Published : 03 Oct 2017 09:39 AM
Last Updated : 03 Oct 2017 09:39 AM
கேட்டாரே ஒரு கேள்வி
“The balloon went up, என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்த அத்தியாயத்தில் பலூன்கள் எதுவும் இடம் பெறவில்லை. சிந்தனை மேலும் அதிகமானது என்பதைக் குறிக்கதான் The balloon went up என்று குறிப்பிட்டார்களோ?”
முதலாம் உலகப்போருக்கு முன்பு ராணுவத்தினர் புதிய பகுதியைத் தாக்க முயற்சிக்கும்போது தங்கள் திறமையை உறுதி செய்துகொள்ள ஒரு காரியத்தைச் செய்தார்களாம். சில பலூன்களைப் பறக்க விட்டு அவற்றைக் குறிபார்த்துச் சுடுவார்கள். ஆனால் இந்த வழக்கம் விரைவில் நின்றுபோனது. காரணம் எதிரிகள் இதனால் எச்சரிக்கை அடைந்துவிட்டனர். முக்கியமாக பதுங்கு குழியில் இருப்பவர்களுக்கு இது மிக எளிதான சமிக்ஞை ஆகிவிட்டது. இதனால், ஆங்கிலத்தில் ‘The balloon went up’ என்பது ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இதழில் சிப்ஸ் பகுதியில் மையமாக இடம்பெறும் மூன்று வார்த்தைகளும் ‘a’ என்ற எழுத்தில் தொடங்குகின்றன.
இதைப் பார்த்ததும் இந்தப் பகுதியில் ஒரு புதிர்ப் பகுதியை உங்களுக்கு அளிக்கலாமே என்று தோன்றுகிறது.
கீழே உள்ள ஒவ்வொரு வசனத்தையும் கூறுவது யாராக இருக்கும்? கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு விடையும் ஒரே வார்த்தையைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு விடையும் ‘a’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும் (எனவே அவை ஆங்கில வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்பது வெளிப்படை). எந்த விடையும் எவருடைய தனிப்பட்ட பெயரும் அல்ல.
1. கடவுள் உண்டா இல்லையான்னு என்னைக் கேட்டால் ‘தெரியல்லே’ என்பதுதான் என் பதிலாக இருக்கும்.
2. காந்தியடிகள், சச்சின் டெண்டுல்கர், லியனார்டோ டாவின்ஸி, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோர் எல்லாம்கூட என்னைப் போலத்தான்.
3. ஆலமரத்தின் கீழ் கையில் சொம்போடு நடுநாயகமாக உட்கார்ந்து தீர்ப்பு சொல்வேன்.
4. கண்ணுங்களா, உலகத்திலே எல்லாரும் சந்தோஷமாக இருக்கணும், வசதியாக இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்.
5. குத்திக் காட்டுவது தப்பு என்பார்கள். ஆனால் சரியான இடங்களில் குத்துவதன் மூலம் நோயைத் தீர்க்க முயற்சிப்பதுதான் என் வேலை.
6. மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ச்சி செய்பவன் நான்.
“ஒரு நாளிதழில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியாணா சாமியாரை Swiss Knife என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்தக் கத்திக்கு ஏன் அந்தப் பெயர்? எதற்காக இந்த ஒப்பீடு?”
Swiss Army Knife என்பது பாக்கெட்டில் வைக்கக்கூடிய ஒரு கத்தி. இது மடித்து வைக்கப்படும் கத்தி என்பதோடு ஸ்க்ரூடிரைவர், சிறிய பிளேடு, நக வெட்டி, சிறிய ரம்பம், கத்திரிக்கோல் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியது. இதன் பெயர் ‘Offiziersmesser’. ஜெர்மன் மொழியிலுள்ள இந்த வார்த்தையை உச்சரித்துப் பார்த்துவிட்டு பல அமெரிக்க வீரர்களின் நாக்குகள் சுளுக்கிக் கொண்டதோ என்னவோ, இரண்டாம் உலகப் போருக்குப் பின் அதற்கு ‘Swiss Army Knife’ என்று பெயரிட்டார்கள். இதன் ஒரிஜினல் வடிவத்தின் பிடி சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதில் ஒரு சிலுவை காணப்படும். சிவப்பு வண்ணப் பின்னணியில் காணப்படும் வெள்ளைச் சிலுவைதான் சுவிட்சர்லாந்தின் கொடியின் வடிவமும்.
ஹரியாணா சாமியார் பலவிதக் குற்றங்கள் புரிந்ததாகவும், அவரது மடத்தில் பலவித மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தவிர சாமியார் என்பதையும் தாண்டி நடிகர், பாடலாசியர் என்று பலவித முகங்கள் கொண்டவராகவும் இருக்கிறார். இத்தகைய காரணங்களினால் அவரை Swiss Army Knife உடன் ஒப்பிட்டிருக்கக் கூடும்.
It is anybody’s guess என்பதை ஒருவர் தவறாகப் பயன்படுத்தியதைப் பார்த்தேன். மிகவும் எளிமையான - அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடிய ஒரு விஷயம் தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு ‘The answer is anybody’s guess’ என்றார்.
அதாவது யாரால் வேண்டுமானாலும் இதற்கான பதிலை அளிக்க முடியும் என்ற தொனியைக் குறிக்கிறது.
ஆனால் anybody’s guess என்பதற்கான பொருள் யாராலும் சிறிதும் யூகிக்க முடியாத ஒன்று என்பதுதான். How this happened is anybody’s guess!
Buridan’s Ass என்று ஒரு நாளிதழில் படித்ததாகவும், இதற்கும் கழுதைக்கும் என்ன தொடர்பு என்றும் ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.
Buridan என்பவர் ஒரு தத்துவவாதி. ஒரு முடிவுக்கு வரமுடியாமல் முட்டாள்தனமாக இழுத்துக்கொண்டே போகும் நிலையை அவர் ஒரு கற்பனை சூழல் மூலம் விளக்கினார்.
ஒரு கழுதையின் இருபுறமும் மிக அற்புதமான விருந்து படைக்கப்பட்டால், இதைச் சாப்பிடுவதா அதைச் சாப்பிடுவதா என்ற குழப்பத்திலேயே அந்தக் கழுதை நேரத்தை வீணாக்கிவிட்டு இறுதியில் பசியால் இறந்துவிடுமாம். இந்த அடிப்படையில், முடிவெடுக்க முடியாமல் காலம் கடத்திக்கொண்டே இருப்பவரை Buridan’s Ass என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.
Dilemma என்ற வார்த்தையை இதனுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. Buridan’s Ass என்பது இரண்டு அற்புதமான விஷயங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற திணறல். Dilemma என்பது சிறிதும் பிடிக்காத இரண்டு கசப்பான விஷயங்களில் எதையாவது தேர்ந்தெடுத்துத் தொலைக்க வேண்டும் என்கிற சங்கடம்.
“ஹலோ என்பது தொலைபேசியில் மட்டுமே பேச வேண்டிய வார்த்தையா?” என்று கேட்கிறார் ஒரு வாசகர்.
பிற நாடுகளில் Hello என்ற வார்த்தையை தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மட்டுமே நேரடியாக தொடர்புகொள்ளும்போதும் அதைப் பயன் படுத்துகிறார்கள். “Hello Madhavan, nice to meet you”.
தொலைபேசியில் பேசுபவர்களிடம்கூட பெரும் வேறுபாடு உண்டு என்பதை சமீபத்தில் அறிந்துகொண்டேன். ஆங்கிலேயர்களாக இருந்தால் அந்த உரையாடல் இப்படி இருக்கும்.
(தொலைபேசி ஒலிக்கிறது)
எதிர்முனையில் இருப்பவர்- Hello?
அழைத்தவர் – Could I speak to Mrs.Sundari?
பிரெஞ்சுக்காரர்களாக இருந்தால் இந்தத் தொலைபேசி உரையாடல் கீழே உள்ளபடி இருக்கும்.
(தொலைபேசி ஒலிக்கிறது)
தொலைபேசியை எடுத்தவர் – Hello.
அழைத்தவர் – Is this 98418 58888?
Yes
This is Vimal. Sorry for disturbing. Could I talk to Mrs. Sundari Please?
இந்த இடத்தில் கணிசமானவர்கள் செய்யும் ஒரு தவறைக் குறிப்பிட விரும்புகிறேன். “Can I speak to....?” என்று கூறுகிறார்கள். இது தவறு. அவர் ஒன்றும் வாய் பேச முடியாதவர் இல்லையே. “Could I speak to .....?’’ என்றுதான் அது இருக்க வேண்டும்.
தொடக்கம் இப்படித்தான்
Eavesdrop என்றால் ஒட்டுக்கேட்பது என்று பொருள். ஆனால் இதை ‘Eve (ஆதாமின் ஜோடி) என்பதுடன் தொடர்புபடுத்தி ‘பெண்களுக்கே உரிய குணமான ஒட்டுக் கேட்பது’ என்பதை இது உணர்த்துவதாக சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இதன் பொருள் வேறு.
Eaves என்றால் சுவர்களுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கட்டைகளின் முனைப்பகுதி. மழை பெய்தால் இவற்றிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும் அல்லது வடிந்துகொண்டிருக்கும். Eavesdrop என்பது இப்படித் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கும் பகுதியைக் குறிக்கிறது. இந்தப் பகுதியில் (அதாவது வீட்டுக்கு வெளிப்பகுதி - ஆனால் வீட்டை ஒட்டிய பகுதி) நின்றுகொண்டு வீட்டுக்கு உள்ளே நடப்பதைக் கவனிப்பவர் மற்றும் ஒட்டுக்கேட்பவரை Eavesdropper என்றனர். இதிலிருந்து வந்ததுதான் Eavesdropping.
சிப்ஸ் * பஞ்சாங்கம் என்பதை எப்டிக் குறிப்பிடலாம்? Almanac * அரசு ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் எது? Archive * Avenue என்கிறார்களே. அப்படியென்றால் என்ன? இருபுறமும் மரங்களால் சூழப்பட்ட சாலை. |
தொடர்புக்கு : aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT