Published : 13 Aug 2023 06:15 AM
Last Updated : 13 Aug 2023 06:15 AM
சென்னையில் உள்ள நடனப்பள்ளியான கலாக்ஷேத்ராவில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாகக் கடந்த மார்ச் மாதம் புகார் எழுந்தது. உதவிப் பேராசியர் ஹரி பத்மன் உள்ளிட்டோர் மீது மாணவியர் பாலியல் புகார் தெரிவித்ததோடு நீதி கேட்டு உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஹரி பத்மன் கடந்த ஏப்ரல் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஒப்பந்த ஊழியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பாலியல் குற்றத்தை விசாரிக்க பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையில் தமிழகக் காவல்துறை முன்னாள் இயக்குநர் லத்திகா சரண், மயக்கவியல் நிபுணர் ஷோபா வர்த்தமான் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையைக் கடந்த ஆகஸ்டு ஏழாம் தேதி வெளியிட்டது. ஹரி பத்மன் மீதான குற்றத்தை இந்தக் குழு உறுதிப்படுத்தியதுடன் கடுமையான தண்டனை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது.
கலாக்ஷேத்ராவின் நிர்வாகப் பிரிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. கலாக்ஷேத்ரா என்பது பொது நிகழ்ச்சிகளுக்கான தளமாக இல்லாமல் கல்வி பயிலும் நிறுவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. பாலினப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பாலியல் புகார் அளிக்க வகை செய்யும் வகையில் கலாக்ஷேத்ராவின் உள்ளகப் புகார்க் குழுவில் மாற்றத்தை ஏற்படுத்தக் கோரி மாணவர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
பெண்களிடம் அத்துமீறுவது ஆள்வோருக்கு அழகல்ல: சென்னையில் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா ராஜன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கநாதன், மேயர் பிரியாவின் மீது இடித்தபடி நிற்பதும் அவரது கையைப் பிடித்துத் தன் அருகிலேயே நிறுத்திக்கொள்ள முயல்வதுமான காணொளி சில நாள்களுக்கு முன் வெளியானது. ரெங்கநாதனின் இந்த அநாகரிகச் செயலைப் பலதரப்பினரும் கண்டித்த நிலையில் திமுக அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு இது குறித்துத் தன் கண்டனத்தைக்கூடப் பதிவுசெய்யவில்லை.
மேயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கு முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த அநீதி குறித்து திமுகவைச் சேர்ந்த பெண்கள்கூட வாய்திறக்காமல் இருந்ததும் விமர்சிக்கப்பட்டது. தங்கள் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரிடமே தகாத முறையில் நடந்துக்கொள்வதுதான் திராவிட மாடலா என்கிற விமர்சனமும் எழுந்தது. பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்களை திமுகவைச் சேர்ந்தவர்கள் கண்ணியக்குறைவாக நடத்துவது இது முதல் முறையல்ல.
அமைச்சர் சேகர் பாபு பிரியாவை எதுவும் தெரியாத ‘குழந்தை’ என்று சொன்னதும், அமைச்சர் கே.என்.நேரு பிரியாவை ஒருமையில் அழைத்ததும் சமீபத்திய உதாரணங்கள். ஆனால், அமைச்சர் செய்த தவறுக்குக்கூட மேயர்தான் ‘அவர் என் அப்பா மாதிரி’ என்று விளக்கம் சொல்ல வேண்டிய நிலை. இப்படியொரு சூழலில் அரசியலுக்கு வர பெண்கள் எப்படி முன்வருவார்கள் என்பதை ஆள்வோர் சிந்திக்க வேண்டும். - ப்ரதிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT