Last Updated : 20 Sep, 2017 05:19 PM

 

Published : 20 Sep 2017 05:19 PM
Last Updated : 20 Sep 2017 05:19 PM

சேதி தெரியுமா? - உலகின் ஹை-டெக் நகரங்களில் பெங்களூரு!

உலகின் முதல் 25 உயர்-தொழில்நுட்ப நகரங்களில் 19வது இடத்தைப் பிடித்திருக்கிறது பெங்களூரு. புதுமையான நகரங்களைப் பற்றி ஆய்வு செய்யும் ‘2thinknow’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்தியாவிலிருந்து பெங்களூரு நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 49வது இடத்திலிருந்த பெங்களூரு, இந்த ஆண்டு பெர்லின், ஹாங் காங் உள்ளிட்ட நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி 19வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறையின் முதலாளிகள், ஸ்மார்-போன் பயன்பாடு உள்ளிட்ட பத்து அம்சங்களை வைத்து உலகின் 85 நகரங்களைப் பட்டியிலிட்டிருக்கிறது இந்நிறுவனம். ‘சிலிகான் வேலி’ அமைந்திருக்கும் சான் ஃபிரான்சிஸ்கோ’ நகரம் முதலிடத்திலும் நியு யார்க் இரண்டாம் இடத்திலும், லண்டன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இதுபற்றி செப்டம்பர் 12-ம் தேதி பேசிய தொழில், உள்கட்டமைப்பு துறைக்கான மத்திய இணை அமைச்சர் ஆர்.வி. தேஷ்பாண்டே, “1997-ம் ஆண்டு, தகவல் தொழில்நுட்பத்தைப் பற்றி யாரும் யோசிக்காதபோது, கர்நாடகாவில் முதல் ‘ஐடி’ கொள்கை கொண்டுவரப்பட்டது. அதுதான் இன்றைய பெங்களூரு அடைந்திருக்கும் வளர்ச்சிக்குக் காரணம்” என்று சொல்லியிருக்கிறார்.

 

மனித மூலதன குறியீடு: இந்தியாவுக்கு 103வது இடம்!

உலகளாவிய மனித மூலதன குறியீட்டில் இந்தியா 103 வது இடத்தில் இருக்கிறது. உலக பொருளாதார அமைப்பு(WEF) வெளியிட்டுள்ள உலகளாவிய மனித மூலதன குறியீட்டில் நார்வே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் மற்ற நாடுகளைவிட இந்தியா மனித மூலதனத்தில் பின்தங்கியிருப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. 130 நாடுகள் கலந்துகொண்ட கணக்கெடுப்பில், தெற்காசிய நாடுகளில் இலங்கை, நேபாளத்தைவிட இந்தியா பின்தங்கியிருக்கிறது. பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யா 16வது இடத்திலும், சீனா 34வது இடத்திலும், பிரேசில் 77வது இடத்திலும் தென் ஆப்ரிக்கா 87வது இடத்திலும் இருக்கின்றன.

 

புல்லட் ரயிலுக்கு அடிக்கல்

மும்பை-அஹமதாபாத் ‘புல்லட்’ ரயில் திட்டத்துக்கு இந்திய பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவும் செப்டம்பர் 14-ம் தேதி அஹமதாபாத்தில் அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் 88,000 கோடி கடனுதவி வழங்குகிறது. ஒரு மணி நேரத்தில் 350 கிலோமீட்டர் வேகத்தைக் கடக்கும் திறன்கொண்ட இந்த புல்லட் ரயில், மும்பை-அஹமதாபாத் இடையேயான 508 கிலோமீட்டர் தூரத்தை மூன்று மணிநேரத்தில் கடக்கும். இந்தியாவின் 75வது சுதந்திர தினமான 15 ஆகஸ்ட் 2022 அன்று இந்த புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

 

இந்தியா-பெலாரஸ் இடையே 10 ஒப்பந்தங்கள்

இந்தியா-பெலாரஸ் நாடுகளுக்கு இடையே எண்ணெய், எரிவாயு, கல்வி, விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்பம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான பத்து புரிந்துணர்வு ஒப்பதங்கள் செப்டம்பர் 12-ம் தேதி கையெழுத்தாகியிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், பெலாரஸ் அதிபர் ஏ.ஜி. லுகாஷென்கோ இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைக்குப்பிறகு, இந்தப் பத்து ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்களால் இருநாட்டு வர்த்தகமும் முதலீடும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

புளுட்டோ மலைகளுக்கு டென்சிங், ஹில்லாரி பெயர்

சர்வதேச வானியல் சங்கம், பனி குறுங்கோளான (dwarf planet) புளுட்டோவிலிருக்கும் இரண்டு மலைத் தொடர்களுக்கு டென்சிங் மோன்ட், ஹில்லாரி மோன்ட் என்ற பெயர்களைச் சூட்டியிருக்கிறது. எவரஸ்ட் சிகரத்தை முதன்முதலில் தொட்டவர்களான நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கே (1914-1986), நியுசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லாரி (1919-2008) என்ற இருவரின் பெயரும் புளுட்டோவிலிருக்கும் மலைகளுக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. இது போன்ற புளுட்டோவின் புவியியல் அம்சங்களுக்கு மொத்தம் பதினான்கு பெயர்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கிறது சர்வதேச வானியல் அங்கம். ஸ்புட்நிக் செயற்கைகோள், வாயேஜர், ஹயாபுசா போன்ற விண்கலன்களின் பெயர்களும் புளுட்டோவின் புவியியல் அம்சங்களுக்குப் பெயர்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.

 

வட கொரியா மீது ஐ. நா.வின் தடைகள்!

வட கொரியா, ஆறாவது சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனையை செப்டம்பர் 3-ம் தேதி நடத்தியிருந்தது. இதனால், வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செப்டம்பர் 11-ம் தேதி ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. ஐ.நா.வின் இந்த நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. வட கொரியாவின் ஆடை ஏற்றுமதி, கச்சா எண்ணெய் இறக்குமதியை ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைகள் கட்டுப்படுத்தும். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்திவரும் நிலையில், தற்போது ஐ.நா விதித்துள்ள தடைகளையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கிவருகிறது வடகொரியா.

 

இந்தியா-ஜப்பான இடையே 15 ஒப்பந்தங்கள்

இந்தியா-ஜப்பான் இடையே உள்நாட்டு விமான போக்குவரத்து, வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, கல்வி, திறன் மேம்பாடு, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான பதினைந்து புரிந்துணர்வு ஒப்பதங்கள் செப்டம்பர் 14-ம் தேதி கையெழுத்தாகியிருக்கின்றன. இந்தியா-ஜப்பானின் 12வது உச்சிமாநாடு குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இருநாட்டு பிரதமர்கள் நரேந்திர மோடியும் ஷின்ஷோ அபேவும் இருதரப்பு நாடுகளிடையே நிலவும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது பற்றி பரீசிலனை செய்திருக்கின்றனர்.

 

சருகு மானின் மறு அறிமுகம்

அழிவின் விளிம்பிலிருக்கும் சருகு மானை தெலுங்கானா மாநில வனத்துறை, நல்லமல்லாவில் அமைந்திருக்கும் அமராபாத் புலிகள் சரணாலயத்தில் மறு அறிமுகம் செய்திருக்கிறது. உயிரினப் பன்மையை மேம்படுத்தும்விதமாக, அழிவின் விளிம்பிலிருக்கும் சருகு மான் , அமராபாத் புலிகள் சரணாலயத்தின் பாதுகாப்பான பகுதியில் விடப்பட்டிருக்கிறது. அவை ஏற்கெனவே இந்தச் சரணாலயத்தில் வாழ்ந்திருந்ததால், இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, நாட்டின் எந்தச் சரணாலயத்திலும் எடுக்கப்படாத முயற்சியாக மொத்தம் எட்டு சருகு மான்கள் அமராபாத் புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x