Published : 08 Jun 2023 02:10 PM
Last Updated : 08 Jun 2023 02:10 PM
பெல்ஜியத்தில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, பலர் உயிர் பிழைக்கத் தங்களது தாய்நாட்டையும் குடும்பத்தையும் விட்டு ஒளிந்து மறைந்து வாழ்ந்துவந்த காலம் அது. அப்படியொரு நெருக்கடியான காலகட்டத்தில் ஜூன் 6, 1950 அன்று பிரஸல்ஸ் என்கிற பகுதியில் ஜாக் ஆகர்மான், நாடலியா தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் ஷாந்தால் ஆகர்மான். தன் பெற்றோர் யூதர்கள் என்கிற காரணத்தால் எந்த அளவுக்குக் கொடுமைகளைச் சந்திக்க நேர்ந்தது என ஷாந்தால் சிறுவயதிலேயே அறிந்துகொண்டார். அவருடைய தந்தை உயிருக்குப் பயந்து வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழாமல் ஒளிந்து மறைந்து வாழ்ந்தார். தாயோ வதைமுகாமில் கொடூரமான சூழலில் வளர்ந்தவர்.
ஷாந்தால் தன் தாய், தங்கையுடன் வாழ்ந்துவந்தார். பள்ளியில் படித்தபோது பிரெஞ்சு இயக்குநர் ழான் லூக் கோதார்த் படங்களால் ஈர்க்கப்பட்டார். திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஷாந்தாலின் மனதில் துளிர்விட்டது. பெரும் துயரங்களுக்கு மத்தியிலும் தன் மகளின் கனவுக்கு உறுதுணையாக இருந்தார் ஷாந்தாலின் தாய் நாடலியா. 17 வயதில் படிப்பை நிறுத்திவிட்டுச் சிறு சிறு வேலைகள் செய்து சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு குறும்படங்கள் இயக்கினார். அதற்குப் பெரிய வரவேற்பு இல்லை. இருப்பினும் மனம் தளராமல் தொடர்சியாகப் படங்களை இயக்கினார். 1971இல் நியூயார்க் நகருக்குச் சென்றவர், படம் இயக்குவதில் புதிய பரிமாணங்களைக் கற்றார். பிற இயக்குநர்களின் நட்பு கிடைக்க, தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கினார்.
குறும்படங்கள் இயக்கிய காலத்திலிருந்தே திரையில் கதைக்களத்தை, காட்சிகளை, நிறங்களை முதன்மையாகக் கொண்டு, வசனங்களைக் குறைவாக எழுதி இயக்கினார் ஷாந்தால். ஹோட்டல் மாண்டேரி, ஜீன் டில்மன் ஆகிய படங்களுக்குத் திரைக்கதை எழுதி இயக்கினார் ஷாந்தால். நீளமான வசனமில்லாத காட்சிகளோடு பெண்களின் அன்றாட வாழ்க்கையை எதார்த்தமாகக் காட்டிய ஷாந்தாலுக்கு, எதிர்ப்புகளும் பாராட்டுகளும் சேர்ந்தே கிடைத்தன. அதிலும் ஜீன் டில்மன் படத்தில் கணவனை இழந்த பெண், தன் மகனுடன் வாழும் வாழ்க்கையைப் பெரிதும் வசனங்களின்றி இயக்கியிருப்பார்.காலையில் சமைப்பது, வீட்டைத் துடைப்பது, தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவன் வீட்டுக்கு வரும் முன் பணத் தேவைக்காகப் பாலியல் தொழில் செய்வது... இதுதான் ஜீன் டில்மனின் வாழ்க்கை. துயரமும் விரக்தியும் ஜீன் டில்மனைத் தொற்றிக்கொண்டதுபோல் இருக்கும்.
தன் தூணாக இருந்த தாயின் கடந்த காலத்தின் கொடூரங்கள் ஷாந்தாலின் வாழ்க்கையையும் தாக்கின. 2015இல் தன் தாயை மையமாக வைத்து ஒரு ஆவணப்படத்தை இயக்கி, அந்த வருடமே தன் வாழ்க்கைக்குத் தானே முற்றுப்புள்ளியும் வைத்துக்கொண்டார் ஷாந்தால் ஆகர்மான்.
- வினோதினி குமார், பயிற்சி இதழாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT