Published : 17 Oct 2017 10:01 AM
Last Updated : 17 Oct 2017 10:01 AM
ச
மீபமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து பூமியைக் குளிர்வித்திருக்கிறது. தீபாவளி போனஸும் கிடைத்து, ‘மெர்சல்’ படத்துக்கு ‘ஃபர்ஸ்ட் ஷோ’ டிக்கெட்டும் கிடைத்துவிட்டால், விஜய் ரசிகர்களின் மனமும் குளிர்ந்துவிடும்.
‘சரி… அதுக்கென்ன இப்போது? விஷயத்தைச் சொல்லுய்யா’ என்கிறீர்களா? இதோ வர்றேன். ஒருவேளை, டிக்கெட் கிடைத்து, மழை கடுமையாகப் பெய்து, படத்துக்குப் போக முடியாமல் போகும் நிலை வந்தால்… அந்தத் தீபாவளி, ‘தீராத வலி’ ஆகிவிடும் இல்லையா?
அதற்குப் பதிலாக, ஒருவேளை அன்று அந்தப் படத்துக்குப் போக முடியாவிட்டாலும், அதே டிக்கெட்டை வைத்துக்கொண்டு இன்னொரு நாள் அதே படத்துக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படியிருக்கும்?
இந்த நிலை தமிழகத்தில் எப்போது வரும் என்று தெரியாது. ஆனால், இப்படி ஒரு வழக்கம் அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது. அன்றைய காலத்தில், மழைக் காலங்களில் பேஸ்பால் போட்டிகள் நடத்தப்பட்டால், கூட்டம் குறைவாகவே வரும். காரணம், மழை பெய்துவிடுமோ என்ற பயம்தான்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு மார்க்கெட்டிங் நிறுவனம், மழைக் காலங்களின்போதும் கூட்டத்தை அதிகரிக்க ஒரு உத்தியைக் கையாண்டது. அது, ‘ரெயின் செக்’ அல்லது ‘ரெயின் டிக்கெட்’. அதாவது, மழைக் காலத்தில் நடைபெறும் பேஸ்பால் போட்டிக்கு ஒருவர் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்து விளையாட்டை ரசித்துக்கொண்டிருக்கும்போது, பாதியில் மழை பெய்துவிட்டால், அவர் உடனே கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிடலாம். அதே டிக்கெட்டை மீண்டும் பயன்படுத்தி இன்னொரு நாள், வேறொரு போட்டியைப் பார்க்கலாம். இதில் இரண்டு லாபங்கள். ஒன்று, நிறுவனம், காசைத் திருப்பித் தரத் தேவையில்லை. இன்னொன்று, ரசிகர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கத் தேவையில்லை.
காலப்போக்கில், ‘ரெயின் செக்’ என்ற தனி டிக்கெட் முறையே வந்துவிட்டது. கோடைக் காலமானாலும் சரி, மழைக் காலமானலும் சரி, போட்டி போர் அடித்தால், எழுந்து சென்றுவிடுவார்கள். மீண்டும் இன்னொரு நாள், வேறொரு சூப்பரான போட்டியைப் பார்க்க அதே டிக்கெட்டைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
இந்த வரலாற்றிலிருந்துதான் ஆங்கிலத்துக்கு ‘Taking a rain check’ என்றொரு சொற்றொடர் கிடைத்தது. அதாவது, ஒருவர் உங்களை ஒரு நிகழ்ச்சிக்கோ விருந்துக்கோ இடத்துக்கோ அழைக்கிறார் என்றால், உங்களால் அந்த நேரத்தில் போக முடியாது. ஆனால், இன்னொரு நேரம் வருகிறேன் என்று சொல்லிவைப்பீர்கள். இதை வெளிப்படுத்தத்தான் மேற்கண்ட சொற்றொடர் பயன்படுகிறது.
நல்ல மழைக் காலம்...உங்கள் காதலர் / காதலி காபி ஷாப்புக்குக் கூப்பிடுகிறார். ‘மழை வருகிறதா’ என்று பார்த்துவிட்டு, மழை இல்லையென்றால் அவருடன் செல்லுங்கள். அடை மழையாக இருந்தால், மேற்கண்ட சொற்றொடரைச் சொல்லுங்கள். உங்கள் ஆங்கிலப் புலமையைக் கண்டு, அவர் உங்களை உச்சி முகர்வார். அப்புறமென்ன, ‘ஸிங் இன் தி ரெயின்’ தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT