Published : 15 Dec 2013 10:41 AM
Last Updated : 15 Dec 2013 10:41 AM

எம்.பி.பி.எஸ். மட்டுமல்ல மருத்துவப் படிப்பு

மருத்துவப் படிப்பு என்றாலே எம்.பி.பி.எஸ். மற்றும் அதன் மேற்படிப்புகள் மட்டுமே என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், டைரக்டரேட் ஆஃப் இந்தியன் மெடிசன் அண்ட் ஓமியோபதி மூலம் கீழ்க்கண்ட இந்திய மருத்துவப் பட்டப்படிப்புகளையும் (ஐந்தரை ஆண்டுகள்) படிக்கலாம்.

* பி.எஸ்.எம்.எஸ். (பேச்சுலர் ஆஃப் சித்தா மெடிசன் அண்ட் சர்ஜரி) தமிழகத்தில் இரு அரசுக் கல்லூரிகள் உள்பட ஐந்து கல்லூரிகளில் இதைப் படிக்கலாம். மொத்தம் 240 இடங்கள். இப்படிப்பில் சேர தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் இப்படிப்பு கற்பிக்கப்படுகிறது.

* பி.ஏ.எம்.எஸ். (பேச்சுலர் ஆஃப் ஆயுர்வேதா மெடிசன் அண்ட் சர்ஜரி) தமிழகத்தில் ஐந்து தனியார் கல்லூரிகளில் இப்படிப்பு உள்ளது. மொத்தம் 140 இடங்கள். இது படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டாலும், பாடங்களில் சமஸ்கிருத வார்த்தைகள் நிறைய இருப்பதால் அந்த மொழி அறிவு அவசியமாகிறது.

* பி.எச்.எம்.எஸ். (பேச்சுலர் ஆஃப் ஓமியோபதி மெடிசன் அண்ட் சர்ஜரி) தமிழகத்தில் ஒரு அரசுக் கல்லூரி உள்பட ஒன்பது கல்லூரிகளில் இப்படிப்பு உள்ளது. மொத்தம் 450 இடங்கள். ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.

* பி.என்.ஒய்.எஸ். (பேச்சுலர் ஆஃப் நேச்சுரோபதி அண்ட் யோகி சயின்ஸ்) ஒரு அரசுக் கல்லூரி உள்பட நான்கு கல்லூரிகளில் இப்படிப்பு உள்ளது. மொத்தம் 150 இடங்கள். ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது.

* பி.யு.எம்.எஸ். (பேச்சுலர் ஆஃப் யுனானி மெடிசன் அண்ட் சர்ஜரி) இது உருது மொழிவழிக் கல்வி. சென்னையில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் மட்டுமே இது உள்ளது. மொத்தம் 26 இடங்கள்.

சுகாதாரத் துறை மூலம் மேற்கண்ட படிப்புகளுக்கு கவுன்சலிங் நடத்தப்படுகிறது. அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம்தான். மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஆகியவற்றுக்கு கவுன்சலிங் முடிந்த பின்பு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இப்படிப்புகளுக்கு கவுன்சலிங் நடக்கும்.

இந்திய மருத்துவ முறை மீதான வரவேற்பு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இப்படிப்புகளுக்கான மொத்த இடங்களும் நிரம்பிவிடுகின்றன.

இதற்கான கவுன்சலிங்கை அரசு முன்கூட்டியே நடத்தினால் இப்படிப்புகளை படிக்க மேலும் பலர் முன்வருவர். இந்திய மருத்துவத் துறை மேலும் வளர்ச்சி அடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x