Published : 27 Jun 2023 01:43 PM
Last Updated : 27 Jun 2023 01:43 PM

சென்னையில் பெருவியன் படவிழா

தென் அமெரிக்காவின் மேற்கே, பசுபிக் பெருங்கடலின் கரையோரம் அமைந்திருக்கும் பெரு குடியரசு ஓர் அழகிய தேசம்! அழகிய கடற்கரை நகரங்கள், மழைக்காடுகள், பனி படர்ந்த ஆண்டிஸ் மலைத் தொடர், வியப்பூட்டும் கட்டிடக் கலை, அறுசுவை உணவுக் கலாச்சாரம், நீண்ட நெடிய வரலாறு என பெரு நாட்டின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக கிமு 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு மனிதக் குடியேற்றம் பெருவியன் பகுதியில் நடந்திருக்கலாம் என்பதை பெருவில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

குறிப்பாக வரலாற்றின் இடைக்காலம் என்கிற அழைக்கப்படும் 15 நூற்றாண்டில் பெருவில் நிலைபெற்றிருந்த ‘இன்கா’ பேரரசு குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இன்கா பேரரசால் எழில் கொஞ்சும் மச்சு பிச்சு மலைத்தொடர் மீது கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த நகரம், யுனேஸ்கோவல் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. மச்சு பிச்சுவின் அழகைக் காண உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட பெரு நாட்டின் உலக சினிமாக்கள் சர்வதேசப் படவிழாக்களில் கடந்த இரு பத்தாண்டுகளாகக் கவனம் பெற்று வருகின்றன. தற்கால பெருவின் சமூக வாழ்வைச் சித்தரிக்கும் 7 பெருவியன் உலக சினிமாக்களை இன்று தொடங்கி சென்னையில் 3 நாள்களுக்குத் திரையிடுகிறது இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (ICAF) திரைப்படச் சங்கம்.

சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரிச் சாலையில் உள்ள பிரெஞ்சு கலாச்சாரத் தூதரக (Alliance Francaise of Madras) அலுவலக அரங்கில், ஜூன் 27 ஆம் தேதியான இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவை, டெல்லியில் உள்ள பெரு நாட்டுக்கான தூதரகத்துடன் (Embassy of Peru in India, New Delhi) இணைந்து ஐசிஏஎஃப் இந்தப் படவிழாவை ஒருங்கிணைக்கிறது.

படவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணிக்கு ‘தி பெஸ்ட் ஃபேமிலீஸ்’ (The Best Families) ஓபனிங் பிலிம் ஆகத் திரையிடப்பட இருக்கிறது. அரசப் பரம்பரையில் வந்த இரண்டு செல்வாக்கு மிக்கக் குடும்பங்கள். அவற்றுக்கு அரண்மனைப் பணிப் பெண்களாக வேலை செய்து வருகிறார்கள் லஸ்மிலாவும் அவரது இளைய சகோதரியான பிடாவும். இது பாரம்பரியமாக அவர்களுக்கு வந்து சேர்ந்த பணி. சகோதரிகள் இருவரும் அக்குடும்பங்களின் உணர்வுபூர்வமான அனைத்து விவகாரங்களிலும் இரண்டறக் கலந்து நிற்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கிறது இப்படம். இப்படத்தைத் தொடர்ந்து ‘பெரு’ஸ் தி சிட்டி ஆஃப் கோஸ்ட்ஸ்’ என்கிற 45 நிமிட ஆவணப்படம் திரையிடப்படவிருக்கிறது கொலம்பியனுக்கு முந்தைய பெருவின் பழமையான நாகரிக காலத்தின் புதிரை அவிழ்க்க முயற்சிக்கும் ஆவணப்படம் அந்நாட்டின் பழம்பெரும் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் யாருக்கும் நல்ல அறிமுகமாக அமையக்கூடும்.

ஜூன் 28ஆம் தேதி ’டோண்ட் காம் மீ ஸ்பின்ஸ்டெர்’ (Don't Call Me Spinster), ‘தி சிட்டீஸ் ஆஃப் கிலௌட்ஸ்’ (Cities in the Cloud/Cities in the Cloud/) ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. ஜூன் 29ஆம் தேதியான படவிழாவின் இறுதி நாளில் ‘மார்கரிட்டா: தி ஸ்வீட் கியாஸ்’ (Margarita: That sweet chaos) முதல் திரைப்படமாகத் திரையிடப்படவிருக்கிறது. விவாகரத்து பெற்ற நாற்பது வயதான தந்தை தனது மகளுடன் சுதந்திரமான ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது மகள் 11 வயதை எட்டியதும் தனியே தூங்க விருப்பமின்றி தனது தந்தையுடன் தூங்க விரும்புகிறாள். அவள் தூங்குவதற்காக அவர் கதை சொல்லவேண்டியிருக்கிறது. தந்தை மகள் இடையிலான அந்தக் கதைசொல்லி உலகம் கொண்டுவரும் திருப்பங்கள் 11 வயது மார்கெரிட்டாவின் வாழ்க்கையை எவ்வளவு இனிமையாக்குகிறது என்பதுதான் படம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘டெலிசியோச ஃப்ரூடா செகா’ (Deliciosa Fruta Seca) என்கிற படம் குளோசிங் ஃபிலிம் ஆகத் திரையிடப்படவிருக்கிறது. இப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான மரிய அலிசியா, ஒரு பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண். கணவனை இழந்தவர். கணவர் வாங்கிய கடன்களுக்காக சொத்துக்களை இழந்தவர். இதனால் தனது பிறந்து வளர்ந்த நகரத்தைவிட்டு சிறிய நகரமொன்றில் குடியேறி வாழவேண்டிய நிலை. உயிர்வாழ அவர் தனது தேவைகளையும் அபிலாசைகளையும் பொருளாதாரக் காரணங்களுக்காக எவ்வாறு சுருக்கிக்கொண்டிருக்கிறார். அவரது புதிய வாழ்க்கையில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை இந்தப் படம் சித்தரிக்கிறது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x