘பே’ரன்பு கொண்டோரே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x