Last Updated : 29 Nov, 2016 11:18 AM

 

Published : 29 Nov 2016 11:18 AM
Last Updated : 29 Nov 2016 11:18 AM

எவ்வளவு பெருசு! - ஒரே ஒரு பிரம்மாண்டம்!

பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று பலருக்கும் தெரியாவிட்டாலும் அது ரொம்பவும் பெரியது என்பது எல்லோருக்கும் தெரியும்.

கையை நீட்டிக்கொண்டு விரல் நுனியின் மேலே ஒரு மணல் துகளை வைத்துக்கொண்டு, அம்பெய்வது போல் ஒரு கண்ணை மூடிக்கொண்டு அந்த மணல் துகளையும் அதற்கு நேரெதிராக உள்ள வானப் பகுதியையும் பாருங்கள். வானப் பரப்பில் அந்த மணல் துகள் மறைக்கும் பகுதியில் பத்தாயிரம் விண்மீன் மண்டலங்கள் (galaxy)இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். இப்படி ஒரு மணல் துகள் அளவு தெரியும் வானத்தில் பத்தாயிரம் விண்மீன் மண்டலங்கள் என்றால் வானம் முழுவதும் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

எத்தனை கோடி விண்மீன்?

அப்படி ஒரு கணக்கைப் போட்டுப் பார்த்து, பிரபஞ்சத்தில் எவ்வளவு விண்மீன் மண்டலங்கள் இருக்கும், எவ்வளவு விண்மீன்கள் இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள். பத்து லட்சம் கோடி விண்மீன் மண்டலங்களும் (10,00,000,00,00,000) 10 கோடி கோடி கோடி விண்மீன்களும் (1,000,00,00,000,00,00,000,00,00,000) இருப்பதாக உத்தேசமான கணிப்புக்கு வந்திருக்கிறார்கள். உலகில் உள்ள மணல் துகள்களின் எண்ணிக்கை விண்மீன்களின் எண்ணிக்கைக்கு அருகே வர முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பூமியை ஒரு மணல் துகள் அளவுக்குக் கற்பனை செய்துகொண்டோமென்றால் நெப்டியூன் வரையிலான சூரியக் குடும்பம் ஒரு தேவாலயம் அளவுக்கு இருக்கும். சூரியக் குடும்பத்தை ஒரு மணல் துகள் அளவுக்குக் கற்பனை செய்துகொண்டால் நமது பால்வீதி மண்டலம் ஒரு தேவாலயத்தை விட ஆயிரமாயிரம் மடங்கு பெரிதாக இருக்கும். இப்போது பால்வீதி மண்டலத்தை ஒரு மணல் துகள் அளவுக்குக் கற்பனை செய்துகொண்டோம் என்றால் புலனாகக்கூடியவரையிலான பிரபஞ்சம் என்பது ஒரு தேவாலயத்தை விடப் பெரிதாக இருக்கும். இதுபோன்ற சுவாரசியமான ஒப்புமைகள் ‘தி கார்டியன்’ தயாரித்த அறிவியல் காணொலியில் காணக் கிடைக்கின்றன (சுட்டி: https://goo.gl/hO34nM).

பிரபஞ்சம் அணுக்களால் நிறைந்ததா?

பிரபஞ்சம் தோன்றி 1,380 கோடி ஆண்டுகள் ஆகின்றன. அப்படியென்றால் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பெருவெடிப்பின் போது வெளிப்பட்ட ஒளி 1,380 கோடி ஆண்டுகள் பயணித்திருக்கிறது. நமது பால்வீதியின் விட்டம் ஒரு லட்சம் ஒளியாண்டுகளிலிருந்து ஒன்றரை லட்சம் ஒளியாண்டுகள் வரை இருக்கலாம் என்று உத்தேசித்திருக்கிறார்கள். அதாவது பால்வெளியின் ஒரு துருவத்திலிருந்து புறப்படும் ஒளி இன்னொரு துருவத்தைச் சென்றடைய ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் ஆண்டுகள் ஆகும்.

(ஒரு நினைவூட்டல்: ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தொலைவுக்கு ஒளியாண்டு என்று பெயர். 9,46,073,04,72,580.8 கி.மீ.தான் ஒரு ஒளியாண்டு.) பிரபஞ்சத்தின் விட்டமோ 9,300 கோடி ஒளியாண்டுகள். பிரபஞ்சம் இப்போது இருப்பதுபோல் விரிவடையாமல் அப்படியே நின்றுவிடுவதாகக் கற்பனை செய்துகொள்வோம். இந்த நொடியில் பிரபஞ்சத்தின் ஒரு முனையிலிருந்து ஒளிக்கதிர் ஒன்று புறப்பட்டால் அது பிரபஞ்சத்தின் இன்னொரு முனையைச் சென்றடைவதற்கு 9,300 கோடி ஆண்டுகள் ஆகும்.

பிரபஞ்சம் இவ்வளவு பெரியதென்றால் அதில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? அதையும் உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். 10 78 அணுக்களிலிருந்து 10 82 அணுக்கள் வரைக்கும் இருக்கலாம் என்பது கணக்கு. ஒன்று என்ற எண்ணுக்குப் பிறகு கிட்டத்தட்ட 80 பூஜ்ஜியங்களைப் போட்டுப் பாருங்கள். அவ்வளவு அணுக்கள். அப்படியென்றால் பிரபஞ்சம் முழுவதும் அணுக்களால் நிரம்பியது என்றுதானே எண்ணத் தோன்றும் நமக்கு. உண்மை அதுவல்ல!

பிரபஞ்சத்தின் மொத்த நிறையில் அணுக்களின் நிறை வெறும் 4.5 சதவீதம்தான்! மீதமுள்ள 95 சதவீதத்தை ஆக்கிரமித்திருப்பது என்ன? கரும்பொருள் (Dark matter), கரும்சக்தி (Dark energy) என்று அழைக்கப்படும் விஷயங்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பெரும்பாலான நிறையை ஆக்கிரமித்திருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். அவற்றின் பெயரில் உள்ள ‘கரும்’ என்ற அடை ஏன் தெரியுமா? அவற்றை இதுவரை ஆதாரபூர்வமாகக் கண்டறியவோ நிறுவவோ இல்லை; அதனால்தான் ‘கரும்பொருள்’, ‘கரும்சக்தி’. பிரபஞ்சத்தின் மொத்த நிறையில் கரும் ஆற்றல் 71.4 சதவீதமும் கரும்பொருள் 24 சதவீதமும் ஆக்கிரமித்திருக்கின்றன. ஒரு கணக்கீட்டின்படி 4 கனமீட்டர்களுக்கு ஒரு நேர்மின்னணு (proton) என்ற விகிதத்தில்தான் பிரபஞ்சத்தில் அணுக்கள் வீற்றிருக்கின்றன.

10,00,000,00,00,000 விண்மீன் மண்டலங்கள், 1,000,00,00,000,00,00,000,00,00,000 விண்மீன்கள், 10 82 அணுக்கள், பிரபஞ்சத்தின் விட்டமோ 9,300 கோடி ஒளியாண்டு தூரம், 1,380 கோடி ஆண்டுகள் வயது என்று பிரபஞ்சம் தொடர்பான எண்கள், அளவீடுகள் என்று எல்லாமே நம்மைத் திகைக்க வைத்தாலும் இதைவிடவெல்லாம் திகைப்பூட்டும் விஷயம் ஒன்று இருக்கிறது.

இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து நிறையும் (கிட்டத்தட்ட) அதன் பிறப்பு நிகழ்வான பெருவெடிப்பின் போதே (Big bang) தோன்றிவிட்டது. ஏதும் கூடவோ குறையவோ இல்லை! ஒமர் கய்யாம் சொல்வதுபோல் ‘காலம் தொடங்கும் முன்னரே அளிக்கப்பட்டுவிட்டன தேவையான யாவுமே.’ எல்லா நிறையும் பிரபஞ்சத்தின் பிறப்பின்போதே உருவானது என்றால் பிரபஞ்சம் பிறக்கும்போது கண்ணுக்கு அடங்காத பிரம்மாண்டமான குழந்தையாக இருக்கும் என்றுதானே கற்பனை செய்துபார்ப்போம். அப்படியில்லை!

பிரபஞ்சத்தின் பிறப்போடுதான் இடம், பருப்பொருள், நிறை, விசைகள், காலம் எல்லாம் பிறந்தன. பிரபஞ்சத்தின் பிறப்புக்கு முந்தையை கணம் காலமோ, இடமோ எதுவுமே இல்லை. இன்மை நிலையில் திடீரென்று தோன்றியதுதான் பெருவெடிப்பு. பெருவெடிப்பு தோன்றியபோது, ஒரு நொடியைக் கோடிக்கணக்கான அளவு பங்கிட்டால் எவ்வளவு நுண்மையான கால அளவாக இருக்குமோ அந்தக் கால அளவுக்குப் பிறகுதான் இன்றைய அறிவியலால் எட்டிப் பார்க்க முடிந்திருக்கிறது.

அந்தச் சமயத்தில் மிக மிக நுண்மையான அளவுடையதாகத்தான் இருந்தது பிரபஞ்சம். ஒரு நிமிடத்துக்குள் பல கோடிக் கணக்கான மைல்கள் குறுக்களவு கொண்டதாகப் பிரபஞ்சம் விரிவடைந்தது. பிரபஞ்சத்தில் தற்போது தோன்றியிருப்பவற்றில் 98 சதவீதப் பருப்பொருள் (matter), பிரபஞ்சம் உருவான முதல் மூன்று நிமிடங்களுக்குள் தோன்றிவிட்டது.

நுண்மையில் பிரம்மாண்டம், பிரம்மாண்டத்தில் நுண்மை என்று நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது இந்தப் பிரபஞ்சம். அதன் பிரம்மாண்டத்தின் முன்பு நமது செயற்கைப் பிரம்மாண்டங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றுதானே தோன்றுகிறது! பிரபஞ்சத்தைத் தாண்டியும் பிரம்மாண்டம் என்று சொல்ல வேறெதுவும் இல்லாததால் இந்தக் குறுந்தொடர் நிறைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x