Last Updated : 14 Nov, 2017 11:22 AM

 

Published : 14 Nov 2017 11:22 AM
Last Updated : 14 Nov 2017 11:22 AM

சேதி தெரியுமா? - யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களில் சென்னை

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் அமைப்பில், சென்னை இசை பாரம்பரிய கலாச்சாரத்துக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. 44 நாடுகளைச் சேர்ந்த 64 நகரங்கள் சமீபத்தில் இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. புதிதாக இணைக்கப்பட்ட நகரங்களுடன் சேர்த்து யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த அமைப்பில் இடம்பிடித்திருக்கும் மூன்றாவது இந்திய நகரம் சென்னை. ஜெய்ப்பூரும் (இசை) வாரணாசியும் (கைவினை, நாட்டுப்புறக் கலை) இந்தப் படைப்பாக்க அமைப்பில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டன.

ஆசிய மகளிர் குத்துச்சண்டை மேரி கோம் வெற்றி

வியட்நாமின் ஹோ சி மின் நகரில், நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் ‘கிம் ஹயாங் மி’யை இறுதிபோட்டியில் 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தப் பட்டத்தை வென்றார் மேரி கோம். ஆசிய மகளிர் குத்துச்சண்டையில் 48 கிலோ பிரிவில், மேரி கோம் வெல்லும் ஐந்தாவது தங்கப் பதக்கம் இது. 2014 ஆசிய போட்டிக்குப் பிறகு, மேரி கோம் வெல்லும் முதல் சர்வதேசத் தங்கப் பதக்கம் இது.

 

பூமியின் ஆயுட்காலம் 600 ஆண்டுகள்

பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், பூமியின் ஆயுட்காலம் 600 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கிறது என்ற கருத்தை நவம்பர் 5 அன்று பீஜிங்கில் நடைபெற்ற ‘Tencent WE’ மாநாட்டில் தெரிவித்தார். மக்கள்தொகைப் பெருக்கம், அதீத ஆற்றல் பயன்பாடு ஆகியவை 2,600 ஆண்டுக்குள் பூமியை நெருப்புப் பந்தாக மாற்றிவிடும் என்றார். அத்துடன், செயற்கை நுண்ணறிவும் மனிதகுல நாகரிக வரலாற்றில் மோசமான நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்தார். பூமிக்கு அருகிலிருக்கும் ‘ஆல்பா செண்டோரி’ (Alpha Centauri) விண்மீன் குழுமத்துக்கு இடம்பெயர்வதன் மூலம் தப்பிக்க முடியும் என்றார்.

650 மாவட்டங்களில் இந்திய அஞ்சல் வங்கிகள்

2018 ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டின் 650 மாவட்டங்களில் இந்திய அஞ்சல் வங்கிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு நவம்பர் 4 அன்று தெரிவித்தது. தகவல்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா, கிராமங்களில் செயல்படும் அஞ்சல் வங்கிக் கிளைகளும் இந்தப் புதிய வங்கிகளுடன் இணைக்கப்படும் என்றார். இந்தியாவில் 1,54,000 அஞ்சல் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 1,39,000 அஞ்சல் அலுவலகங்கள் கிராமப்புறங்களில் செயல்படுகின்றன.

2017: 2-வது வெப்பமான ஆண்டு

இதுவரை பதிவான வெப்பமான மூன்று ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இடம்பெற்றிருப்பதாக உலக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் 2017-ம் ஆண்டுக்கான பருவமழைக் காலமும் சராசரியைவிட 5 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது உலக வானிலை மையம். 2017-ம் ஆண்டின் உலகின் சராசரி வெப்பநிலை ஜனவரியிலிருந்து செப்டம்பர்வரை முந்தைய தொழில்புரட்சி காலகட்டத்தைவிட ஏறத்தாழ 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. ‘எல் நினோ’ விளைவால், 2016-ம் ஆண்டுதான் அதிவெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. இதில் எல் நினோ விளைவுக்குப் பிறகான 2017-ம் ஆண்டு இரண்டாவது வெப்பமான ஆண்டு என்றும், 2015-ம் ஆண்டு மூன்றாவது இடத்திலும் இருக்கலாம் என்றும் உலக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

பகுதிநேர விவசாயத்தால் தீர்வு!

குறைவான வருமானம், அதிகமான செலவு, கடன்சுமை போன்ற காரணங்களால் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துவருகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, விவசாயிகள் பகுதிநேரமாக விவசாயம் செய்வது தீர்வாக இருக்கும் என்று ஹைதராபாத்தில் நவம்பர் 10 அன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் 60 சதவீத மக்கள் நிலத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்கின்றனர். ஆனால், 1980-களில், மூன்றில் இரண்டு பங்காக இருந்த விவசாயக் குடும்பங்களின் வருமானம், தற்போது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. இந்நிலையில் விவசாயத்தை இனியும் முழு நேரத் தொழிலாகத் தொடர்வது சிக்கல் என்கிற விவாதம் எழுந்துள்ளது.

14chgowDebajani Gosh

‘நாஸ்காம்’ புதிய தலைவர்: தேபஜானி கோஷ்

மென்பொருள், சேவைகள் நிறுவனங்களுக்கான தேசிய அமைப்பான நாஸ்காமின் (NASSCOM) புதிய தலைவராக தேபஜானி கோஷ், நவம்பர் 10 அன்று அறிவிக்கப்பட்டார். 2018 மார்ச்சில் நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகரின் பதவிக்காலம் முடிவடைவதால், அவரைத் தொடர்ந்து புதிய தலைவராக தேபஜானி நியமிக்கப்பட்டிருக்கிறார். நாஸ்காமின் முதல் பெண் தலைவராக இவர் பொறுப்பேற்கவுள்ளார். இவர் ‘இன்டெல் தெற்காசியா’வின் முன்னாள் நிர்வாக இயக்குநர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை, பி.பி.ஓ. துறைக்கான தன்னார்வ வர்த்தக அமைப்பாக நாஸ்காம் செயல்பட்டுவருகிறது.

 

ஃபேஸ்புக்: இந்தியாவுக்கான பேரிடர் வரைபடங்கள் அறிமுகம்

சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், இந்தியாவுக்கான பேரிடர் வரைபடங்களை நவம்பர் 9 அன்று அறிமுகப்படுத்தியது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர் காலகட்டத்தில் மக்களை மீட்பதற்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபேஸ்புக். இந்தியாவில் நடைபெற்ற முதல் பேரிடர் உச்சி மாநாட்டில் தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையத்துடன் இணைந்து இந்த சேவையை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பேரிடர் காலகட்டத்தில், ஃபேஸ்புக்கின் இந்தியப் பயனர்களிடம் பேரிடர் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் பகிர்ந்துகொள்ளவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x