Published : 24 Oct 2017 12:24 PM
Last Updated : 24 Oct 2017 12:24 PM
தி
ரையுலகில் ஃபேஷன் டிசைனிங் என்பது மிக முக்கியமான துறை. காட்சிகளுக்குத் தகுந்த மாதிரி உடைகள், பாடல் காட்சிகளுக்கு வண்ணமயமான உடைகள் என அனைத்துமே இத்துறை வல்லுநர்கள் மூலமாகவே இயக்குநர்களின் ஒப்புதலுடன் முடிவு செய்யப்படுகின்றன. ‘கண்களால் கைது செய்’ படத்தில் தொடங்கி ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’, ‘வில்லு’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பணியாற்றிய வாசுகி பாஸ்கரிடம் ஃபேஷன் டிசைனிங் குறித்துப் பேசியதிலிருந்து...
ஃபேஷன் டிசைனிங் துறையை எப்படித் தேர்வு செய்தீர்கள்?
ஆரம்பத்தில் கலை மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அப்படியே வடிவமைப்பின் மீதான ஈடுபாடாக மாறியது. உள்ளுணர்வை நம்பி, வடிவமைப்பு சார்ந்த ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இயக்குநர் பாரதிராஜா ‘கண்களால் கைது செய்’ படத்தில் பணிபுரியக் கேட்டார். அன்று முதல் திரையுலகப் பயணம் தொடங்கியது.
இந்தத் துறைக்குள் நுழைய என்ன படித்திருக்க வேண்டும்?
படைப்பாற்றல் சார்ந்த எந்தத் துறைக்குமே ஆர்வமும் கலை சார்ந்த இயல்பான உணர்வும் அவசியம். அதைத் தாண்டி, இந்தத் துறையில் ஃபேஷன் டிசைனிங் அல்லது காஸ்ட்யூம் டிசைனிங் சார்ந்த ஒரு தொழில்முறை பட்டப்படிப்பு தேவை. தற்போது தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் அதைப் படிக்க முடியும்.
எந்தக் கல்லூரியில் படித்தால் சிறப்பாக இருக்கும்?
தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமான நிஃப்ட் (NIFT) தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற அரசுக் கல்லூரி. சென்னை உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் நிஃப்ட் உள்ளது. அதேபோன்று தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படிக்கும்போது உங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் எளிதாகவும் கிடைக்கும். பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். படிக்கும் பாடங்கள், அதற்கான வசதிகளும் மேம்பட்டதாக இருக்கும். இது தவிர படங்கள், புத்தகங்களில் உள்ள புகைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் கற்றுக்கொள்ளலாம். ஆனால், வேலை என்று வரும்போது உங்களுடைய படிப்பைக் காட்டிலும் வண்ணம் குறித்த இயற்கையான அறிவுதான் தனித்துவத்தைத் தரும்.
இணையத்தில் நிறைய டூட்டோரியல்ஸ் உள்ளன. அவற்றின் மூலமாக ஃபேஷன் டிசைனிங்கை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியுமா?
வெறும் இணைய வழிக் கல்வி மட்டுமே போதாது. நடைமுறை அறிவும் அனுபவமும் முக்கியம். அப்போதுதான் துறையின் போக்கு என்ன என்று தெரியும். நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் அறிவு, துறையில் தாக்குப்பிடிக்க அத்தியாவசியம்.
தனியாகக் கற்றுக்கொண்டு இந்தத் துறைக்குள் நுழைவது சாத்தியமா?
சாத்தியம்தான். ஆனால், நீண்ட நாள் நிலைத்து நிற்க, தரமான படைப்பைத் தர, முறையான கல்வியும் அதைச் சார்ந்து நடைமுறை அனுபவமும் கண்டிப்பாக அவசியம். அதற்குப் பெரும்பாலான பட்டப் படிப்பின் இறுதிக்கட்டத்தில், மாணவர்கள், வடிவமைப்பாளர்களின் கீழ் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். பிறகு நமக்கென தனி பாணியில் வடிவமைக்க அந்த அனுபவம் கைகொடுக்கும். மக்களின் தேவை என்ன, ரசனை என்ன என்பது புரியும்.
ஃபேஷன் டிசைனிங்கில் தமிழ் சினிமா தவிர வேறு எங்கெல்லாம் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன?
ஃபேஷன் டிசைனிங் வேறு, காஸ்ட்யூம் டிசைனிங் வேறு. திரைப்படம், நாடகம் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் செய்வது காஸ்ட்யூம் டிசைனிங் மட்டுமே. ஒரு ஃபேஷன் டிசைனரின் கைவண்ணம் திரைப்படங்களில் வெளிப்படும்போது அவருக்கு எளிதாக அங்கீகாரம் கிடைக்கிறது. அது ஃபேஷன் டிசைனிங் என்ற துறையின் ஒரு கிளையே. எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையது. ஆனால், அதற்கான தேவைகளும் அது போய்ச் சேரும் இடமும் வேறு. விளம்பரங்கள் திரைப்படங்களிலிருந்து வேறுபட்டவை. அதனால் வேலைச் செய்யும் முறை இரண்டிலும் வேறுபடும்.
எல்லாவற்றிலுமே நிறைய வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் அனைவருக்கும் சினிமாவின் மீதான ஈர்ப்பு அதிகம். அதனால், இங்கு சினிமாவில்தான் வாய்ப்புகள் அதிகம் என்பேன். அதேநேரம் சமீபகாலமாக வடிவமைப்பு துறை விரிவடைந்துவருகிறது. பல புதிய வடிவமைப்பாளர்கள் அவர்களுக்கெனத் தனிக் கடைகளை ஆரம்பித்துள்ளனர். வளர்ச்சி நிதானமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது இங்குச் சற்று வேகமெடுத்துள்ளது.
பல ஃபேஷன் டிசைனர்கள் தற்போது தனியாக boutique வைத்துள்ளார்கள். இவ்வாறு தங்களுக்கான பிராண்ட் என்று உருவாக்கியிருப்பது நல்ல விஷயம் என நினைக்கிறீர்களா?
தனிப்பட்ட முறையில் ஒரு பிராண்ட் ஆரம்பிக்க வேண்டுமென்றால் அதற்கு அதிக முதலீடும் நேரமும் தேவை. ஃபேஷன் என்கிற கலை வடிவம் இப்போதுதான் வளர்ந்துவருகிறது. பெரிய சந்தை வாய்ப்புகளுக்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், தேசிய அளவில்கூட, அழகியல் உணர்வோடு, ஃபேஷன் என்கிற கலையை இணைக்கும் வடிவமைப்பாளர்கள் ஒரு சிலரே இருக்கின்றனர். இன்னும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம். அது ஒரு நாள் நடக்கும் என நம்புகிறேன். நடந்தால் நமது தனிப்பட்ட கலை உணர்வை மட்டுமல்ல, பாரம்பரிய ஆடை வடிவமைப்பு கலாசாரத்தையும் நலிவடையாமல் மீட்டெடுக்க முடியும். அதேபோல நமது பாரம்பரியத்திலிருந்து அந்நியப்பட்டுவிடாமலும் பார்த்துக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, நான் வேலைச் செய்யும் படங்களில், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு கதாபாத்திரத்துக்காவது காதி உடையைத் தருவேன். இது என்னால் முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT