Published : 22 Jun 2023 04:52 PM
Last Updated : 22 Jun 2023 04:52 PM
அக்சயாவும் சந்தியாவும் தோழிகள். ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். தினமும் பல விஷயங்களைப் பேசிக்கொண்டே பள்ளிக்குச் செல்வார்கள்.
அக்சயா: உனக்கு அமேசான் தெரியுமா?
சந்தியா: ஆ... நல்லாவே தெரியும். எங்க அம்மா அதுலதான் புடவை, சுடிதார் எல்லாம் வாங்குவாங்க.
அக்சயா : நான் அமேசான் காட்டைக் கேட்டேன்.
சந்தியா : அமேசான் காடா? படத்துல பார்த்திருக்கேன்... அந்தக் காடு பெருசா இருக்கும்.
அக்சயா: ஆமா சந்தியா, அமேசான்தான் உலகின் மிகப்பெரிய காடு. 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்புகொண்ட பெரிய மழைக்காடு.
சந்தியா: மழைக்காடா, அப்படினா?
அக்சயா: அதிகம் மழை பொழிவதால் இந்த வகையான காடுகளை மழைக்காடுகள் என்கிறார்கள். இந்த மழைக்காடுகள்தாம் இயற்கை வளங்கள் உற்பத்திக்கும் ஆயிரக்கணக்கான தாவரங்கள், உயிரினங்களுக்கு வீடாகவும் இருக்கிறது. ஆக்சிஜனையும் தருகிறது.
சந்தியா: இந்தக் காடு எங்கே இருக்கு?
அக்சயா: பிரேசில், பெரு, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், வெனிசூலா, கயானா, சூரினாம், பிரெஞ்சு கயானா உள்ளிட்ட ஒன்பது தென்னமெரிக்க நாடுகளில் அமேசான் மழைக்காடு பரந்து விரிந்திருக்கு. இதுல 60 சதவீதம் காடு பிரேசில் எல்லைக்குள்ள இருக்கு. பிரேசிலில் உள்ள மொத்த நிலப்பரப்பில் பாதியை அமேசான் மழைக்காடுதான் சூழ்ந்திருக்கு.
சந்தியா: பிரமிப்பா இருக்கு!
அக்சயா: இந்தக் காட்டுல 25 லட்சம் பூச்சி வகைகள், 2,500 மர வகைகள், 3 ஆயிரம் மீன் வகைகள், 1500 பறவை வகைகள், 425 பாலூட்டி வகைகள் இருக்கின்றன. இத்தனை உயிரினங்களுக்கு அமேசான்தான் வாழிடமா இருக்கு. இங்கே 500 பழங்குடி இனங்களைச் சேர்ந்த 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சில இன மக்கள் வெளியுலகத்தோட எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்காங்க. இந்தக் காடு புவியின் நுரையீரலாகவும் செயல்படுது. உலகின் இரண்டாவது மிக நீளமான ஆறு இங்கதான் இருக்கு. அந்த ஆறு பேரும் அமேசான்தான். இதோட நீளம் 6,760 கிலோமீட்டர் . இது உலக அளவில் 15 சதவீத நன்னீருக்கான ஆதாரமாக உள்ளது.
சந்தியா: ஆஹா, இவ்வளவு முக்கியமான காடா அமேசான்?
அக்சயா: ஆமாம்! இந்தக் காட்டுல மழை பெய்யும் போது மழைநீர் தரைக்கு வர 10 நிமிஷம் ஆகும். அந்த அளவுக்கு அடத்தியான, உயரமான மரங்கள் அமேசான் காட்டுல இருக்கு. அமேசான் நதி ஓங்கில், ராட்சத நீர்நாய் போன்ற அரிய வகை விலங்குகளும் இருக்கின்றன. அமேசான் காட்டில் பல வண்ண விஷத் தவளை, ஸ்லோத், கறுப்பு சிலந்தி குரங்கு போன்ற சிறப்பான உயிரினங்கள் காணப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய வகை உயிரினங்கள் அமேசானில் கண்டுபிடிச்சிருக்காங்க. இன்னும் பல உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படாம இருக்கு. ஆனால், தொடர் காடு அழிப்பால் கண்டுபிடிப்பதற்கு முன்னாடியே அழிந்து போக வாய்ப்பு இருக்கறதா சூழலியலாளர்கள் சொல்றாங்க, சந்தியா.
சந்தியா: காடழிப்பா?
அக்சயா: ஒரு பக்கம் மரங்களை வெட்டி, மனிதர்கள் காடுகளை அழிக்கிறார்கள். இன்னொரு பக்கம் இடி, மின்னல்கள் மூலம் தீ விபத்து எற்பட்டும் காடுகள் அழிகின்றன. அமேசான் காட்டுல 70 சதவீத காடழிப்பு எற்பட்டிருக்கு.
சந்தியா: ஐயோ, அமேசான் காட்டைப் பாதுகாக்க வேற வழியே இல்லையா?
அக்சயா: அதுக்கு அரசாங்கங்களும் பெரு நிறுவனங்களும் மனம் வைக்கணும். சரி, நாளைக்குப் பார்க்கலாம் சந்தியா.
- நவீன், பயிற்சி இதழாளர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment