Published : 12 Sep 2017 10:40 AM
Last Updated : 12 Sep 2017 10:40 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மூன்றாவது முறையாக செப்டம்பர் 3 அன்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 32 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டிருக்கின்றன. 9 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வர்த்தகத் துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்குப் பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்திக்குப் பிறகு, பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் அமைச்சர் இவர். ரயில்வே துறை அமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கவனித்துவந்த நிலக்கரி துறையும் இவர் வசமே தொடர்கிறது. ரயில்வே துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துவந்த சுரேஷ் பிரபுக்கு வர்த்தகத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதின் கட்காரிக்கு நீர்வளம், கங்கை நதி தூய்மையாக்கும் துறையும் போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹர்தீப் புரி, ராஜ் குமார் சிங், கே.ஜி அல்போன்ஸ், கஜேந்திர சிங் ஷெகாவத், சத்ய பால் சிங், விரேந்திர குமார், அஸ்வினி குமார் சவுபே, ஷிவ் பிரதாப் சுக்லா, அனந்த் குமார் ஹெக்டே உள்ளிட்ட 9 புதிய அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள். இதனால், அமைச்சர்களின் எண்ணிக்கை 73-லிருந்து 76-ஆக அதிகரித்திருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற்றிருக்கிறது.
ஒன்பதாவது ‘பிரிக்ஸ்’ மாநாடு
ஒன்பதாவது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் துறைமுக நகரான ஷியாமென் நகரில் செப்டம்பர் 3-ம் தேதியிலிருந்து 6-ம் தேதிவரை நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் சார்பில் இந்த உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த ஆண்டு, கோவாவில் நடைபெற்ற இந்த மாநாடு, இந்த ஆண்டு சீனாவில் நடைபெற்றிருக்கிறது. இந்த ஆண்டு மாநாட்டில் பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில், பொருளாதாரம், வர்த்தகம், சுங்கம், புத்தாக்கம், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு தொடர்பான நான்கு ஆவணங்கள் ஐந்து நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாயின. அத்துடன், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் இறுதியில், ‘ஷியாமென் பிரகடனத்தை’ ஐந்து நாடுகளின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரிக்ஸ் அமைப்பு, 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக மக்கள்தொகையில் 42 சதவீதம் பேர் பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தியா -மியான்மர் 11 ஒப்பந்தங்கள்
இந்தியா -மியான்மர் இடையே கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செப்டம்பர் 6-ம் தேதி கையெழுத்தாகின. மியான்மருக்கு மூன்று நாள் அரசுமுறை பயணமாகச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அரசு ஆலோசகர் ஆங்சான் சூகி இடையே இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. மியான்மர் தலைநகர் நய் பியி டாவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு, 2020-ம் ஆண்டுவரை கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வது, இரு நாட்டு தேர்தல் ஆணையங்கள் இடையே தேர்தல் பணிகளுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இருநாட்டு பத்திரிகையாளர் கவுன்சில்களிடையே ஒத்துழைப்பு உள்ளிட்ட 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப்
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் வழித்தடத்தை உருவாக்குவதற்கு ஆந்திர பிரதேச அரசு திட்டமிட்டிருக்கிறது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ‘ஹைப்பர்லூப் டிரஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜிஸ்’ (HTT) என்ற நிறுவனத்துடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செப்டம்பர் 7-ம் தேதி கையெழுத்திட்டிருக்கிறது அம்மாநில அரசு. இந்தத் திட்டம் ஆந்திர பிரதேத்தின் இரண்டு முக்கிய நகரங்களான விஜயவாடாவையும், அமராவதியையும் ஹைப்பர்லூப் வழித்தடத்தின் மூலம் இணைக்கவிருக்கிறது. இந்த ஹைப்பர்லூப் வழித்தடம் அமைக்கப்பட்டுவிட்டால், இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையேயான 35 கிலோமீட்டர் தூரத்தை 5 நிமிடங்களில் கடந்துவிடலாம்.
மாநிலத்தின் போக்குவரத்து வளர்ச்சிக்கு இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து பெரிதும் உதவுக்கூடியது என்று தெரிவித்திருக்கிறது அம்மாநில அரசு. நீண்ட தூர பயணத்தைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்தை முதற்கட்டமாகக் குறுகிய தூரத்தைக் கடப்பதற்குப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஆந்திர பிரதேசம். காப்சியூல், பாட் போன்று ஸ்டீல் டியூப்களில் வடிவமைக்கப்படும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து ஓட்நர் இல்லாமல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கமுடியும்.
இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய நகர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் முதல் இந்திய நகரமாகியிருக்கிறது அஹமதாபாத். இதற்கான சான்றிதழை யுனெஸ்கோவின் பொது இயக்குநர் ஐரினா போக்கோவா செப்டம்பர் 6-ம் தேதி, குஜராத் முதல்வர் விஜய் ருபானியிடம் வழங்கினார். கடந்த ஜூலை மாதம் போலாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் அஹமதாபாத் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழைத் தற்போது குஜராத் அரசாங்கத்திடம் ஒப்படைத்திருக்கிறது யுனெஸ்கோ.
இதனால், ஆசியாவின் பாரம்பரிய நகரங்களில், மூன்றாவது நகரமாக அஹமதாபாத்தும் இடம்பெற்றிருக்கிறது. நேபாளத்தின் பக்தபூர், இலங்கையின் காலி நகரங்களைத் தொடர்ந்து அஹமதாபாத்துக்கும் யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இந்தியாவில் பதினைந்தாவது நூற்றாண்டில் சுல்தான் அஹமது ஷாவால் சபர்மதி ஆற்றின் கிழக்கு கரையில் இந்நகரம் நிர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் 28 வரலாற்று சின்னங்கள் அஹமதாபாத்தில் அமைந்திருக்கின்றன.
‘டிராப்பிஸ்ட் -1’ கிரகங்களில் தண்ணீர்
‘டிராப்பிஸ்ட் -1’(TRAPPIST - 1) என்ற ‘அல்ட்ராகூல்’ குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் பூமியைப் போன்ற அளவிலிருக்கும் கிரகங்கள் தண்ணீரையும் வாழும் தகுதியையும் கொண்டிருப்பதாக சர்வதேச வானியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நாற்பது ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கிரகங்களை நாசா, இஎஸ்ஏவைத் சேர்ந்த சர்வதேச வானியலாளர்கள் குழு ஹப்பிள் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆய்வுமேற்கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வில், இந்த ‘டிராப்பிஸ்ட் -1’ குள்ள நட்சத்திரத்தைச் சுற்றிவரும் ஏழு கிரகங்களிலும் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக வானியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அத்துடன், இதில் மூன்று கிரகங்களும் உயர்கள் வாழ்வதற்கான தகுதியுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி, வானியலாளர்கள் பூமியின் அளவிலிருக்கும் ஏழு கிரகங்கள் ‘டிராப்பிஸ்ட் -1’குள்ள நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகியிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT