Published : 26 Sep 2017 11:22 AM
Last Updated : 26 Sep 2017 11:22 AM
தொ
ழில் முனைவோரின் நிதி நிர்வாகம் பற்றி முன்பே எழுதியிருந்தேன். ஒரு நிறுவனம் வளர அதன் முதலாளியின் நிர்வாகத் திறன் மட்டுமல்ல, ஒழுக்கமும் மிக அவசியம். ஒழுக்கமின்மை என்றால் மோசமான ஆளுமை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். பணத்தைக் கையாள்வதில் உள்ள கட்டுப்பாடு என்று மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
பல சிறுமுதலாளிகளுக்கு அன்றாட வியாபாரம் நடத்துவதில் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் கடன் வாங்குவதும், அதைச் சிறுகச் சிறுக கட்டுவதும், பின்பு வாங்குவதும் இயல்பு. எப்படியாவது பணம் வேண்டும். எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை விட உடனே வேண்டும் என்கிற சூழ்நிலை. இது அதிக வட்டிக்கு வாங்க வைப்பது மட்டுமல்ல, வீட்டு நிதி நிர்வாகத்தையும் வியாபார நிதி நிர்வாகத்தையும் குழப்பிக்கொள்ள வைக்கும்.
அறிவும் அனுபவமும் இருந்தும்...
“நான் அணிந்ததை விட அடகில் இருந்ததில்தான் அதிகம். கல்யாணமாகி 20 வருடங்களில் என் நகைகள் பத்து முறை கையில் இருந்திருந்தால் அதிகம்” என்றார் என்னிடம் நிர்வாக ஆலோசனை கேட்டுவந்த பெண்மணி. உணவுத் தயாரிப்பு தொழிலில் மிகுந்த சமயோசித அறிவும் அனுபவமும் மிக்க அவர் தொடர்ந்து நஷ்டப்பட்டுவருகிறார். இருந்தாலும் தொழிலை நடத்திவருகிறார், ஒரு வைராக்கியத்துடன். ஒவ்வொரு தொழில் தேவைக்கும் ஒவ்வொரு நகையை அடகு வைத்தோ விற்றோதான் சமாளிக்கிறார். ஒரு பெரிய இக்கட்டில் நிலத்தை விற்றுப் பாதிக் கடனை அடைத்தார். அவர் மட்டுமின்றி அவர் கணவர், இரண்டு மகன்கள் என எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் வியாபாரத்தில் ஈடுபடுத்துகிறார். “அவர்களுக்குச் சம்பளம்?” என்று கேட்டேன். “வெளியில ஆள் எடுத்தா சம்பளம் கொடுக்கணும்னுதான் இவங்களையே வேலை வாங்கறேன்!” என்றார். “தவிர, சம்பளம் போடற அளவுக்கு ஏது சார் வருமானம்?” என்று பதில் கேள்வி கேட்டார்.
இந்த இருபது வருடங்களில் அவர் சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம். நகைகள், நிலம் மட்டுமல்ல, தன் குடும்ப உறவுகளின் உழைப்பு, அனைவரின் மன அமைதி என அடுக்கிக் கொண்டேபோகலாம். இத்தனையையும் செய்யக் காரணம் ஒரே நம்பிக்கைதான். என்றாவது தொழில் முன்னேறினால் அனைத்துக் கஷ்டங்களும் தீரும்.
பாதி உரிமை போனால் பரவாயில்லையா?
இப்படி ஒரு தொழிலை நடத்தி நஷ்டம் பார்ப்பதை விட மூடிவிட்டு, அவரவர் வேறு எங்காவது உழைப்பை முதலீடு செய்தால் சம்பளமாவது வருமே? “முடியாது. மூடுவது கூடச் சிரமம் தான்” என்று காரணங்களை அடுக்கினார். “இதை மூட எனக்கு நிறைய பணம் வேண்டும். நடத்துவதை விட மூடுவது சிரமம்” என்று சொல்வோர் பலரைப் பார்த்திருக்கிறேன்.
நஷ்டம் வந்தால்தான் இந்தப் பிரச்சினை என்றில்லை. லாபமாகத் தொழில் செய்பவர்களும் இந்தச் சுழலில் மாட்டிக்கொள்ளலாம். மளிகை கடைகள் நடத்தும் ஒருவர் என்னிடம் தன் தொழிலுக்கு நிதி தரக்கூடிய பங்குதாரர் ஒருவர் வேண்டும் என்று வந்தார். வருமானம், லாபம், கடன் என அனைத்துமே விஸ்வரூப வளர்ச்சி காண, சமநிலை அடைய வெளியிலிருந்து பங்குதாரர் வேண்டும் என்றார். தொழிலில் பாதியை எழுதித் தரத் தயாராக இருக்கிறார். தொழிலில் கவனம் செலுத்தக் கடன்களை அடைக்க வேண்டும். குடும்பம் நிம்மதி அடையும். அதனால் பாதி உரிமை போனால் பரவாயில்லை என்றார்.
ஒரு முறை மட்டும் தானா?
யோசித்துப் பார்த்தால் சொந்தக் காசு போட்டுத் தொழில் தொடங்கும் அனைவருக்கும் இந்த நிலை வரலாம். யாரையும் குற்றம் சொல்ல தேவையில்லை. தொழில் நடத்தத் தேவைப்படும் அன்றாட நிதிநிலை எதிர்பாராமல் உயரலாம். தொழில் நெருக்கடிகள் வரலாம். பெரிய தொகை ஒன்று வெளியே மாட்டிக்கொண்டு இருக்கலாம். அந்த நேரத்தில் அதைத் தற்காலிகப் பணப் பற்றாக்குறையாக பார்ப்பதுதான் மனித மனம். உடனே வீட்டில் வந்து பார்த்தால் மனைவியின் நகைகள் தெரியும். வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைக்கத் தோன்றும். இரண்டாம் வாகனத்தை விற்கத் தோன்றும். அல்லது அதிக வட்டிக்குக் கடன் வாங்கி நிலைமையை சமாளிக்க நினைப்பது இயல்புதான். இதற்கு உங்கள் உள்மனம் சொல்லும் காரணம்; “இது தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடி. இந்த ஒரு முறை மட்டும் தான் இதைச் செய்யப் போகிறேன். நிலைமை சீரானால் எல்லாம் சரியாகும்!”
இந்த எண்ணம்தான் ஆபத்தானது. இது ஒரு முறை மட்டுமே ஏற்படக்கூடியது அல்ல. தொடர்ந்து ஏற்படலாம். தற்காலிகப் பண நெருக்கடி அல்ல இது. இது தொழில்ச் சூழல். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வங்கி போன்ற நிறுவனங்களின் உதவி பெற நல்லுறவை ஆரம்பத்திலிருந்தே உருவாக்க வேண்டும். இந்த நிதி தேவை தொடர்ந்து இருக்கும் என்றால் தொடக்கத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும்போதே பங்குதாரரைக் கொண்டுவருவது புத்திசாலித்தனம். நாமே முதலாளியாய் இருந்து அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திக்கு மீறி இழுத்து விட்டுக்கொள்ளுதல் இங்கே சகஜம்தான்.
நிதி ஒழுக்கமின்மை வேண்டாம்
நான் சொல்ல வந்த ஒழுக்கம் எதுவென்றால் எது வந்தாலும் குடும்ப வளத்தில் கை வைக்கக் கூடாது என்பதுதான். அதே போல லாபம் கொழிக்கையில் வியாபாரப் பணத்திலிருந்து குடும்பச் செலவிற்குத் தாராளமாக எடுத்துக் கொட்டமடிப்பதும் அதே விளைவைதான் தரும்.
ஒரு ஆர்டர் வந்து விட்டது என்று ஆடிக் காரை வாங்கி நிறுத்துவதும், தொழில் படுத்தால் வீட்டை விற்பதும் நிதி ஒழுக்கமின்மையின் சிகர உதாரணங்கள். நாராயணமூர்த்தியும் அவர் நண்பர்களும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை வளர்த்த கதையைப் படியுங்கள். மிடில் கிளாஸ் வாழ்க்கையைதான் குடும்பத்திற்குத் தேர்ந்தெடுத்தார்கள். இன்று அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆளுக்கு ஆயிரம் கோடிகள் கிடைக்க இந்த ஒழுக்கமும் காரணம். வியாபாரக் கணக்கும் வீட்டுக்கணக்கும் தனித்தனியாக இயங்குவதுதான் நல்ல நிதி ஒழுக்கம்.
வாரன் பஃபே பங்குச் சந்தைக்குச் சொல்வது, என்னைப் பொறுத்தவரை, எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும்.
“தேக்கத்தில் பயம் கூடாது. வளர்கையில் பேராசை கூடாது!”
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT