Last Updated : 28 Nov, 2017 12:18 PM

 

Published : 28 Nov 2017 12:18 PM
Last Updated : 28 Nov 2017 12:18 PM

ஆங்கிலம் அறிவோமே 188: மிருகத்தனம் என்றால் என்ன?

கேட்டாரே ஒரு கேள்வி

Intelligence என்றால் புத்திசாலித்தனம் என்றுதானே பொருள்? அப்படியானால் CIA என்பதன் விரிவாக்கம் Central Intelligence Agency என்கிறார்களே, அதிலிருப்பவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தமா?

Brutalize என்றால் ஒருவரை மிருகத்தனமாக நடத்துவதா என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Brute என்றால் விலங்கைக் குறிக்கிறது. அதேநேரம் வன்முறை எண்ணங்கள் கொண்ட, வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மனிதனையும் அந்த வார்த்தை குறிக்கிறது. He is a cold-blooded brute.

இந்த இடத்தில் cold-blooded, warm-blooded இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வது அவசியம். Cold-blooded animals என்பது உடல் வெப்பநிலையைச் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளும் விலங்குகளைக் குறிக்கும். இந்த விலங்குகள் சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு இயங்கும். மீன், பாம்பு, பல்லி ஆகியவை cold-blooded animals.

பாலூட்டிகளும் (மனிதன் உட்பட) பறவைகளும் warm-blooded வகையைச் சேர்ந்தவை. அதாவது வெளியில் கடும் குளிர் இருந்தாலும் வெப்பம் தகித்தாலும் அவற்றின் உடலில் இருக்கும் வெப்பம் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

மிகவும் குரூரமாக, பிறர்மீது சிறிதும் பரிவு இல்லாமல் நடந்துகொள்வதையும் cold-blooded என்று சொல்வார்கள் – A cold-blooded murder.

இப்போது brutalize-க்கு வருவோம். ஒருவரிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டால் அதை brutalize என்று சொல்வதில்லை. ஆனால், ஒருவரை மிக மோசமாக நடத்தும்போது அவர் மனதில் பழி வாங்கும் உணர்வு அதிகமாகலாம். கோபத்தில் கொலை செய்யலாம் என்ற முடிவுக்குக்கூட அவர் வரலாம். அதாவது மனிதனாக இருக்கும் அவர் மிருகமாக மாறுகிறார். இப்படி அவரை ஆக்குவதைத்தான் brutalize என்கிறார்கள்.

CIA-வினரின் புத்திசாலித்தனம் தொடர்பான ஆராய்ச்சி இருக்கட்டும்.

Intelligence என்பதற்கு ரகசியத் தகவல் என்றும் ஒரு பொருள் உண்டு. பெரும்பாலும் பிற நாடுகளின் (முக்கியமாகப் பகை நாடுகளின்) அரசு குறித்த ரகசியத் தகவல்களை intelligence என்று குறிப்பிடுவார்கள். They received intelligence that the headquarters was a target for the bombing.

இதுபோன்ற தகவல்களைக் கையாளும் மனிதர்களையும் intelligence என்பார்கள். உளவுத்துறை.

“A step in the right direction” என்றால் என்ன என்று கேட்கிறார் ஒரு நண்பர்.

சரியான முகவரியை நோக்கிச் செல்வது என்ற மேலோட்டமான அர்த்தம் (மட்டும்) அல்ல. உங்கள் குறிக்கோள் எதுவோ அதை நெருங்கும் வகையில் நீங்கள் ஒரு செயலைச் செய்தால், அதை the step in the right direction என்று கூற முடியும்.

“I am working in a bank” என்று ஒருவர் கூறுகிறார். “நானும் ஒரு வங்கியில்தான் வேலை செய்கிறேன்’’ என்பதைக் குறிப்பிடுவதற்கான ஒரே வழி “I am also working in a bank” என்பதுதானா என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். அதற்கான பதில் இதோ - “So am I” என்று சுருக்கமாகவும், பளிச்சென்றும் கூறலாம்.

“I would like to go to Maldives” என்று ஒருவர் கூறினால், உங்களுக்கும் அந்த விருப்பம் இருக்குமானால் “Me too’’ என்று பேச்சு வழக்கில் கூறலாம். “I was late for work today’’ என்று ஒருவர் வருந்தினால், “So was Kumar” என்று நீங்கள் ஆறுதலாகக் கூறலாம்.

URBAN – URBANE

Urban என்பது நகரம் தொடர்பானது. Urban life has many advantages over rural life. (மாற்றிக் கூறினாலும் பொருந்தும்தான்). பெரு நகரம், சிறு நகரம் இரண்டு தொடர்பான விஷயங்களுக்குமே urban என்பதைப் பயன்படுத்தலாம்.

Urbane என்றால் மரியாதை தெரிந்த என்று அர்த்தம். பிறரது கருத்துக்கு மதிப்பு கொடுத்து பெரியோரிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளும் இளைஞனை He is an urbane young man என்று கூறலாம். When the urbane heiress walked through the hotel, the hotel manager greeted her with a bouquet of roses.

போட்டியில் கேட்டுவிட்டால்?

About 15 existing clerks were made _________ when the bank introduced computers.

(a) old

(b) Necessary

(c) Redundant

(d) Expendable

(e) Confirmed

அந்த வங்கி, கணினிகளை அறிமுகப்படுத்தியபோது 15 எழுத்தர்கள் தேவையற்றவர்கள் ஆகிவிட்டனர் என்ற பொருள் கொண்ட வாக்கியம் இது.

Were made confirmed என்பதே தவறு (were confirmed ஆங்கில இலக்கணப்படி இருக்கலாம். ஆனால், வாக்கியம் அளிக்க வேண்டிய அர்த்தத்துக்கு நேரெதிராக இது இருக்கிறது).

கணினிகள் அறிமுகமாகும்போது அவற்றை இயக்கப் புதிய நபர்கள் தேவைப்படலாம். எனவே, necessary என்ற வார்த்தை சரியானதுபோல் தோன்றலாம். ஆனால், வாக்கியத்தில் ‘existing’ என்ற வார்த்தை இருக்கிறது. எனவே necessary இங்கு பொருந்தவில்லை.

Expendable என்றால் ஒருவர் இல்லாமலேயேகூட அந்தக் காரியத்தை முடித்துவிட முடியும் என்று அர்த்தம். They are expendable என்றால் அவர்கள் (ஒரு காரியத்தைச் செய்ய) அவசியமானவர்கள் என்று அர்த்தமல்ல. அதனால், பயன்படும் வழக்கு என்ற கோணத்தில் redundant இங்கு அதிகம் பொருந்துகிறது.

கணினிகள் அறிமுகமானதால் யாரும் வயதானவர்களாக ஆகிவிட முடியாது. எனவே old என்பதும் பொருத்தமானதல்ல.

Redundant என்ற வார்த்தையே இங்கு பொருத்தமானது.

About 15 existing clerks were made redundant when the bank introduced computers.

சிப்ஸ்

Ominous என்றால் என்ன பொருள்?

Omen என்றால் தீய சகுனம். Ominous என்றால் தீய சகுனம் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறவர். Ominous dark clouds, Ominous dangerous eyes.

An innate aspect என்றால்?

கூடப் பிறந்த தன்மை.

பெண் தன்மைகளைக் கொண்ட ஆணை Effeminate என்கிறோம். ஆண் தன்மையைக் கொண்ட பெண்ணை எப்படிக் குறிப்பிடலாம்?

Tomboyish

விளக்கம்

ஆங்கிலம் அறிவோமே- 185-வது பகுதியில் advice–advise ஆகியவற்றுக்கிடையே உள்ள வித்தியாசத்துக்கான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், எடுத்துக்காட்டாக அளித்த வாக்கியம் ஒன்றில் advices என்று குறிப்பிட்டுவிட்டேன். Advice என்பது எப்போதும் ஒருமைதான். Plural-லில் சொல்ல வேண்டுமென்றால் ‘words of advice’ என்று கூறலாம் (a piece of advice என்றும் கூறலாம்). இதைச் சுட்டிக் காட்டிய இரு வாசகர்களுக்கும் நன்றி.

என்றாலும் கூடுதலாக ஒரு விளக்கம். வணிக அரங்கில் “Remittance advice”என்பதுபோல் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் plural-லில் “Remittance advices” என்பதாக இருக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x