Published : 24 Oct 2017 12:23 PM
Last Updated : 24 Oct 2017 12:23 PM
சி
ல நிமிடங்களில் இயற்பியல் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்குப் பிடித்தமான யூடியூப் சேனலாக விளங்குகிறது ‘மினிட்ஃபிசிக்ஸ’ (MinutePhysics). 2011-ம் ஆண்டிலிருந்து யூடியூப்பில் இயங்கிவரும் இந்த சேனலில், இயற்பியல் கருத்தாக்கங்கள் 10 நொடியிலிருந்து ஏழு நிமிடங்கள் வரையிலான வீடியோக்களில் ஆங்கிலத்தில் எளிமையாக விளக்கப்படுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ரிச் என்ற இயற்பியலாளர் நடத்தும் இந்த சேனலை 40 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். யூடியூப்பில் இயங்கிவரும் கல்வி சேனல்களில் முதன்மையான சேனல்களில் ஒன்றாக ‘மினிட்ஃபிசிக்ஸ்’ தற்போது இருக்கிறது. ஹென்றி ரிச் ‘மினிட்எர்த்’ (MinuteEarth) என்ற இன்னொரு பிரபலமான யூடியூப் சேனலையும் நிர்வகித்துவருகிறார்.
எவ்வளவு கடினமான இயற்பியல் கருத்தாக்கத்தையும் படங்கள் வரைந்து சில நிமிடங்களில் விளக்கிவிட முடியும் என்பதை இந்த சேனலின் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறார் ஹென்றி ரிச். ‘ஒரு தடையற்ற ஆற்றல் அசையாப் பொருளை எதிர்கொள்ளும்போது என்ன நடக்கும்?’ என்பதை விளக்கி இவர் பதிவிட்டிருந்த வீடியோவை இதுவரை 1.1 கோடிப் பேர் பார்த்திருக்கின்றனர். அதேமாதிரி, இவர் ‘ஹிக்ஸ் போஸான்’ (Higgs Boson) என்னும் துகளை விளக்கியிருந்த மூன்று வீடியோக்களும் பெரிய அளவில் கவனம்பெற்றிருக்கின்றன. அமெரிக்காவின் பிரபல வானியற்பியலாளர் நீல் திகிராஸ் டைஸன் (Neil deGrass Tyson), இயற்பியல் பேராசிரியர் சீன் எம். கரோல் (Sean M. Carroll) உள்ளிட்டவர்களுடன் இணைந்தும் ‘மினிட்ஃபிசிக்ஸ்’ வீடியோக்களை வெளியிட்டிருக்கிறது.
‘கரும்பொருள் (Dark Matter) என்றால் என்ன?’, ‘பிரபஞ்சம் என்றால் என்ன?’, ‘நெருப்பு என்றால் என்ன?’, ‘சூரியன் ஏன் மஞ்சளாகவும், வானம் ஏன் நீலமாகவும் இருக்கிறது?’ என்பது போன்ற பல இயற்பியல் கேள்விகளுக்கான விடையை சுவாரசியமாகச் சில நிமிடங்களில் விளக்கிவிடுகிறது இந்த சேனல். அறிவியலில் சாதிக்க நினைக்கும் மாணவர்கள் அவசியம் பின்தொடர வேண்டிய யூடியூப் சேனல் ‘மினிட்ஃபிசிக்ஸ்’.
யூடியூப் முகவரி: www.youtube.com/user/minutephysics/
இணையதள முகவரி: http://www.minutephysics.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT