Published : 22 Jul 2023 06:08 AM
Last Updated : 22 Jul 2023 06:08 AM

வெங்காயம் கொள்முதல் அதிகரிப்பு

விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் மத்திய அரசு மூன்று லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்துள்ளது. சமீபத்தில் தக்காளி விலை அதிக அளவு உயர்ந்ததுபோல் வெங்காயத்தின் விலை உயராமல் தடுக்கும் நோக்கில் இந்தக் கொள்முதலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

’விலை சமநிலைப்படுத்துதல் நிதி’யின் கீழ் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2.51 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொள்முதல் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தைப் பராமரிக்க ‘பாபா அணுசக்தி ஆய்வு மைய’த்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறைச் செயலாளர் ரோஹித்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் உற்பத்தி சரியும்: இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜம்மு காஷ்மீர், இமாசலப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் கன மழை பெய்தது. இதன் காரணமாக இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியில் சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இமாசலப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு 3.36 கோடிப் பெட்டிகள் அளவுக்கு ஆப்பிள் விளைந்தது. அது இந்த ஆண்டு 1.25 கோடிப் பெட்டிகளாகச் சரிவடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியின் ஆப்பிள் உற்பத்தியும் 50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருப்புத் தேவையில் பற்றாக்குறை: இந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன் படுத்தப்படும் துவரம் பருப்புக்கான தேவையில் பற்றாக்குறை நிலவிவருகிறது. இது ஆண்டுக்கு 17 லட்சம் டன் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகள் துவரம் பருப்பு உற்பத்தியில் ஈடுபடவுள்ளன. ஆஸ்திரேலிய வேளாண் துறை அமைச்சர் முர்ரே வாட் ’இந்திய உணவு அமைச்சகம்’, ’இந்தியப் பருப்பு, தானிய உற்பத்தி சங்கம்’ ஆகிய அமைப்புகளின் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரேலிய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

2019இல் ஆஸ்திரேலியா இந்தப் பயிரைச் சோதனை முறையில் விளைவித்துப் பார்த்தது. ஆனால், உற்பத்திசெய்யப்பட்ட பருப்பின் விலை, இந்தியச் சந்தைக்கு ஏற்ற வகையில் இல்லை. இப்போது ஆஸ்திரேலியா விலையை மறுபரிசீலனை செய்யவுள்ளது. இதற்கு முன்னதாக ’இந்தியப் பருப்பு, தானிய உற்பத்தி சங்கம்’ பிரேசிலுடனும் பருப்பு உற்பத்திக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அரிசி ஏற்றுமதிக்கு தடை வரலாம்: அரிசி விலை உயர்ந்துவருவதை அடுத்து மத்திய அரசு பாஸ்மதி தவிர்த்து அனைத்து விதமான அரிசி ஏற்றுமதிக்கும் தடைவிதிக்க வாய்ப்புள்ளதாக புளூம்பெர்க் அறிக்கை கணித்துள்ளது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அரிசி விலை அதிகரிப்பதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தத் தடை வரும் பட்சத்தில் உள்நாட்டில் விலை குறையும். ஆனால், அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் இருக்கும் நாடு என்பதால், உலகச் சந்தையில் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் பரவலான மழைப்பொழிவு இல்லாததால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதுதான் விலையேற்றத்துக்கான காரணம் எனச் சொல்லப் படுகிறது.

- விபின்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x