Published : 14 Nov 2017 11:52 AM
Last Updated : 14 Nov 2017 11:52 AM
வி
ண்பாறை போன்ற ஒரு பொருள் வேகமாகச் சூரியக் குடும்பத்துக்குள் நுழைவதை, அக்டோபர் 19 அன்று ஹவாய் பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் தொலைநோக்கி மூலம் கண்டார்கள். அதனுடைய நகர்வை வைத்துக் கணக்கிட்டபோது, அது விண்பாறையாகவோ வால்நட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள். அதிவேகத்தில் ஒரு கோடுபோல் சூரியப் பாதையில் நுழைந்த அந்தப் பொருள் வியப்பளித்தது.
இது கிட்டத்தட்ட 1,300 அடி அகலம் கொண்டதாக இருக்கலாம் என்று கணக்கிட்டது நாசா. அதன் வேகத்தின்படி அது சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த பொருளாக இருக்க முடியாது எப்பதை உறுதிசெய்யப் பல விண்ணோக்கு ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவாக இது அதிவேகத்தில் சூரியனைச் சுற்றிப்போகும், நட்சத்திரங்களுக்கிடையே இருந்து வந்த பாறைப் பொருளாக இருக்கலாம், இது சூரியனைச் சுற்றிச் செல்லும் பாதையை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் இது திரும்பி வராது என்கிற முடிவுக்கு வந்தார்கள்.
எங்கிருந்து வந்தது?
இந்தப் பாறை, லிரா (lyra) நட்சத்திரக் கூட்டத்திலிருந்து ஒரு நொடிக்கு 25.8 கி.மீ.வேகத்தில் பயணித்து வந்தது. இது சாதாரணமாக நமது கோள்கள் சுற்றும் சமதளப் பாதைக்கு மேலிருந்து வந்து சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இருந்தாலும் இது நமது கோள்களோடு மோதவில்லை. செப்டம்பர் 2 அன்று புதனுடைய சுற்றுவட்டப்பாதையில் இருந்த அது , பூமியின் சுற்றுவட்டப்பாதையை அக்டோபர் 14 அன்று கடந்து சென்றது. பூமியின் சுற்றுவட்டப்பாதையைக் கடக்கும்போது ஒரு நொடிக்கு 27 கி.மீ.வேகத்தில் பெகாசஸ் நட்சத்திரக் கூட்டத்தை நோக்கிச் சென்றது.
இதுபோன்ற சிறிய பாறைப் பொருட்கள் மற்ற நட்சத்திரங்களுக்கு இடையே கோள்கள் உருவான காலத்தில் தூக்கி வீசப்பட்ட பொருளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நமது சூரியக் குடும்பத்தில் நுழையும் வேற்று நட்சத்திரக் கூட்டத்தின் முதல் பொருளும் இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள்.
வேற்று நட்சத்திர விருந்தாளி
சூரியக் குடும்பத்தை நோக்கி வந்து சென்ற பொருள் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட வெளியில் இருந்து வந்தது என்பதை எப்படி அறிந்தார்கள்?
வந்து சென்ற விண்பொருள் மணிக்கு 91,732 கி.மீ வேகத்தில், நமது கோள்கள் சூரியனைச் சுற்றும் சமதளப் பாதைக்கு நேர் செங்குத்தாக வந்தது. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள பாறைப் பொருட்கள், வால் நட்சத்திரங்கள் இம்மாதிரி பாதையில் சுற்றுவதில்லை. அவை பெரும்பாலும் நமது கோள்கள் சுற்றும் சமதளப் பாதையிலேதான் சுற்றிச் செல்லும்.
ஆனால், நமது சூரியக் குடும்பத்துக்கு விருந்தாளியாக வந்த பாறை புதன்கோள் பாதையில் நுழைந்து பிறகு சூரிய ஈர்ப்புவிசையால் உடனடியாகத் திரும்பிப் பூமியின் சுற்ற வட்டப்பாதையில் பூமிக்கு 1 கோடியே 50 லட்சம் மைல்களுக்கு உள்ளாகவே சென்றுவிட்டது. முதலில் இதற்கு வால் நட்சத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் எண் ‘C/2017 U1’ இதற்கு கொடுக்கப்பட்டது. பிறகு வால் நட்சத்திரத்துக்கு உரிய அறிகுறிகள் எவையும் இல்லை என்பதால் விண்பாறைப் பொருட்களுக்கான எண் ‘A/2017 U1’ இதற்குகொடுக்கப்பட்டுள்ளது.
கட்டுரையாளர்
அறிவியல் பரப்பாளர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT